செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் பல ஆண்டுகளாக சிறைப்பட்டுத்தப்பட்டிருந்த ஈழத் தமிழ் அகதிகளில் 15 பேர் விடுவிக்கப்பட்டதைப்போல், மற்ற 29 பேரையும் தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:
சிறப்பு முகாம்களில் உள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை
செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 ஈழத் தமிழ் அகதிகளில் 15 பேரை தமிழக அரசு விடுவித்திருப்பது பாராட்டிற்குரியதாகும்.
ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலை உச்ச கட்டத்தில் இருந்தபோது, அங்கே படுகாயமுற்றுக் கிடந்த மக்களுக்கு மருந்துப் பொருட்களையும், மண்ணெண்ணை உள்ளிட்ட சில அத்யாவசியப் பொருட்களையும் கடத்தினார்கள் என்ற குற்றச்சாற்றின்போரில் இங்கிருக்கும் பல ஈழத் தமிழ் அகதிகளை தமிழக காவல் துறை கைது செய்து, சிறப்பு முகாம்கள் என்று பெயரில் சிறையை ஏற்படுத்தி தடுத்து வைத்தது. அவர்களுக்கு எதிரான வழக்குகளில், பிணைய விடுதலை உள்ளிட்ட சட்ட ரீதியான நிவாரணங்களைக் கூட பெறுவதற்கு அனுமதிக்காமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழின அமைப்புகள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்திருந்தனர். சிறப்பு முகாம்களில் அடைப்பட்டுக் கிடந்தவர்கள் பல முறை பட்டிணிப் போராட்டம் நடத்தி தங்களை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டிலுள்ள இதர முகாம்களில் வசிக்கும் தங்கள் உறவினர்களுடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அவர்களில் 15 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்னமும் 29 பேர் பூந்தமல்லி, செங்கல்பட்டு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவர்கள் அனைவரும் இரண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு இப்பிரச்சனையை அணுக வேண்டும். தங்கள் சொந்த மண்ணிலும் சிறை, நம்பி பிழைக்க வந்த மண்ணிலும் சிறை என்றால் எப்படி? தமிழர்களாக பிறந்ததைத் தவிர, வேறு எந்தப் பாவமும் இவர்கள் செய்யவில்லை. இந்த நிலையை தமிழக அரசு நினைத்துப் பார்க்க வேண்டும்.
எனவே, 15 பேர் மீது கருணை காட்டி விடுவித்தது போல், மீதமுள்ள 29 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறது.