நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் நல்லூரில் மரண தண்டனை ஒழிப்போம், மனித நேயம் காப்போம் பொதுக்கூட்​டம்

28
கடந்த21.8.2011  அன்று நாம் தமிழர் திருப்பூர் நல்லூர் நகரக் கிளை சார்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் விடுதலை கோரி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. பெருந்திரளாக கூடிய பொதுமக்களிடம் இம்மூவரின் விடுதலை பற்றி எடுத்துரைக்கப்பட்டது. கேட்பது உயிர்பிச்சை அல்ல மறுக்கப்பட்ட நீதி என்ற கருத்தை வலியுறுத்தி இந்த பொதுக்கூட்டத்தில் பேசப்பட்டது.
இந்த எழுச்சிமிகு பொதுக்கூட்டத்தை நல்லூர் நகர அமைப்பாளர்கள் கார்த்தி குமார், மணி மற்றும் தவச்செல்வன் ஆகியோர் முன்னின்று நடத்தினார்கள். திருப்பூர் மாவட்ட அமைப்பாளர்கள் செல்வம், சமரன் பாலா, பரமசிவம், கௌரி சங்கர்,சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமையேற்று இக்கூட்டத்தை நடத்தினார்கள். இக்கூட்டத்தை தமிழன் வடிவேலு, குணசேகரன், தலைமகன் காளிச்சரண்,தமிழ் வளவன்,திருச்சி செந்தில் , அழகு முருகன், பாலாஜி ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள்.
முதலில் ஈழ சுதந்திர போராட்ட வரலாறு பற்றியும் இந்திய அமைதிப்படை இலங்கையில் நடத்திய படுகொலைகளைப் பற்றியும் சமரன் பாலா பேசினார். பின்னர் பேசிய தமிழன் வடிவேலு மற்றும் குமுதவல்லி ஆகியோர் ராஜீவ் கொலைக்கான பின்னணி மற்றும் உண்மைக் குற்றவாளிகளைப் பற்றி பேசினார்கள். செல்வம் பேசும்பொழுது காங்கிரசு கட்சியின் ஊழல்களைப் பற்றி பேசினார். இளைஞர் பாசறை மாநில அமைப்பாளர்  அறிவுசெல்வன் பேசும்பொழுது ராஜீவ் கொலையின் பின்னணிகளை ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் தெளிவாக எடுத்துரைத்தார்.எழுச்சி உரையாற்றிய இளைஞர் பாசறை மாநில அமைப்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள் ராஜீவ் காந்தி கொலை என்பது ஒரு கொலை அல்ல , மரண தண்டனை என்றும் அதன் பின்புலத்தில் இருந்த சோனியாவையும் , சுப்பிரமணியம் சாமியையும் விசாரிக்காமல் விட்ட காரணத்தையும் தெளிவாக எடுத்துரைத்தார். பின்னர் சிறப்புரையாற்றிய மாநில தலைமைக் கழக பேச்சாளர் திலீபன், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் போதிய ஆதாரங்கள் எதுவுமின்றி இந்திய உளவுத்துறையால் வேண்டுமென்ற சோடிக்கப்பட்டவர்கள் என்பதை மக்களுக்கு விளக்கினார்
மற்றும் இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
௧.சாதாரண மளிகைக் கடையில் கிடைக்கும் பேட்டரியை வாங்கிகொடுத்தார் என்ற குற்றச்சாட்டுக்காக மரண தண்டனையை எதிர் நோக்கியிருக்கும் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோர் மீது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சட்டசபையைக் கூட்டி அவர்கள் மீது சுமத்தப்பட்ட மரண தண்டனையை நிறுத்தக்கோரி தீர்மானம் நிறைவேற்றவேண்டும்
1.திருப்புரின் சாயத் தொழில் பிரச்சனைக்காக நிரந்தரத் தீர்வு காண முழுமுயற்சி செய்கிற மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்
2.அரசாங்கத்தில் எங்கும் நிறைந்துள்ள லஞ்சம், ஊழல் செய்வபவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை தரகோருகிற வலிமையான லோக்பால் மசோதாவை நிறைவேற்றவேண்டும் எனக் கேட்டுகொள்கிறோம்
3. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணங்களை கைப்பற்றி அதனை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவந்து நாட்டின் வளர்ச்சிக்கு உபயோகப் படுத்தவேண்டும் எனக் கேட்டுகொள்கிறோம்
இந்த பொதுக்கூட்ட நிறைவில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் விடுதலைக்காக தொடர்ந்து போராடுவதென்றும் தொடர்ந்து மக்களிடத்தில் இதை கொண்டுசெல்வதென்றும் முடிவு செய்யப்பட்டது.