திருமதி. ஹில்லாரி கிளிண்டனின் தமிழகம் வருகையொட்டி தமிழக முதல்வருக்கு அமெரிக்க நாம் தமிழர் அனுப்பிய கடிதம்

60

அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள நாம் தமிழர்-அமெரிக்கா அமைப்பு அமெரிக்க அரசின் வெளியுறவுச் செயலர்  திருமதி. ஹில்லாரி கிளிண்டன் தமிழகம் வருகையொட்டி தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகளில் மூலம் இலங்கையில் காலோச்சும் சீனா பற்றி தமிழக முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டு அதை திருமதி. ஹில்லாரி கிளிண்டன் அவர்களோடு கலந்தாலோசிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரிய மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு,  நாம் தமிழர் அமெரிக்கா அமைப்பின் வணக்கங்கள்..

பெருவாரியான மக்கள் ஆதரவுடன் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக வீற்றிருக்கும் தங்களுக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். உலகத்தமிழர்களின் ஒட்டுமொத்த குரலாக தமிழக சட்டமன்றத்தில் இலங்கை சிங்கள இனவெறி அரசின் இனப்படுகொலையை கண்டித்தும் அவ்வரசாங்கதின் மேல் பொருளாதார தடை கொண்டுவர வேண்டும் என்று இந்திய அரசை கேட்டுக்கொண்டும் நீங்கள் கொணர்ந்த தீர்மானம் உலகத்தமிழர்கள் மனதில் மிகப் பெரும் மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றது. தீர்மானம் மட்டுமல்லாது அதற்க்கு பின்னர் இந்திய பிரதமரை சந்தித்து ராஜபக்சே உள்ளிட்ட போற்குற்றவாளிகள் தண்டனை பெற இந்தியா உதவவேண்டும் என்று நீங்கள் மீண்டும் வலியுறுத்தியது, அதிலும் நீங்கள் பிரதமருக்கு வழங்கிய கோரிக்கை மனுவில் இலங்கையில் சிங்கள ராணுவத்தால் தமிழர்களுக்கு நடந்தது “இனப்படுகொலை” தான் என்று குருப்பிட்டிருந்த்தது ஆகியவை உலகத்தமிழர்களுக்கு மிகப்பெரும் ஆறுதலை தந்துள்ளது.

தமிழர் உரிமை மீட்ப்பின் ஒரு பகுதியாக கச்சதீவை திரும்பபெறும் முயற்சியில் நீங்கள் தொடுத்த வழக்கில் மிக சாதுதிர்த்தியமாக சட்டமன்றத்தில் தீர்மானமாக முன்மொழிந்து தமிழ்நாடு வருவாய் துறையையும் ஒரு பிரதியாக சேர்த்த பாங்கு உங்கள் திறமையை பறைசாற்றுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்மானங்களைக் கொணர்ந்த தங்களுக்கு நாம் தமிழர் அமெரிக்கா சார்பாக கோடான கோடி நன்றிகளைத் தெரிவிக்கும் அதே வேளையில், தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று, தமிழர்களின் குரலாக, தமிழர்களின் முதல்வராக அரியணையில் வீற்றிருக்கும் தங்களுக்கு ஒரு வேண்டுகோளையும் வைக்கின்றது.அமெரிக்க அரசின் வெளியுறவுச் செயலர்  திருமதி. ஹில்லாரி கிளிண்டன் அவர்கள், வரும் ஜூலை 19 மற்றும் 20 ஆம் நாட்களில் இந்தியாவில் அலுவல் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அவருடைய பயணத் திட்டத்தில், தமிழகதிற்கு வருவதும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிகின்றோம். அவ்வாறு அவர் வருகை தரும் வேளையில் தங்களுக்கு ஒரு முக்கிய விஷயத்தை நினைவு படுத்த விரும்புகிறோம். நீங்கள் ஏற்கனவே பல தடவை குறிப்பிட்டதை போலவே இலங்கையில் நாளுக்கு நாள் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவருகிறது. ஜூலை 15 அன்று சிங்கள அரசாங்கம் இலங்கை ராணுவ தலைமையகத்தில் இருக்கும் ஒரு பகுதியை China Aviation Technology Import-Export Corporation (CATIC) என்ற சீனா விமான தளவாடம் உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு விற்றுள்ளது. ராணுவ தலைமையகத்தின் ஒரு பகுதியை கூட விற்கும் அளவில் சீனாவோடு நெருக்கம் பாராட்டுகிறது இலங்கை அரசாங்கம். அது மட்டுமல்லாது இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி ஏப்ரல் வரையில் மட்டும் 759.8 மில்லியன் அமெரிக்கா டாலர்கள் சீனா இலங்கையில் முதலீடு செய்துள்ளது. இப்படியான இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் என்பதை விட பூலோக ரீதியாக தமிழகதிற்கு தான் முதலில் மிகப்பெரும் அச்சுறுத்தல் என்பது நீங்கள் அறியாததல்ல. அமெரிக்காவும் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் காரணமாக கவலை கொண்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்க காங்கிரசில் வெளியிடப்பட்டுள்ள ஆராய்ச்சி (CRS Report – SriLanka:Background and U.S. Relations) அறிக்கையில் சீனாவின் கடற்படை மூலோபாயமான “முத்துமாலை” நடவடிக்கையின் ஒருபகுதியாக தான் சீனா இலங்கையில் முதலீடு செய்கிறது என்று எச்சரித்துள்ளார்கள்.

இச்சூழ்நிலையில் தமிழகம் வரும் அமெரிக்க அரசின் வெளியுறவுச் செயலர் திருமதி. ஹில்லாரி கிளிண்டன் அவர்களிடம்,
தமிழகத்தின் நலன் காக்க, தமிழர்களின் நலன் காக்க சீனா ஆதிக்கம் பற்றியும்,

ஈழத்தமிழர்களை கொன்றொழித்த இலங்கை இனவெறி அரசை தண்டிக்கும் முகமாக போர்குற்ற விசாரணையை ஐநா மன்றம் மேற்கொள்ள அமெரிக்க அரசாங்கம் ஆவண செய்வது பற்றியும்,

அனைத்துலக தமிழர்கள் விரும்பும் நியாயமான தீர்வான தனி தமிழீழத்திற்கான ஐ,நா பொதுசன வாக்கெடுப்பு நடத்தி தென் சூடானை போன்று சுதந்திரம் பெற்ற

தேசத்தில் தமிழர்கள் வாழ்வதற்கு வழி ஏற்ப்படுத்துவது குறித்தும் கலந்தாலோசிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

உலகத்த்தமிழர்களின் குரலாக இருந்து தமிழர் நலன் சார்ந்து நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிக்கும் உற்றதுணையாக நின்று நாங்கள் களமாடுவோம் என்று இந்நேரத்தில் உறுதி கூறி வணக்கங்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

நாம் தமிழர் – அமெரிக்கா
சன்னிவேல், கலிபோர்னியா


முந்தைய செய்திகாமாராசர் பிறந்த நாளன்று(15) கடலூர் மேற்கு மாவட்டத்தில் காமாராசர் சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அடுத்த செய்திஹில்லாரி கிளிண்டனிடம் ஈழத் தமிழர் துயரத்தை முதல்வர் எடுத்துரைக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்