மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
மீன்களின் இனப்பெருக்கக் காலமாக ஏப்ரல் 15 முதல் மே 30 வரையிலான 45 நாள்களுக்கு ஆழ்கடலுக்குள் விசைப்படகுகள் சென்று மீன்பிடிக்கக் கூடாதென மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
இந்த காலக்கட்டத்தில் படகுகளுக்கு வண்ணம் பூசுவது, படகுகளின் இயந்திரங்களைச் சீரமைப்பது, படகுகளில் ஏற்பட்ட பழுதுகளைச் சீரமைப்பது, வலையை பின்னுவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்புப் பணிகளை மீனவர்கள் மேற்கொண்டனர். சிறிய வகை படகுகள் மட்டும் குறுகிய தொலைவுக்கு சென்று மீன்பிடிப்பதை தொடர்ந்தன.இந்நிலையில் தடைக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடலுக்குள் மே 30-ம் தேதி மீன்பிடிக்க ஏதுவாக 29-ம் தேதி பிற்பகல் காரைக்கால் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட அனைத்துப் படகுகளும் கடலுக்கு புறப்பட்டன.