பயங்கரவாதத்தை தோற்கடித்த இலங்கையின் அனுபவங்கள்! பகிர்ந்து கொள்ள ஐம்பத்தி ஐந்து நாடுகளுக்கு இலங்கை அழைப்பு

3

பயங்கரவாதத்தைத் தோற்கடித்தாக இலங்கை ராணுவம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஐம்பத்தி ஐந்து நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட யுத்தத்தின் அனுபவங்களைக் கொண்டு “பயங்கரவாதத்தைத் தோற்கடித்த இலங்கையின் அனுபவங்கள்” எனும் தலைப்பிலான கருத்தரங்கொன்றை இராணுவம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்போது விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்திற்குத் தலைமைதாங்கிய முப்படை அதிகாரிகளும் தங்கள் அனுபவங்களைச் சர்வதேச நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளனர். நாட்டில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின் முப்படை அதிகாரிகள் நடாத்தும் முதலாவது கருத்தரங்கு அதுவாகும் என்று இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இம்மாதம் 31ம் திகதி தொடக்கம் ஜுன் மாதம் இரண்டாம் திகதி வரை நடைபெறவுள்ள கருத்தரங்கில் பங்கு கொள்ளுமாறு ஐம்பத்தி நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவல அறிவிக்கின்றார்.

கருத்தரங்கில் கலந்து கொள்வது தொடர்பில் தற்போதைக்கு முப்பத்தியொரு நாடுகளின் இராணுவ  அதிகாரிகள் தங்கள் வருகையை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.