எதிர்பார்த்தது போலவே இலங்கைக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ள இந்திய அரசு, நிபுணர்குழு அறிக்கையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்துள்ளதாகவும், அப்பாவி மக்களை பாதுகாப்பு வலயத்திற்குள் வரவழைத்து இலங்கை இராணுவம் குண்டு வீசி கொன்றதாகவும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இலங்கை போர்க் குற்றம் புரிந்துள்ளது உண்மைதான் என்பதை ஒப்புக்கொள்ளும் ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளிவந்தும்,மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று வீசும்போது கடைபிடிக்கும் அதே கள்ளமவுனத்தை கடைபிடித்தபடியே, தற்போது இலங்கையை போர்க் குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றுவதற்காக கமுக்கமாக களமிறங்கி உள்ளது.
இந்தியாவின் ஆதரவு தங்களுக்கு கிடைத்துள்ளதை உறுதிபடுத்தியுள்ள இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிப்பதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் அமர்வுகளின் போது நிபுணர் குழு தொடர்பான விடயங்களை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்க வேண்டாமென இந்தியா கோரியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழு அறிக்கையை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்க வேண்டுமானால்,ஐக்கிய நாடுகள் அமைப்பின் அனுமதி பெற வேண்டியது அவசியமென்று அவர் மேலும் கூறினார்.
இலங்கை இராணுவம் தமிழர்களை கொன்று குவிப்பதற்கு துணைபோன மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு, தற்போது போர்க் குற்றச்சாட்டில் சிக்கி உள்ள ராஜபக்சவை காப்பாற்ற முட்டுக்கொடுக்க தொடங்கி இருப்பது, தமிழர்களுக்கு இழைக்கும் பச்சை துரோகம் என இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கு தமிழக தலைவர்கள் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதே சமயம் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் இங்கே மற்றொன்றையும் குறிப்பிடுகிறார்கள்.
“போர்க் குற்றத்திற்காக இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப்படுமானால்,ஆயுத உதவி மட்டுமல்லாது போர் வியூகம் அமைத்து கொடுத்தது வரையிலான இந்திய அரசு அளித்த உதவியை இலங்கை காட்டிக்கொடுக்கும்.
அது மட்டுமல்லாது,கிளிநொச்சி வீழ்ந்தவுடன் போரை நிறுத்தி புலிகளை நிர்ப்பந்தத்தின் மூலம் சரணடைய செய்யவோ அல்லது பேச்சுவார்த்தைக்கு வரவோ செய்யலாம் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்.ஆனாலும் அப்பாவி தமிழர்கள் உயிர் இழந்தாலும் பரவாயில்லை; போரை தொடர்ந்து நடத்தி புலிகளை முற்றாக அழித்தொழிக்குமாறு இந்தியாதான் கூறியது.
எனவே போரில் பொதுமக்கள் பலியானதற்கு இந்தியாதான் காரணம் என்று கூறி காட்டிக்கொடுக்கவும் இலங்கை தயங்காது என்பதால்தான், இலங்கையை காப்பாற்ற பதறி துடித்துக்கொண்டிருக்கிறது மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு.
எனவே இதர உலக நாடுகளின், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் முயற்சி ஊடாக ஐ.நா.வில் ‘வீட்டோ’ அதிகாரம் கொண்ட சீனாவையும், ரஷ்யாவையும் கட்டுப்படுத்தி, இலங்கைக்கு எதிராக உலகநாடுகளை அணி திரட்டினாலொழிய நியாயம் கிடைக்காது” என்கின்றனர் அவர்கள்.
நன்றி : வெப்துனியா