‘உச்சிதனை முகர்ந்தால்’-தமிழீழ மக்களின் பெருமூச்சை இத்திரைப்படம் புயலாக்கும் – காசி ஆனந்தன்.

14

‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படம் நச்சு இனவெறிச் சிங்கள ஆட்சியாளரை வெளிச்சத்தில் நிறுத்தி தோல் உரிக்கிறது.

 அடக்குமுறைச் சிங்கள இனவெறியர்களின் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளை மட்டுமல்ல- அக்கொடுமைகளின் மிகக்கொடிய விளைவுகளையும் இத்திரைப்படம் அலசுகிறது.

தென்தமிழ் ஈழமான மட்டக்களப்பில் பிறந்த புனிதவதி- சிங்கள படைவெறியர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டாள் என்பது உண்மைச் செய்தி. அனால் அவள் வாழ்க்கை பின்பு என்ன ஆகி இருக்கும் என்னும் கேள்வியை இயக்குனர் புகழேந்தி தங்கராசா திரைப்படம் ஆக்கித் தந்திருக்கிறாரே- இது சிங்கள இனவெறியர் கொடுமை அல்ல- அக்கொடுமையின் பொல்லா விளைவு. தேம்பித் தேம்பி நம்மை அழவைக்கும் திரை ஒவியம்.

‘Is Paris Burning’ (பாரீசு நகரம் எரிகிறது) என்னும் திரைப்படம் எப்படி இனவெறியன் இட்லரின் கொடிய முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியதோ- ‘Omar Muktar’ (உமர் முக்தார்) என்னும் திரைப்படம் எப்படிக் கொடுங்கோலன் முசோலினியின் முகமூடியைக் கிழித்து எரிந்ததோ- அப்படி- ‘உச்சிதனை முகர்ந்தால்’ என்னும் திரைப்படம் சிங்கள இனவெறியன் மகிந்த ராஜபக்சேவின் கொடிய கொலைவெறி முகத்தை உடைத்தெரிகிறது.

தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய முதல் திரைப்படத்தை (காற்றுக்கு என்ன வேலி) உருவாக்கியவ்ர் புகழேந்தி தங்கராசா. இப்போது அவர் உருவாக்கி தந்துள்ள ‘உச்சிதனை முகர்ந்தால்’ தொடர்நது தமிழீழ விடுதலைப் போரில் அவர் கொண்டுள்ள ஈடுபாட்டையே காட்டுகிறது.அவர் படைப்புகளான இந்த இரு திரைப்படங்களுக்கும் நிகராக தமிழ்நாட்டில் இதுவரை ஈழம் குறித்த திரைப்படங்கள் எதுவும் வெளிவரவில்லை என்பது பச்சை உண்மை.

படை மட்டுமல்ல- ஒரு படமும் தமிழீழத்திற்காக போராட முடியும் என்பதை இயக்குனர் புகழேந்தி தங்கராசா தன் திரைப் படைப்பினால் நிறுவியிருக்கிறார்.

‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்தின் ஒவ்வொரு கட்டமும் தமிழீழ விடுதலைக்கான உரத்த போர் முழக்கமே அன்றி வேறில்லை.

கடல்நீர் தமிழ்நாட்டையும் தமிழீழத்தையும் பிரிக்கலாம்- ஆனால், தமிழனின் கண்ணீர் இவ்விரு நாடுகளையும் எப்போதும் இணைக்கும் என்பதையும் ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படம் நமது கவனத்தை பதிக்கிறது.

கொடுமைக்கு இரையாகும் ஒரு பெண்ணாக அல்ல. கொடுமைக்கு இரையாகும் ஒரு ‘தேசிய இனமாக’ புனிதவதி இத்திரைப்படத்தில் வடிவம் கொள்கிறாள்.

 உலகெங்கும் வாழும்

தமிழீழ மக்கள் தங்கள் உரிமைப் போராட்ட உணர்வினை மேலும் கூர் தீட்டிக்கொள்ள ‘உச்சிதனை முகர்ந்தால்’ நிச்சயமாக உதவும்.

 தமிழீழ மக்களின் கண்ணீரை இத்திரைப்படம் நெருப்பாக்கும். தமிழீழ மக்களின் பெருமூச்சை இத்திரைப்படம் புயலாக்கும்.

தமிழருவி மணியன் இயல்பான-சூடான ‘திரை உரை’யிலும், இசையமைப்பாளர் இமானின் நெஞ்சைப் பிழியும் தமிழிசையிலும் ‘உச்சிதனை முகர்ந்தால்’ தனி மிடுக்குடன் தமிழுலகில் உலா வருகிறது.

ஈழவிடுதலையில் எப்போதும் தனி ஆர்வம் கொண்டுள்ள நடிப்பின் செல்வர் சத்யராஜ் இத்திரைப்படத்தில் ஈடிணையற்ற பங்களிப்பினை நல்கி உள்ளார்.சீமான், சங்சீதா, நாசர்,லட்சுமி போன்றோரின் மெய்சிலிர்க்க வைக்கும் நடிப்பை சீராட்டாமல் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

 நீக்கமற திரைப்படம் பார்த்த தலைவர் நெஞ்சிலும் நிறைந்திருக்கிறாள் புனிதவதியாக நீநிகா.

 உலக விருது பெறும் இத்திரைப்படம் என்று உறதியாக கூறலாம். புகழ் அனைத்தும் புகழேந்திக்கே.

காசி ஆனந்தன்.

சென்னை.

தமிழ்நாடு.

முந்தைய செய்திமுல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையல்ல, தமிழனின் உரிமைப் பிரச்சனை: நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திமூவரை தூக்கை ரத்து செய்யக்கோரி கருநாடக நாம் தமிழர் கட்சி நடத்திய உண்ணாவிரத செய்திகள்