வரலாறாய் வாழ்பவர் – பாபாசாகேப் அம்பேத்கர்

970

வரலாறுகளில் வாழ்பவர்கள் சிலர், வரலாறாய் வாழ்பவர்கள் சிலர். தம் செயல்களும், அவற்றின் சமுதாய நோக்கும் பன்முகப் பார்வையும், ஆழமும், மனித நேயச் சிந்தனையும் ஒரு மனிதனின் வரலாற்று நிலைப்பாட்டை நிர்ணயிக்கின்றன. அந்த வெளிப்பாடுகளின் வெளிச்சத்தில் வரலாற்றுக் காலமாகவே விளங்குகிறார் அம்பேத்கர்.

1891 ஏப்பிரல் 14ம் நாள் ராணுவ வீரராய் இருந்த ராம்ஜிக்கும், பீமாபாய் க்கும் மகனாகப் பிறந்தார் அம்பேத்கார். தந்தையின் பணிக்காலம் சில வருடங்களிலேயே முடிந்துவிட இளமை வறுமையை கைகளில் திணித்தது. ஓய்வூதியத்தின் வெளிச்சத்தில் அவருடைய கல்வி ஆரம்பமானது. சிறுவயதில் ஆனந்தமாய் விளையாடிய அவர் தன்னுடைய பள்ளிக் காலத்தில் தான் தானும் தன்னுடைய குடும்பமும் மற்றவர்களை விட வித்தியாசமாக நடத்தப்படுவதை அறிந்தார்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தில் தான் பிறந்திருக்கிறோம் என்பதும், இந்தியாவின் சாதீய அமைப்பு தன்னை இழிவாக நடத்துகிறது என்பதும் சிறுவனுக்கு தெரிந்திருக்கவில்லை. பள்ளியில் தனிக்குவளையில் தண்ணீர், மாட்டு வண்டியில் கூட சமமாய் அமர்ந்து வர இயலாமை என தீண்டாமையின் கொடுமைகள் அவருடைய மனதைச் சுட்டன.

பள்ளிக்கூடத்தில் மற்ற மாணவர்களைப் போல அவரால் நடமாட முடியவில்லை. ஓரமாக அமர்த்தப்பட்டார். கரும்பலகையில் மற்ற மாணவர்களைப் போல எதுவும் எழுத அவர் அனுமதிக்கப்படவில்லை. சமஸ்கிருதம் கற்கவேண்டும் என்னும் ஆர்வம் எழுந்தபோது, அது புனிதமானது அதை தாழ்த்தப்பட்டவர்கள் கற்கக் கூடாது என்று அவருக்கு எச்சரிக்கை விடப்பட்டது. அவையே அவரை பின்னாளில் தலித் இனத்தின் விடுதலைக்காகப் போராடத் தூண்டின.

தன்னுடைய பதினேழாவது வயதில், பள்ளிப்படிப்பை முடித்த கையோடு ரமாபாயைத் திருமணம் செய்து கொண்டார். கல்வியில் மிக அதிக ஆர்வமும் திறமையும் கொண்டிருந்த அம்பேத்கார் 1912ல் இளங்கலைப் பட்டம் பெற்றார். அடுத்த வருடமே அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதற்கு அடுத்த ஆண்டில் முனைவர் பட்டமும் பெற்றார். அங்கிருந்து சிறப்புப் படிப்பிற்காக இங்கிலாந்திலுள்ள லண்டனுக்குச் சென்றார்.

1918ல் பம்பாயின் சிதேன்காம் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார் அம்பேத்கார். அதன் பின் மீண்டும் சிலகாலம் இங்கிலாந்திற்குச் சென்று தன்னுடைய படிப்பைத் தொடர்ந்தார்.

பல்வேறு நாடுகளில் கலாச்சாரங்களில் வாழ்ந்து இந்தியா திரும்பிய அம்பேத்கார் இந்தியா இன்னும் மாறாமல் இருப்பதைக் கண்டு வேதனையடைந்தார். தன்னுடைய பணி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் உரிமைகளுக்காகப் போராடுவதே என்று முடிவெடுத்தார். தலித்களின் முன்னேற்றத்திற்காக என்ன செய்யலாம் என்பதை ஆழமாக சிந்திக்கத் துவங்கினார்.

