கண்ணகி கோட்டத்தில் தமிழர் உரிமையை நிலை நாட்ட விரைவில் போராட்டம்-சீமான்

55

இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தின் தெற்கு எல்லையில் கூடலூர் அருகிலுள்ள பளியன்குடி என்னுமிடத்திலிருந்து வனப்பகுதியில் இருந்து  6 கிலோ மீட்டர் தொலைவில்  தமிழருக்குச் சொந்தமான மங்கலதேவி கண்ணகி கோட்டம் இருக்கிறது.பாண்டிய மன்னன்  தவறாக நீதி வழங்கிய மதுரை மாநகரமே தீப்பற்றி எரியட்டும் என்று கண்ணகி சாபம் விட்டு மதுரையை எரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறி 14 நாட்கள் நடந்து திருச்செங்குன்றம் சென்றதாகவும் அது இந்த இடம் தான் என்றும் வரலாறு சொல்கிறது.அதன் நினைவாக மங்கலாதேவி கண்ணகி கோயில் இருக்கிறது.காலம் காலமாகத் தென் மாவட்டத் தமிழர்கள் இங்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.இது தமிழர் தம் தாய் நிலமாகும்.இங்கு வேறு யாருக்கும் உரிமை இல்லை.இதனைப் பல்வேறு கட்டங்களில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகளால் நடத்தப்பட்ட சர்வேக்களும் நிரூபிக்கின்றன.

இங்கு செல்வதற்கு தமிழ்நாட்டில் இருந்து முறையான சாலை வசதி மட்டும் இல்லாமல் இருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கேரள அரசு நயவஞ்சகமாக  1976-ல் கேரள வனப்பகுதி வழியாக, தேக்கடியில் இருந்து கண்ணகி கோவிலுக்கு அவசர அவசரமாக ஒரு பாதை அமைத்தது. இவ்வாறு போடப்பட்ட இந்தப் பாதையின் வழியாகத்தான், தமிழக பக்தர்கள், கண்ணகி கோயிலுக்கு செல்ல வேண்டியிருந்தது.  இந்த சாலையை மட்டும் வைத்துக் கேரள அரசு கண்ணகி கோயில் கேரளாவிற்குச் சொந்தமானது என்று கடந்த பல வருடங்களாக உரிமை கொண்டாடுகிறது.அதன்பின் அமைந்த திராவிட அரசுகள் இதில் உரிய கவனம் செலுத்தாததால் நமது கோட்டம் நம்மை விட்டுப் பறி போய் விட்டது.இதன்பின்பு அங்குள்ள தமிழர்கள் கண்னகி கோட்டத்திற்கு உரிமை கொண்டாடி இதற்காக பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியும் இது வரை உரிய தீர்வு கிட்டவில்லை.

ஆனால் மறுபுறமோ கேரள அரசின் திமிர்த்தனம் அளவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.கோவிலுக்குச் செல்லும் பாதை தன்னிடம் இருப்பதால்  முதலில் கோவிலை ஆக்கிரமிப்பு செய்து உரிமை கொண்டாடிய கேரள அரசு இப்பொழுது ஒவ்வொரு வருடமும் நமது பக்தர்களிடம் செய்யும் சண்டித்தனம் புதிது புதிதாக அதிகரித்து வருகிறது.வருடம் முழுவதிலும் வழிபட்ட  பக்தர்களை முதலில் அனுமதிக்க மறுத்த கேரள அரசு  வருடத்திற்கு முழுநிலவு அன்று ஒரு நாள் மட்டுமே பக்தர்களை இங்கு பலத்த கெடுபிடிகளுக்குப் பின் அனுமதிக்கிறது.மேலும் அங்குள்ள கண்ணகி சிலையையும் திட்டமிட்டு களவாடிச் சென்று விட்டு சிலை காணாமல் போய் விட்டதாக நாடகமாடுகிறது.மேலும் திட்டமிட்டு பல்வேறு பிரச்சனைகளை தமிழருக்கு உருவாக்குகிறது.குறிப்பாக இங்கிருந்து செல்லும் தமிழர்களுக்கு ஜீப் கட்டணத்தை மலையாளிகள் திட்டமிட்டு கொள்ளையடிப்பதற்கு அங்கீகாரம் தருகிறது.சாலை வசதிகளும் மிக மோசமாக இருக்கிறது.மேலும் அங்கு செல்லும் தமிழர்கள் பாதுகாப்பான பயணமும் மேற்கொள்ள முடிவது இல்லை.மொத்தத்தில் அங்கு தமிழர்கள் வருவதை கேரள அரசு துளியும் விரும்புவது இல்லை.இதற்கு முக்கிய காரணம் அந்தப் பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கும் எண்ணமே ஆகும்.ஆகவே முதற்கட்டமாக இந்த வருடம் தேனி மாவட்ட ஆட்சியர் பவுர்ணமி நிலவன்று கண்ணகி கோட்டம்  செல்லும் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்கு கேரள இடுக்கி மாவட்ட ஆட்சியருடன் பேசி உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

திருவிழா முடிந்த பின்பு தமிழக அரசு நமது பகுதியில் இருந்து கண்ணகி கோட்டம் செல்ல உரிய சாலை வசதிகளை செய்து கொடுத்து  நமது இழந்த பகுதிகளையும்,உரிமைகளையும்  மீட்டெடுக்க வேண்டும்.இல்லையெனில் நாம் தமிழர் கட்சி அப்பகுதி  மக்களுடன் இணைந்து அதற்கான போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறோம்.

முந்தைய செய்திஐ.நாவின் 196 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை என்ன? – முழுமையான அறிக்கை
அடுத்த செய்திதமிழினப் படுகொலை செய்த அரசிடமே விசாரணைப் பொறுப்பா? ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரை நியாயமற்றது – சீமான் கண்டனம்