தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பொருட்களை தடுப்போம்- சீமான்

129
நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை.
கேரள மக்கள் அனைவரும் முழுமூச்சில் மீண்டும் தமிழர்களுக்கு எதிராய் அவதூறையும் விஷமப் பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார்கள்.முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று இன்று இடுக்கி மாவட்டத்தில் முழு அடைப்பு நடத்தியிருக்கிறார்கள்.கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமரைச் சந்தித்து அணை குறித்து முறையிட்டிருக்கிறார்கள்.பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கேரள உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.மேலும் காந்தி சிலை முன்பு தர்ணாவில் இறங்கியுள்ளார்கள்.டெல்லியில் டேம் 999  என்னும் விஷமப் படத்தை பத்திரிக்கையாளர்கள் உட்பட அனைவருக்கும் திரையிட்டுக் காட்டியிருக்கிறார்கள். இதன் மூலம் கேரள அரசும் அங்குள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழர்களுக்கு எதிராய் மறைமுகப் போரில் இறங்கியுள்ளனர் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

எண்ணற்ற முறை,பல மட்டங்களில்,கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தமிழர்களுக்கு உரிய,நியாயமான தீர்வு கிட்டவில்லை என்ற நிலையில் வேறு வழியின்றித் தான், தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றம் சென்று முறையிடப்பட்டது.உச்சநீதிமன்றமும் ஏழு பேர் கொண்ட வல்லுநர் குழுவினை அமைத்து அவர்களது அறிக்கையின் அடிப்படையில் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம் என்று தீர்ப்பளித்து விட்டது.ஆனால் தீர்ப்பளித்து காலங்கள் பல கடந்தும் அதனை அமல்படுத்துவதற்கு எதிராய் இதுவரை பல முட்டுக்கட்டைகளைப் போட்டு,அதற்கு எதிராய் செயல்பட்ட கேரள அரசு இப்பொழுது நில நடுக்கத்தால் அணை உடையும் அபாயம் இருப்பதாகவும் அதனால் எண்ணற்ற மக்கள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் பல வழிகளில் புதிய விஷமப் பிரச்சாரத்தினை ஆரம்பித்துள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் முல்லை பெரியாறு அணைக்கு எந்தச் சேதமும் இல்லை என அணையை ஆராய்ந்த பின்பு மத்திய புவியியல் ஆராய்ச்சித்துறை இயக்குனர் ஜான் மேத்யூ தெரிவித்துள்ளார்.கடல் மட்டத்தில் இருந்து முல்லை பெரியாறு அணை 2 ஆயிரத்து 889 அடியில் இருக்கிறது.ஆனால் அணை உடைந்தால் அழிந்து போகும் என கேரளத்த்தினர் கூறும் குமுளிப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 100 அடியிலும்,வண்டிப்பெரியாறு 3 ஆயிரத்து 350 அடியிலும்,பாம்பனாறு 3 ஆயிரத்து 750 அடியிலும் இருக்கிறது.இது ஒன்றே போதும் மலையாளிகள் தண்ணீரில் வடிகட்டிய பொய்யை எவ்வாறு கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள் என்பதனை நிரூபிப்பதற்கு.

தென்மாவட்டத்தில் உள்ள தமிழர்கள் நலனில் எங்கோ இருந்து வந்த ஆங்கிலேயன் பென்னிக்குக்கிற்கு இருந்த அக்கறையில் துளியளவு கூட கூப்பிடு தூரத்தில் உள்ள கேரள மக்களுக்கும் அங்குள்ள அரசியல் கட்சிகளுக்கும் இல்லை.மாறாக வெறுப்பும் குரோதமும் மண்டிக் கிடக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து மின்சாரம்,மீன்,கறி,அரிசி,உப்பு
,புளி,மணல் என தொடர்ந்து சுரண்டிக் கொழுக்கின்றனர்.அங்கிருந்து கொழுத்தது போதாது என்று இங்கு வந்தும் சுரண்டுகின்றனர்.ஆனால் பதிலுக்கு தமிழக விவசாயிகளின் வாழ்விற்குத் தேவையான தண்ணீரைத் தர மறுக்கின்றனர்.தண்ணீரைத் தர மறுப்பவர்கள் தான் இங்குள்ள விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களினால் உயிர் வாழ்கின்றனர்.

சர்வ தேசியம் பேசும் கம்யூனிஸ்டுகள்ஆட்சி செய்தாலும் சரி,இந்திய தேசியம் பேசும் காங்கிரசுக்காரன் ஆட்சி செய்தாலும் சரி,இது தான் நிலை.கேரள மக்கள் தன்னை திராவிடன் என்றோ இந்தியன் என்றோ கருதுவதில்லை. மலையாளிகளாகக் கருதுகின்றனர்.

இதே நிலை நீடித்தால் அவர்களது கொட்டத்தை அடக்க இங்கிருந்து கேரளாவிற்குச் செல்லும் அனைத்துப் பொருட்களையும் தடுத்து நிறுத்தவும்,அணை இருக்கும் பகுதிகளை மீண்டும் தாய்த் தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தையும் அதிவிரைவில் நடத்த நாம் தமிழர் கட்சி தயங்காது என எச்சரிக்கிறோம்.
முந்தைய செய்திடாம் 999 படத்தை வெளியிடாதீர்கள்-வார்னர் பிரதர்ஸ்க்கு நாம் தமிழர் அமெரிக்கா மற்றும் கனடா வேண்டுகோள்…
அடுத்த செய்திNaam Tamilar America and Naam Tamilar canada requests Warner Bros Entertainment, Inc., to not release the movie “Dam 999”