வெள்ளைக்கொடியுடன் சரணடைய வருகின்றவர்களைப் படுகொலை செய்யுமாறு கோத்தாபய உத்தரவிட்டிருந்ததாக கேள்விப்பட்டிருந்தேன்: சரத் பொன்சேகா

16வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய நபர்களை படுகொலை செய்துவிடுமாறு கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தததை தான் கேள்விப்பட்டிருந்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையில் நேற்று சாட்சியமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய நபர்களை படுகொலை செய்து விடுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்ததாக யுத்தத்தின் இறுதிக் கட்டம் வரை இராணுவத்தினருடன் தங்கியிருந்த ஊடகவியலாளர்கள் இருவர் மூலமாகவே நான் கேள்விப்பட்டிருந்தேன். அதனையே நான் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரட்ரிக்கா ஜேன்ஸ் இடமும் தனிப்பட்ட முறையில் உரையாடும் போது தெரிவித்திருந்தேன். ஆனால் அவர் ஒருபோதும் என்னைப் பேட்டி கண்டதில்லை. சண்டே லீடர் சார்பில் வேறொரு ஊடகவியலாளரே என்னைப் பேட்டி கண்டிருந்தார். அச்சந்தர்ப்பத்தில் பிரட்ரிக்காவும் அங்கு இருந்தார். நோ்காணலின் போது அவர் எந்தவொரு வினாவையும் தொடுக்கவில்லை. அதன் பின் என்னுடன் தனிப்பட்ட ரீதியில் உரையாடும் போதே நான் மேற்கண்ட விடயத்தை அவரிடம் தெரிவித்திருந்தேன்.

ஆனால் அதற்கு மேல் என்ன நடந்தது என்பதை நானறியேன். அத்துடன் விடுதலைப் புலிகளின் முக்கிய நபர்கள் யாரும் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்ததாக நான் அறியவுமில்லை. இராணுவத் தளபதி என்ற வகையில் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள எனக்கு கால அவகாசம் வழங்கப்படவுமில்லை என்றும் சரத் பொன்சேகா தனது சாட்சியத்தின்போது மேலும் தெரிவித்துள்ளார்.