இராணுவ ஆட்சியின் கீழே இலங்கையில் தமிழர்கள் வாழ்கின்றார்கள்! மலேசியத் தூதுக்குழு தெரிவிப்பு

36

50 மீற்றருக்கு ஒரு, ஆயுதமேந்திய இராணுவம் என்ற நிலையிலேயே, தமிழர்கள் இராணுவ பிடிக்குள் வாழ்ந்து வருவதாக, இலங்கை சென்று வந்த மலேசிய தூதுக்குழுவின் உத்தியோகபூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. போருக்கு பிந்திய இலங்கைத் தீவின் உண்மை நிலைவரத்தை கண்டறியும் நோக்கில், மலேசிய தூதுக் குழுவொன்று, 5 நாள் பயணமாக, கடந்த மாதம் இலங்கைக்கு சென்று வந்திருந்தது.

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.மனோகரன், நாடாளுடன்ற உறுப்பினர் ஜொகாரி, செனட்சபை உறுப்பினர் எஸ்.இராமகிருஸ்ணன் மற்றும் அரசசார்பற்ற அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் இத்தூதுக்குழுவில் உள்ளடங்கியிருந்தனர்.

தமிழர் தாயகத்தின் வட-கிழக்கு பகுதிகள் மற்றும் புத்தளத்துக்கும் சென்று நிலைவரங்களைக் கண்டறிந்ததோடு, கட்சிகள் – தொண்டைமப்புக்கள் – கல்வியாளர்கள் – பிரதிநிதிகள் என பலதரப்பட்டவர்களையும் சந்தித்துள்ளனர்.

இப்பயணம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் உள்ளடக்க விபரங்களை நாதம் ஊடகசேவைக்கு, செனட்சபை உறுப்பினர் எஸ்.இராமகிருஸ்ணன் அவர்கள் வழங்கியிருந்தார்.

அந்த விபரம் பின்வருமாறு:

போருக்கு பின்னரான தமிழர்களின் வாழ்;வு நம்பிக்கை தருவதாக இல்லை. சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்கின்ற பிரச்சாரங்கள் யாவும், உலகை ஏமாற்றவே என்பதனை கண்டறிந்து கொண்டோம். ஆங்காங்கே சிறுசிறு வேலைத் திட்டங்களை அரசாங்கம் செய்திருந்தாலும் அது போதுமானதாக இல்லை.

தகர கொட்டகைகளிலும், தற்காலிய கொட்டில்களிலும் அடிப்படை வசதிகளற்று மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

50 மீற்றருக்கு ஒரு ஆயுதம் ஏந்திய இராணுவமோ அல்லது இராணு காவல்துறையோ நிற்கின்ற நிலையில், மக்களின் கருத்துச் சுதந்திரத்துக்கும், இயல்பான வாழ்க்கைகக்கும் உத்தரவாதமற்ற நிலையே காணப்படுகின்றது.

நாங்கள் உரையாடிய பெரும்பாலான மக்கள், தாங்கள் ஒருவித அச்ச நிலையிலேயே வாழ்ந்து வருவதாக வெளிப்படுத்தியுள்ளனர். தொழில் வாய்ப்புக்கள் மிக குறைவான நிலையில், பொருளாதார நெருக்கடிக்குள் வாழ்ந்து வருவதாகவும் கூறினார்கள்.

முக்கியமாக பெண்களின் நிலை மிக மோசமானதாக உள்ளது. எண்ணிக்கையில் ஆண்களை விட பெண்களே அதிகம் உள்ள நிலையில், சிறிலங்கா இராணுவத்தின் பாலியல் அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுத்தபடியே அவர்கள் வாழ நேர்ந்துள்ளதாக பலர் கூறினர். குறிப்பாக ஒரு பெண் தன்னுடைய குடும்பத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, இராணுவத்தின் பாலியல் வன்மத்துக்கு உடன்பட வேண்டிய அவலநிலையையும் எமக்கு வெளிப்படுத்தினார்.

மேலும் யாழ் போதனா வைத்தியசாலையில், நாள் ஒன்றுக்கு 5-6 இளம் பெண்கள் கருக்கலைப்பு செய்கின்ற நிலை காணப்படுகின்றது. இவர்களில் பெரும்பாலானோர் கலாச்சார சீரழிவுக்குள் முகம் கொடுத்து வருகின்றனர் என்பதோடு, 80 ஆயிரம் விதவைகள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்தன. இதில் மூன்றில் இரண்டு தொகை இளம் விதவைகள் என்பது குறிப்பிடதக்கது.

30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோர்களை இழந்த நிலையில் உரிய பராமரிப்பும், பாதுகாப்பும் அற்ற நிலையில் உள்ளனர்.

தமிழர்களின் பெரும்பாலான வாழ்விடங்களில் புத்த சிலைகள், போருக்கு பின்னர் நிறுவப்பட்டுள்ளன.

மக்கள் தங்களுடைய பெரும்பாலான முக்கிய பணிகளுக்கு இராணுவ அனுமதியுடனேயே செய்ய வேண்டிய நெருக்கடி நிலை இருப்பதை உணர்ந்தோம்.

இவ்வாறு விபரங்களை பகிர்ந்து கொண்ட செனட்சபை உறுப்பினர் எஸ்.இராமகிருஸ்ணன் அவர்கள் விரைவில் தமிழகத்துக்கு சென்று தமிழக முதலமைச்சர் செவ்வி ஜெயலிலதாவையும் பிற முக்கிய தலைவர்களையும் சந்தித்து தங்களுடைய பயண அறிக்கையின் விபரங்களை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்தார்.

நன்றி

தமிழ்வின்

முந்தைய செய்திசிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு குன்னூரில் பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்து 350 கட்சியினர் கைது
அடுத்த செய்திவரும் 23-07-2011 அன்று நெய்வேலியில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்