தான் பிறந்த மதத்தில் குறைந்தபட்ச மரியாதை கூடப் பெறமுடியாத நிலையில் தலித் சமூகம் இருப்பதைக் கண்டு இதயம் நொந்தார். உலக நாடுகள் தரும் மனித உரிமைகள் என்பவையெல்லாம் தாழ்த்தப்பட்ட மனிதனுக்கு இந்தியாவில் நிராகரிக்கப்படுவது கண்டு அம்பேத்கார் ஆவேசமடைந்தார்.

சில மதவாதிகளின் சுயநல வளர்ச்சிக்காக கட்டப்பட்ட சாதீய அமைப்பு ஒழிந்தால் இந்தியா வலுப்பெறும் என்னும் சிந்தனை அம்பேத்காரிடம் நிறைந்திருந்தது. சிந்தனைகளோடு ஒடுங்கிக் கிடக்கும் அரசியல் தலைவர்கள் மத்தியில் சிந்தனைகளின் செயல்பாட்டுக்காக அயராது பாடுபட்டதால் இன்று அம்பேத்கர் உரிமைக் குரலின் பிரதிநிதியாக சித்தரிக்கப்படுகிறார்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் கைகளில் அரசியல் அதிகாரம் வருவதன் மூலம் மட்டுமே இந்தியாவில் இருக்கும் சாதீய அடக்குமுறையையும், சீரான வளர்ச்சியையும் அடைய முடியும் என்பதில் அம்பேத்கர் உறுதியாக இருந்தார். எனவே தான் அவரால் காந்தியின் கொள்கைகளோடு பல நேரங்களில் ஒத்துப் போக நேர்ந்ததில்லை. காந்தி தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அல்ல, ஆதிக்க சாதியில் இருந்து கொண்டு ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரைச் சீர்செய்து விட முடியாது என்று கருதினார் அம்பேத்கர்.

தாழ்த்தப்பட்ட மக்களை ஹரிஜன் என்றும் கடவுளின் குழந்தை என்றும் காந்தியடிகள் பெயரிட்டழைத்ததை அம்பேத்கர் வெறுத்தார். தாழ்த்தப்பட்டவன் கடவுளின் குழந்தை எனில் உயர்ந்தவர் என்று சொல்லிக் கொள்பவர்கள் சாத்தானின் பிள்ளைகளா என்று குரல் எழுப்பினார். மேற்பார்வைக்கு விதண்டாவாதமாகத் தோன்றினாலும் அம்பேத்கரின் ஆழமான சிந்தனையே இந்த பதிலுக்குக் காரணம்.

கோயில்களில் அனாதைகளாய் விடப்படும் சிறுவர்களையே கடவுளின் குழந்தைகள் என்று அழைக்கும் வழக்கம் இருந்ததை அம்பேத்கர் அறியாதவர் அல்ல. குஜராத்தி எழுத்தாளர் நர்சி மேத்தா தன்னுடைய நாவலில் கடவுளின் குழந்தைகள் என்பவர்கள் தந்தை யார் என்பதை அறியாதவர்கள் என்று குறிப்பிடுவது இங்கே கவனிக்கத் தக்கது. எனவே தான் காந்தியடிகளின் பேச்சில் ஏதோ உள்நோக்கு இருப்பதாகக் கருதிய அம்பேத்கர் அதை எதிர்த்தார்.

கற்பி, போராடு, ஒன்றுசேர்’ எனும் அம்பேத்காரின் முழக்கம் அவர் கல்வியின் பால் கொண்டிருந்த ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. தாழ்த்தப்பட்டவர்கள் கல்வியின் சாரலில் கூட நனைந்து விடாதபடி துரத்தப்பட்ட அன்றைய சூழலில், மாகாராஷ்டிராவில் வாழ்ந்த ஜோதிபா புலே தாழ்த்தப்பட்டவர்களுக்காக கல்வி நிறுவனங்கள் துவங்கிய நிகழ்ச்சியும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களின் பாகுபாடற்ற பார்வையும் அவரைக் கவர்ந்தன. கல்வி குறித்து அவர் விரிவாகப் பேசுவதற்கு இவை காரணிகளாக அமைந்தன.

கல்வியைப் பரப்புவது, தலித் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தருவது, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது என தான் சார்ந்த சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும், எழுச்சிக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் தான் அம்பேத்கர். மத்திய அரசுப் பணிகளில் முதன் முதலாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க அம்பேத்கரின் தீவிர முயற்சியே காரணம்.

1927 டிசம்பர் 25ம் நாள் மகாராஷ்டிராவின் மகத் குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தண்ணீர் எடுக்கும் உரிமை வேண்டும் என்று போராடினார் அம்பேத்கர். அவருடைய போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். மனுஸ்மிருதியை அவர் கொளுத்தி, மனுஸ்மிருதி என்பது சாதீய அடிப்படையில் மனிதனை அடிமைப்படுத்துகிறது என்று பிரச்சாரம் செய்தார்.

தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயங்களில் நுழையும் உரிமை பெறவேண்டும் என்பதற்காக அவர் நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தையும் நடத்தினார்.

இந்தியாவில் தலித்கள் மட்டுமல்லாது, பெண்களும் ஒடுக்கப்படுவதை அம்பேத்கார் கடுமையாக எதிர்த்தார். பெண்விடுதலைக்காகக் குரல்கொடுத்தார்.
அம்பேத்கார் இன்று தலித் மக்களின் பிரதிநிதிபோல சித்தரிக்கப்படுவதனால் அவருடைய பல சிறப்புகள் பின்வரிசைக்குச் சென்றுவிடுகின்றன.

அவர் ஒரு மிகச் சிறந்த பொருளாதார மேதை. அவர் மிகச் சிறந்த பேச்சாளர். சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கார் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தார். இந்திய சுதந்திரத் தொழிலாளர் கட்சியை நிறுவியவர். கலிபோர்ணியா பல்கலைக் கழகத்தில் படித்தவர். ‘பிராப்ளம் ஆஃப் எ ருப்பீ’ என்னும் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்றவர்.

நுணுக்கமான சட்ட அறிவு பெற்றவர். மக்கள் நலனிலும், ஜனநாயகத்திலும் ஆழமான ஈடுபாடு கொண்டவர். அவர் மிகச் சிறந்த படிப்பாளியும் கூட. அவருடைய நூலகத்தில் சுமார் ஐம்பதாயிரம் புத்தகங்களைப் பாதுகாத்து வந்தார்.

பகவத் கீதையையும், இராமாயணத்தையும் முழுமையாகப் படித்து அதைக் கேள்விக்குள்ளாக்கினார் அம்பேத்கார். ராமரும், கிருஷ்ணரும் வழிபாட்டுக்குரியவர்கள் அல்ல என்னும் அவருடைய முழக்கம் அவரை இந்து மத எதிர்ப்பாளராகச் சித்தரித்தது.

‘பிறக்கும் போது தீண்டத்தகாதவனாகப் பிறந்தேன். இறக்கும் போது தீண்டத்தகாதவனாக இறக்க மாட்டேன். அதாகவது இந்துவாக இறக்கமாட்டேன்’ என்று பகிரங்கமாய் பிரச்சாரம் செய்து இந்து மதத்திலிருந்து விலகி சாஸ்திரங்களை வெறுத்த புத்தரின் மதத்தில் இணைந்தவர் அவர். அவருடைய எழுச்சி மிகுந்த பிரச்சாரம் பலரை இந்து மதத்திலிருந்து விலகி புத்தமதத்தையோ பிற மதங்களையோ தழுவினர் பலர். அம்பேத்கரின் இந்த முடிவு புத்தமதத்தின் எழுச்சிக்கு ஒரு மிகப் பெரிய காரணியாயிற்று.

புத்தமதத்தைத் தழுவியபின் அரசியலிலிருந்து விடுபட்டார். அரசியல் சூழலில் நல்லவர்களுக்கு வேலையில்லை என்பது அவருடைய தீர்மானமாக மாறிவிட்டிருந்தது. அதன்பின் இலங்கை போன்ற நாடுகளுக்கு புத்தமத கலந்துரையாடல்களுக்காக அவர் பயணம் செய்தார்.

டிசம்பர் ஆறாம் நாள் 1956, பாபாசாகேப் அம்பேத்கார், தலித் இன விடுதலைக்காய் கொழுந்துவிட்டெரிந்த விளக்கு சட்டென்று அணைந்தது. அவருடைய மறைவு தலித் விடுதலைப் போராட்டத்தின் வீரியத்தை வெகுவாகப் பாதித்தது

அம்பேத்கர் வாழ்க்கை குறிப்புகள்

அம்பேத்கரின் பெற்றோர்

தேதி குறிப்புக்கள்
1848 டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் தந்தை ராம்ஜி மாலோஜி சக்பால் பிறந்தார்.
ஜோதிராவ் புலே பூனாவில் பெண்களுக்கான ஒரு பள்ளியைத் தொடங்கினார். பெண்களுக்கென மகாராட்டிரத்தில்தொடங்கப்பட்ட முதலாவது பள்ளி இதுவே.
1851-52 ஜோதிராவ் புலே பூனாவில் தீண்டப்படாத மாணவர்களுக்கென ஒரு பள்ளியைத் தொடங்கினார்
1854 அம்பேத்கரின் அன்னை பீமாபாய் பிறந்தார்.
1866 ராம்ஜி மாலோஜி சக்பால் இராணுவத்தில் தூசிப்படைப் பிரிவில் சேர்ந்தார்.
1867 ராம்ஜி மாலோஜி சக்பால் பீமாபாயை மணந்தார்.
24.09.1873 ஜோதிராவ் புலே சத்திய சோதக் சமாஜத்தை (உண்மை நாடுவோர் சங்கம்) நிறுவினார். சூத்திரர்களைப் பார்ப்பன ஆதிக்கத்திலிருந்தும், சாத்திர, புராண சூழ்ச்சிகளிலிருந்தும் விடுவிப்பதே இச்சங்கத்தின் நோக்கமாகும்.
26.07.1874 அம்பேத்கர் வெளிநாட்டில் கல்வி கற்பதற்கு உதவிய கோல்ஹாப்பூர் சிற்றரசர் சாகு சத்ரபதியின் தோற்றம்.
1882 பரோடா மன்னர் சாயாஜிராவ் கெய்க்வாடு தீண்டப்படாத வகுப்பு மாணவர்களுக்னெப் பள்கிளைத் தொடங்கினார்.
14.04.1891 பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் மோவ்  என்ற இடத்தில் பிறந்தார்.
1894 சுபேதார் இராம்ஜி இராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். குடும்பத்தை மத்திய இந்தியாவிலிருந்து தபோலிக்குக்  கொண்டு சென்றார்.
1896 தபோலியில் இராமாபாய் பிறந்தார்.

அம்பேத்கரின் உயர்கல்வி

தேதி குறிப்புக்கள்
03.01.1908 அம்பேத்கர் பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்தார்.
05.04.1910 அம்பேத்கர் பரோடா மன்னரைச் சந்தித்துப் பேசினார். அதன் விளைவாக அவருக்குப் பரோடா மன்னரால் மாதம் ரூ.25 கல்வித் தொகையாக வழங்கப்பட்டது.
1912 சனவரி அம்பேத்கர் பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார்.
23.01.1913 அம்பேத்கர் பரோடா சென்று மன்னரிடம் பணியில் சேர்ந்தார். அங்குப் பதினோரு நாட்களே பணியில் இருந்தார். தன் தந்தைக்கு உடல்நலமில்லை என்ற தந்தி வந்ததால் பம்பாய்க்குத் திரும்பினார்.
02.02.1913 அம்பேத்கரின் தந்தை இராம்ஜி தன் 65 ஆம் வயதில் இறந்தார்.
1913 பரோடா மன்னர் அமெரிக்காவில் கொலம்பியாப் பல்கலைக் கழகத்தில் மேற்படிப்புப் படிப்பதற்காக மாணவர்களை அனுப்புவது என்று முடிவு செய்திருப்பதாக அறிவித்தார்.
04.04.1913 பரோடா மன்னர் அம்பேத்கருக்கு மூன்று ஆண்டுகளுக்கு (15.06.1913 முதல் 14.06.1916 வரை) மாதந்தோறும் 11.50 டாலர் கல்வி உதவித் தொகையை அளிப்பதற்கான ஆணையைப் பிறப்பித்தார்.
18.04.1913 அயல்நாடு சென்று படிப்பதற்கான பரோடா அரசின் ஒப்பந்தத்தில் அம்பேத்கர் கையொப்பம் இட்டார்.
23.04.1913 டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் வாழ்வும் தொண்டும் என்று ஆங்கிலத்தில் அவருடைய வரலாற்றை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளரான தனஞ்சய்கீர் பிறந்தார்.
20.07.1913 அம்பேத்கர் நியூயார்க் சென்றடைந்தார். கொலம்பியாப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்.
02.06.1915 அம்பேத்கர் கொலம்பியாப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ.தேர்வில் தேறினார். முதன்மையான பாடமாகப் பொருளாதாரத்தையும், துணைப்பாடங்களாகச் சமூகவியல், வரலாறு, தத்துவம், மாந்தவியல், அரசியல் ஆகியவற்றையும் பயின்றார்.
09.05.1916 ‘இந்தியாவில் சாதிகள்’ என்ற சிந்தனையைத் தூண்டும் படியான கட்டுரையை ஒரு கருத்தரங்கில் படித்தார். அச்சு வடிவில் வெளிவந்த அம்பேத்கரின் முதலாவது நூல் இதுவேயாகும்.
1916 மே இலண்டனில் பொருளாதாரத்தில் எம்.எஸ்., ஆய்வுப் பட்டத்தையும் மற்றும் டி.எஸ்., உயர் ஆய்வுப் பட்டத்தையும் பெறுவதற்காகவும், பாரிஸ்ட்டர் பட்டம் பெறுவதற்காகவும் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டார்.
1917 கொலம்பியாப் பல்கலைக் கழகம் அம்பேத்கரின் பி.எச்.டி., பட்டத்திற்கான ஆய்வுக் கட்டுரையை ஏற்றுக் கொண்டது.
21.08.1917 பரோடா அரசிடமிருந்து கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலம் முடிந்து விட்டதால் இலண்டனிலிருந்து இந்தியாவிற்குத் திரும்பினார்.

