ஐ.நா அறிக்கைக்கு எதிராக மக்களிடம் பலவந்தமாக கையெழுத்து வாங்கிவரும் இலங்கை அரசு.

18

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக 10 லட்சம் கையெழுத்துக்களை சேகரிக்கும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் நேற்று மக்களிடம் பலவந்தமாக கையெழுத்துப் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

இலங்கை அரசு மீது ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் சுமத்தப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கையெழுத்துப் போராட்டம் நாடெங்கும் நடைபெற்று வருகின்றது. இந்தப் போராட்டத்தின் ஓர் அங்கமாகத் தனியார் போக்குவரத்துப் பிரதியமைச்சர் ரத்நாயக்கா தலைமையிலான நூறு பேர் கொண்ட குழு ஒன்று நேற்று வடபகுதியில் களமிறங்கியது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளின் படையினரின் பிரசன்னத்துடன் மக்களைப் பலவந்தப்படுத்தி கையெழுத்தைப் பெற்றுக்கொண்டது இந்தக் கும்பல். கையெழுத்து வைத்தால் பல சலுகைகள் வழங்கப்படும் எனவும் ஆசை காட்டப்பட்டது.

பின்னர் யாழ்ப்பாணத்துக்கும் வந்து சேர்ந்த இக்குழு, சுண்டுக்குழி, கொழும்புத்துறை போன்ற இடங்களில் உள்ள வீதிகளில் தம்பாட்டுக்குச் சென்றுகொண்டிருந்த பொது மக்களை கையைப் பிடித்து இழுக்காத குறையாக வழி மறித்து பலவந்தக் கையெழுத்துச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதனால் கையெழுத்து வேட்டையில் ஈடுபடுவோர் நிலைகொண்டிருந்த வீதிகளை விடுத்து மாற்றுப் பாதைகளால் மக்கள் பயணித்தனர். வீதிகள் வெறிச் சோடிப் போனதால் ஐ.நாவுக்கு ஏதிராக கோஷங்களை எழுப்பியபடி யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர்.
இவர்களுக்கு இராணுவத்தினரின் பூரண பாதுகாப்பும் வழங்கப்பட்டது. பஸ்களுக்காக காத்திருந்த பயணிகளைக் கலைத்துப் பிடித்து அவர்களிடமும் தம் கையெழுத்து வேட்டையை இந்தக் குழுவினர் தொடர்ந்தனர்.

குடாநாட்டிலுள்ள சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் அடிவருடிகள் சிலர் ஐ.நாவிற்கு எதிராகவும் ஜனாதிபதி மஹிந்தவுக்கு சர்பாகவும் கோஷங்களை எழுப்பினர்.
யாழ். நகரப் பகுதிகளிலும், பஸ் நிலையத்திலும் திடீர் என முளைத்து அடாவடித்தனமாக கையெழுத்து வேட்டையில் இக் குழுவினர் ஈடுபட்டதால் மக்களிடையே பரபரப்பும், பீதி நிலையும் ஏற்பட்டது.

இதே வேளை சில தினங்களுக்கு முன்னர் தென்னிலங்கையில் இருந்து வந்த சர்வமதக் குழு ஒன்று, ஐ.நா அறிக்கை தொடர்பாக வடபகுதி மக்களின் கருத்துக்களை கேட்டறிந்திருந்தது.அதன் பின்னரே இந்தக் கையெழுத்து வேட்டைக்காரர்களின் பிரசன்னம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்திபோர்க் குற்றவாளி இராசபக்சேயை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை செய்! – ரொறன்ரோ அமெரிக்க தூதுவராலயத்தின் முன் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்
அடுத்த செய்திஇலங்கை மீது போர்க்குற்றம் தொடர்பில் அனைத்துலக விசாரணை! ஐ.நாவில் மீண்டும் பிரேரணை வருகிறது.