வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ள கறுப்பு பணத்தை மீட்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த மனு, நீதிபதிகள் பி.சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்தை பார்த்து, நீதிபதிகள் காட்டமாக கேள்வி கேட்டனர். நீதிபதிகள் கூறியதாவது:
கறுப்பு பண பிரச்சினையில், மத்திய அரசின் முழுமையான பங்கேற்பு அவசியம். அந்த கறுப்பு பணம் எங்கிருந்து வந்தது என்பது முக்கியமான கேள்வி. அந்தப் பணம், தீவிரவாதிகள் பணமாகவும் இருக்கலாம், போதை மருந்து கடத்தலால் கிடைத்த பணமாகவும் இருக்கலாம்.கறுப்பு பண பிரச்சினையில், ஒரே நபரை (ஹசன் அலி) குறிவைத்து விசாரணை நடைபெறுவது ஏன் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் வைத்துள்ள மற்றவர்களின் பெயர் ஏன் வெளியே வரவில்லை?
இந்த ஒருநபர்தான் கறுப்பு பணம் வைத்துள்ளாரா? மற்றவர்களின் வங்கிக் கணக்குகள், சந்தேகத்துக்குரியவையாக இல்லையா? மற்றவர்களின் வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்கள் மத்திய அரசிடம் இல்லையா? கறுப்பு பண பிரச்சினை, ஒரே நபரை சுற்றி வருவது ஏன்? அப்படியானால், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணம் எல்லாம் ஒரே நபருக்கு சொந்தமானதா?” என்றனர்.
அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், ‘கறுப்பு பண விவகாரத்தை, வெவ்வேறு விசாரணை அமைப்புகள் விசாரிக்க வேண்டியுள்ளது. சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பணம் குறித்து ரிசர்வ் வங்கியிடம் உச்சநீதிமன்றம் கேட்க வேண்டும். அதன் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம். பாஸ்போர்ட் விவகாரம், வெவ்வேறு மாநிலங்கள் சம்பந்தப்பட்டது என்பதால், அதை சி.பி.ஐ.தான் விசாரிக்க வேண்டும்’ என்று பதிலளித்தார்.
தூங்கினீர்களா?
இந்த பதில் நீதிபதிகளை கோபம் கொள்ள வைத்தது.
“அப்படியானால், கறுப்பு பண பிரச்சினையில், இத்தனை ஆண்டுகளாக அனைத்து அரசு விசாரணை அமைப்புகளும் தூங்கிக்கொண்டு இருந்ததாக சொல்கிறீர்களா? இந்த பிரச்சினையை வெவ்வேறு அமைப்புகள் விசாரிக்க வேண்டும் என்று இப்போது சொல்கிறீர்கள். ஹசன் அலியைத் தவிர, வேறு யாரும் சந்தேகத்துக்குரியோர் பட்டியலில் இல்லை என்று கூறுகிறீர்களா?
2009-ம் ஆண்டில் இருந்து இப்பிரச்சினையை விசாரித்து வருகிறீர்கள். என்ன தகவல் வைத்து இருக்கிறீர்கள்? அந்த கறுப்பு பணம், தீவிரவாதிகள் பணமா அல்லது போதை மருந்து கடத்தலால் கிடைத்த பணமா என்று தெரிய வேண்டும்.
அமலாக்கப்பிரிவு நடத்திய விசாரணையில், ஒரு குழும நிறுவனம் ரூ.600 கோடி கறுப்பு பணத்தை வெளிநாட்டு வங்கியில் போட்டு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அது எங்கிருந்து வந்தது?” என்றனர் காட்டமாக.
அப்போது சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், “இப்பிரச்சினையை அமலாக்கப் பிரிவு சரியாக விசாரித்து வருவதாகவும், வெவ்வேறு விசாரணை அமைப்புகள் இணைந்த, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கத் தேவையில்லை”, என்றும் கூறினார்.
சிறப்பு குழு
ஆனால் அதை நீதிபதிகள் ஏற்கவில்லை. அவர்கள் கூறியதாவது:
“இந்த விசாரணையில் தங்களுக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று அமலாக்கப்பிரிவே பலதடவை கூறியுள்ளது. எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் விசாரிப்பதுதான் நல்லது. அந்த விசாரணையை, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு தலைமை நீதிபதி போன்ற ஒரு நபர் கண்காணிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் விசாரிப்பதில் தவறு இல்லை.
யாருடைய அதிகாரத்தையும் யாரும் மீற மாட்டார்கள். இது சீரியசான பிரச்சினை என்பதால், ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் விசாரிக்க வேண்டும். அதற்காக சிறப்பு விசாரணைக் குழு அமைப்பது பற்றி மத்திய அரசின் உத்தரவை பெறுங்கள்,” என்றனர்.
அடுத்தகட்ட விசாரணையை 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.