சிறீலங்காவில் இடம்பெற்ற போரின் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட 40,000 தமிழ் மக்களின் படுகொலைகள் தொடர்பான அனைத்துலக விசாரணைக்கு அணிசேராநாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதன் ஆலோசனைப் பணிப்பாளர் ஸ்ரீவ் கிரசோ மேலும் தெரிவித்துள்ளதாவது:
இன்று (25) புதன்கிழமை, இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் அணிசேரா நாடுகளின் 118 வெளிநாட்டு அமைச்சர்கள் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
சிறீலங்காவில் இடம்பெற்ற மோசமான வன்முறைகள் மீண்டும் இடம்பெறாது தடுக்கவும், அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கும் அணிசேரா நாடுகள் தமது இந்த சந்திப்பின்போது ஆதரவுகளை வழங்கவேண்டும். இதன் மூலம் தான் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கப்பாட்டுக்கான அடித்தளத்தை அமைக்க முடியும்.
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை ஆதரிப்பதுடன், அதன் பரிந்தரைகளை ஏற்றுக்கொள்ளுமாறு சிறீலங்கா அரசுக்கும், ஐ.நாவுக்கும் அணிசேரா நாடுகள் ஊக்கமளிக்கவேண்டும்.
அனைத்துலக கண்காணிப்புக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கும் அவர்கள் ஆதரவுகளை வழங்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி
ஈழம் ஈ.நியூஸ்