முல்லைபெரியாறு உரிமை மீட்க நாம் தமிழர் நெடும்பயணம்-பொதுக்கூட்டம்

12
தமிழன் இல்லாத நாடில்லை என்பது மட்டுமல்ல, அவன் இழக்காத உரிமையும் இல்லை. பாலக்காடு,தேவிகுளம், திருவனந்தபுரம்,இடுக்கி,பீர்மேடு,வெங்காலூரு,காவிரி என நீண்ட பட்டியலில் முக்கியமானது முல்லை பெரியாறு. தமிழனுக்கு சொந்தமான நிலத்தில், அவனுடைய பணத்தில்,அவனது உழைப்பில் கட்டப்பட்ட அணை இன்று அவனின் வாழ்வாதாரத்திற்குப் பயன்படாமல் மலையாளிகளின் ஆதிக்கத்தில் சிக்கித் தவிக்கிறது. முல்லை பெரியாறு அணை விஷயத்தில் இதுவரை தமிழ்நாடு தனது பல உரிமைகளை இழந்திருக்கிறது.

கேரளத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தத் தீர்வும் கிட்டவில்லையென்று தான் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையிட்டது.உச்சநீதிமன்றமும் ஏழு பேர் கொண்ட வல்லுநர் குழுவினை அமைத்து அவர்களது அறிக்கையின் அடிப்படையில் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம் என்று தீர்ப்பளித்து விட்டது.ஆனால் தீர்ப்பளித்து நீண்ட காலமாகியும் அதனை அமல்படுத்துவதற்கு எதிராய் இதுவரை பல முட்டுக்கட்டைகளைப் போட்டு,அதற்கு எதிராய் செயல்பட்ட கேரள அரசு இப்பொழுது நில நடுக்கத்தால் அணை உடையும் அபாயம் இருப்பதாக திட்ட்மிட்டு நாடு முழுவதும் அனைத்து வழிகளிலும் விஷமப்பிரச்சாரத்தை முழுவீச்சில் தொடங்கியுள்ளது.காங்கிரசார்,கம்
யூனிஸ்டு என்று அனைவரும் வாயில் விஷமப்பிரச்சாரத்தைச் செய்து கொண்டு,கையில் கடப்பாறையையும் தூக்கிக் கொண்டு அணை உடைக்கச் செல்கின்றனர்.எதிர்ப்படும் தமிழர்களைத் தாக்கத் தொடங்கியுளனர்.இதனை தடுக்கத் துப்பில்லாத கேரள அரசும்,இங்கிருக்கும் காங்கிரஸ்,கம்யூனிஸ்டு கட்சிகளும் மீண்டும் பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு பங்கேற்க வேண்டும் என வெற்று அறிக்கைகளை தொடர்ச்சியாக விடுத்து வருகின்றனர்.
 
ஆனாலும் தமிழக விவசாயியோ இன்னும் சகிப்புத்தன்மையுடனும்,நெஞ்சில் ஈரத்துடனும் தனது நிலங்களில் விளையும் அரிசி முதல் அனைத்து விளை பொருட்களையும் இங்கு உற்பத்தியாகும் நெய்வேலி மின்சாரத்தையும் தமிழ்நாட்டில் இருந்து அனுப்புகிறான். தமிழ்நாட்டில் வாழும் 40 லட்சம் மலையாளிகளையும் உரிய பாதுகாப்போடும் வளத்தோடும் வாழ அனுமதித்து விட்டு அமைதியாய் இருக்கிறான்.தமிழனின் அடக்கப்பட்டுள்ள  அதிகபட்ச சகிப்புத் தன்மை தொடரும் என எப்பொழுதும் எதிர்பார்க்க முடியாது.

சட்டத்தின் வழி தீர்வினைக் கேரளம் விரும்பினால் உடனே அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்திவிட்டு அங்கு வாழும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.அதை விடுத்து அணையை உடைக்க ஆயுதம் தாங்கிச் செல்வதும்,தமிழர்களைத் தாக்கும் நிலையும் நீடித்தால் அதற்கு எதிர்விளைவு ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
 

முல்லைபெரியாரில் தமிழ்நாட்டுக்கு இருக்கும் உரிமைகளை நிலைநிறுத்தி
நாம் தமிழராய் இணைந்து நம் உரிமைகளுக்காக ஒன்றுசேர நாம் தமிழர் கட்சி சார்பில் முல்லைபெரியாறு நோக்கி நெடும்பயணம் செல்கிறோம். டிசம்பர் 17 அன்று பங்களாமேடுவில் தொடங்கும் இந்தப் பயணத்தை பெருந்தமிழர் அய்யா பழ.நெடுமாறன் தொடங்கி வைக்கிறார்.தொடர்ச்சியான மக்கள் சந்திப்புக்குப் பின் ,பல்வேறு ஊர்களைக் கடந்து அன்று மாலை 6 மணிக்கு சின்னமனூரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. டிசம்பர் 18 அன்று சின்னமனூரில் தொடங்கும் பயணம் கம்பம் வழியாக கூடலூரில் நிறைவு பெறுகிறது.அன்று மாலை 6 மணிக்கு கூடலூரில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் முல்லைபெரியாறு பாசன விவசாயிக்ள் சங்கத்தலைவர் கே.எம்.அப்பாஸ் மற்றும் தலைமை செயற்பொறியாளர் பெருந்தமிழர் கி.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.நாம் தமிழர் கட்சி நடத்தும்  முல்லை பெரியாறு உரிமை மீட்பு நெடும்பயணம் மற்றும் பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்து 
நாம் தமிழர் உரிமை மீட்பு போரை வெற்றிபெற செய்ய உரிமையுடன் அழைக்கிறோம்.