கூடங்குளம் அணுஉலை பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த சென்ற போராட்டக்குழுவினர் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் – சீமான் கண்டனம் (தமிழன் தொலைக்காட்சி செய்தி இணைப்பு)

31

கூடங்குளம் அணுஉலை பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அணுஉலை எதிர்ப்புப் போராட்டக்குழுவினர் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கூடங்குளம் அணுஉலை பிரச்சினை குறித்து நடுவண் குழுவுடன் போராட்டக்குழு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் போராட்டக்குழுவினர் ஆட்சியர் அலுவலகம் வந்தபோது அங்கிருந்த இந்து முன்னணி உள்ளிட்ட அணுஉலை ஆதரவாளர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் ஆத்திரம் அடைந்த போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தையை புறக்கணித்து விட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இடிந்தகரை உள்பட மீனவ கிராமங்களில் காட்டுத் தீ போல் பரவியதால் கூடங்குளம் அணுமின் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக சென்று முற்றுகை போராட்டமும் நடத்தினர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது.