கடலில் மீன் பிடிக்க தமிழக மீனவர்கள் அச்சம் – உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு

15

தமிழக மீனவர்களுக்காக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஞானேஸ்வரன் உயர்நீதிமன்றதில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில்,  ‘’சர்வதேச கடல் எல்லையில் கடந்த சில ஆண்டுகளாக 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள். அவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளானார்கள். இதனால் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடிக்க அஞ்சுகிறார்கள்.

இதை தடுக்க தமிழக கடல் எல்லை கோட்டை அடையாளம் காட்டும் தானியங்கி தொடர் நிலையங்களை அமைக்க வேண்டும். அனைத்து படகுகளிலும் ஜி.பி.எஸ். கருவிகளை இலவசமாக பொருத்த வேண்டும். இதன் மூலம் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதை தடுத்தி விடலாம்.

படகுகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்துவது பற்றி நான் மத்திய மாநில அரசுக்களுக்கு கடந்த மாதம் 18-ந் தேதி மனு கொடுத்தேன். இதன் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

எனவே தமிழக மீன்பிடி படகுகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’என்று  குறிப்பிட்டுள்ளார்.

இம்மனுவை நீதிபதிகள் ராஜேஸ்வரன், வாசுகி ஆகியோர் விசாரித்தனர். பின்னர் அவர்கள், மத்திய உள்துறை அமைச்சக செயலாளர், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு கூடுதல் டி.ஜி.பி. தமிழக உள்துறை செயலாளர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்ப உத்தரவிட்டனர்.