மக்களை திசை திருப்ப ஈழப் பிரச்சினையில் கருணாநிதி போட்ட ‘நாடகம்’- தயாநிதி மாறன் – விக்கி லீக்ஸ்

50

ஈழத்தில் போரை நிறுத்தக் கோரி திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, மக்களை திசை திருப்புவதற்காக போட்ட நாடகம் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.

விக்கிலீக்ஸிடமிருந்து தி ஹிந்து நாளிதழ் பெற்ற தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில் தமிழக மக்களை பல்வேறு பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதற்காக அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி பல்வேறு நாடகங்களை அரங்கேற்றியதாக அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தயாநிதி மாறன் பேசுகையில், கூறியதாக பரபரப்புத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

இதுதொடர்பாக தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி:

2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு, அமெரிக்க துணைத் தூதர்ஆண்ட்ரூ சிம்கின் பெயரில் ஒரு கடிதம் போனது. அதில் தயாநிதி மாறனுடன், அமெரிக்க அதிகாரிகள் பேசிய விவரத்தை குறிப்பிட்டுள்ளார். அதில், தயாநிதி மாறன் மற்றும் காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருடன் பேசியதை குறிப்பிட்டுள்ளார் சிம்கின்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தனது கட்சி மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்யப் போவதாக கருணாநிதி அறிவித்திருப்பது ஒரு நாடகம் என்று தயாநிதி மாறன் அப்போது தெரிவித்தார். மின் வெட்டுப் பிரச்சினை, அதனால் ஏற்பட்டுள்ள மக்களின் கடும் கோபம் ஆகியவற்றிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே கருணாநிதி இவ்வாறு அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செயலுக்கும், தனக்கும் தொடர்பு இல்லை என்பதாக காட்டிக் கொள்ளும் நாடகமே இது. தானும் இதில் பங்கேற்று ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும் அவர் கூறினார். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை விட தமிழக மக்களை பல்வேறு பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் நோக்கமே கருணாநிதியிடம் இருந்தது.

மேலும் கருணாநிதி அரசு இதுவரை எந்த அரசு மீதும் இல்லாத அளவுக்கு மக்கள் மிகவும் கோபமாக இருப்பதாகவும் தயாநிதி மாறன் கூறினார்.

ஆனால் கருணாநிதி நடத்திய நாடகத்தால், திமுகவிடமிருந்து காங்கிரஸ் குறிப்பாக சோனியா காந்தி விலகத் தொடங்கினார். கருணாநிதியின் இந்த செயலுக்கு காங்கிரஸ் சரியான பதிலடியை பொருத்தமான நேரத்தில் கொடுக்கும். அது உறுதி.

பிரபாகரனைக் கொல்லத் துடித்த ராகுல் காந்தி

கருணாநிதியின் மகள் கனிமொழியை சமீபத்தில் சந்திக்க மறுத்தார் சோனியா. இதற்கு திமுக மீதான சோனியா காந்தியின் அதிருப்தி அதிகரித்ததே காரணம்.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதற்குப் பழி வாங்க வேண்டும், பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக உறுதியாக உள்ளனர் என்றும் தயாநிதி மாறன் கூறியிருந்தார்.

திமுக தோற்கும்-தயாநிதி மாறன்

அதேபோல திமுக மீது ஊழல் கறை படிந்து விட்டது. இதை அகற்றாவிட்டால் திமுக பெரும் சரிவைச் சந்திக்கும் என்றும் அப்போது கூறியுள்ளார் தயாநிதி மாறன்.

இதன் மூலம் சட்டசபைத் தேர்தலில் திமுகவின் தோல்வியை அன்றே கணித்துள்ளார் தயாநிதி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்.கைவிட்டால் திமுகவுக்கு வழியில்லை-பீட்டர்

பீ்ட்டர் அல்போன்ஸ் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து தனது எம்.பிக்களை வாபஸ் பெற மாட்டார் கருணாநிதி என்று உறுதிபடக் கூறியிருந்தார். தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக, தான் வலுவாக இருப்பதாக காட்டிக் கொள்ளவே இவ்வாறு அறிவித்தார் (எம்.பிக்கள் ராஜினாமா செய்வதாக) கருணாநிதி. மற்றபடி, அனைத்துக் கட்சிக் கூட்டம், தீர்மானம் என்பதெல்லாம் சப்பைக் கட்டுதான்.

காங்கிரஸுடனும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடனும் இணைந்து இருப்பது ஒன்றுதான் திமுகவுக்கு உள்ள ஒரே வழி என்று கூறியிருந்தார் பீட்டர்.

ஆனால் தாங்கள் ராஜினாமா செய்யப் போவதாக திமுக கூறியது காங்கிரஸ் மேலிடத்தை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியது உண்மை. மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பாதையில் திமுக திரும்புகிறதோ என்று காங்கிரஸ் கருதியது என்று கூறியுள்ளார் பீட்டர்.

‘திமுக, காங்கிரஸின் சுய நல உறவு’

இந்த இருவரின் பேச்சுக்களையும் வைத்துப் பார்க்கும்போது இரு கட்சிகளுமே ஒரு சுயநலத்தோடுதான் உறவு வைத்துள்ளன என்பது தெரிய வருகிறது. முதல்வர் பதவியில் நீடிக்க காங்கிரஸின் தயவு கருணாநிதிக்குத் தேவை. அதேபோல ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு டெல்லியில் நீடிக்க கருணாநிதியின் தயவு காங்கிரஸுக்குத் தேவை.

இதன் விளைவாகவே இந்த அரசியல் நாடகத்தை கருணாநிதி அரங்கேற்றியிருப்பதாக தெரிகிறது.
கருணாநிதியின் முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் போதிய அவகாசம் கொடுத்ததால் தனது நாடகங்களை முடித்துக் கொண்டார் கருணாநிதி என்று அந்த கேபிளில் சிம்கின் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் தெரிவிக்கிறது.

ஈழப் பிரச்சினையை வைத்து கருணாநிதி நாடகமாடினார் என்று தயாநிதி மாறனே அமெரிக்க அதிகாரிகளிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

தட்ஸ்தமிழ்

முந்தைய செய்திதமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்களின் சிலைக்கு செந்தமிழன் சீமான் அவர்கள் வீரவணக்கம் செலுத்துகிறார்.
அடுத்த செய்திதமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்களின் சிலைக்கு செந்தமிழன் சீமான் அவர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.