அம்பேத்கரின் பள்ளிப்பருவம்

தேதி குறிப்புக்கள்
1896 பீம் தபோலியில் பள்ளியில் தன் கல்வியைத் தொடங்கினார்.
07.01.1900 சத்தாராவில் அரசினர் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பீமின் பெயர் பள்ளிப் பதிவேட்டில்  ‘பீமாராவ் ராம்ஜி அம்பவடேகர்’ என்று இருந்தது; பீமின் ஆசிரியரான ‘அம்பேத்கர்’ என்பவர் ‘அம்பவடேகர்’ என்பதை  ‘அம்பேத்கர்’ என்று பள்ளிப் பதிவேட்டில் அவராகவே மாற்றிவிட்டார்.
1901 சுபேதார் இராம்ஜி தன் குடும்பத்தைச் சத்தாராவிலிருந்து பம்பாயில் கீழ் பரேல் பகுதிக்கு மாற்றினார். பீம் மராத்தா உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். உடனேயே எல்பின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.
26.07.1902 கோல்ஹாப்பூர் சிற்றரசர் சாகு சத்திரபதி தன் ஆம்சியின் கீழ் உள்ள அரசுப் பகதவிகளில் 50 விழுக்காட்டினைப்  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கென ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார்.
1907 அம்பேத்கர் மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார். அதற்காக எஸ்.கே.போலே தலைமையில் அவருக்கு ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது கெலுஸ்கர் தான் எழுதிய, ‘பகவான் புத்தரின் வரலாறு’ என்ற நூலை அம்பேத்கருக்குப் பரிசாக வழங்கினார்.

அம்பேத்கரின் வாழ்க்கை

தேதி குறிப்புக்கள்
1906 ஏப்ரலில் அம்பேத்கர் இராமாபாயை மணந்தார்.
12.12.1912 அம்பேத்கரின் மூத்தமகன் யசுவந்தன் பிறந்தார்.
1913 அம்பேத்கரின் மகன் ரமேஷ் குழந்தை பருவத்திலேயே இறந்தான்.
1917 செப்டம்பர்    பரோடா அரசில் இராணுவச் செயலாளர் பதவியில் சேர்ந்தார். தன் அண்ணனுடன் பார்சி விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். தீண்டப்படாதவர் என்ற காரணத்தால் இழிவாக நடத்தப்பட்டுத் துன்புறுத்தப்பட்டதால் பம்பாய்குக்குத் திரும்பிவிட்டார்.

நவம்பர்    அம்பேத்கரின் சிற்றன்னை ஜீஜாபாய் இறந்தார். அம்பேத்கரின் அண்ணன் ஆனந்தராவ் மறைந்தார்.

1918 மார்ச்    பெர்ட்ரண்ட் ரசல் எபதிய ‘சமூகத்தை மாற்றியமைப்பதற்கான கோட்பாடுகள்’ என்ற நூல் குறித்து அம்பேத்கர் எழுதிய திறனாய்வுக் கட்டுரை இந்தியப் பொருளாதார இதழில் வெளியிடப்பட்டது.
11.11.1918 பம்பாய் சைடன்ஹாம் கல்லூரியில் அம்பேத்கர் அரசியல் பொருளாதாரத் துறையில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். (இப்பதவியில் 11.03.1920 வரை இருந்தார்).

நன்றி

http://www.ambedkar.in/

http://xavi.wordpress.com/

முந்தைய செய்திகம்பீரமாக சுமப்போம் கருப்பு ‘மை’யை – சீமான்
அடுத்த செய்திகும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அண்ணல்அம்பேத்கார் 121 ஆவது பிறந்த தின நிகழ்வு.