ஈழத்தமிழர்களுக்கான உரிமையை மீட்டு தருமாறு – நெல்லை கிருஷ்ணமூர்த்தி தீக்குளித்து இறந்தார்.

19

சங்கரன்கோவில் அருகே உள்ள சீகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசுப்பு. இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 24). இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது அவரது மனதை பாதித்தது. சமீபத்தில் இண்டர்நெட்டில் இலங்கை தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட படங்கள் வெளியானது.

தீக்குளிப்பு

நேற்று அதிகாலை 5 மணி அளவில், தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஒவ்வொரு லிட்டராக 3 லிட்டர் பெட்ரோலை, தன் மீது ஊற்றி கொளுத்திக் கொண்டு ஓடினார். அப்போது அவரது தாய், தந்தை மற்றும் சிலர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

ஆனாலும் தன்னுடைய வேதனையை வெளிக்காட்டிக் கொள்ளாத கிருஷ்ணமூர்த்தி, இலங்கையில் தமிழர்களை கொலை செய்துவிட்டார்கள். பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் ராஜபக்சே அரசு கொன்றுவிட்டான். இனி நான் இருந்து என்ன பயன். அதனால் நான் தீக்குளிக்கிறேன். அந்த ராஜபக்சேவை தூக்கில் போடுங்கள்… என்று கதறியபடி கிருஷ்ணமூர்த்தி மயங்கி விழுந்தார்.

உடனே கிருஷ்ணமூர்த்தியை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கிருஷ்ணமூர்த்தி தான் கைப்பட எழுதிய கடிதம், அவரது குடும்பத்தாரிடம் கிடைத்தது.

அந்தக் கடிதம்:

அன்று ராவணன் செய்த கொடுமையான செயல்களை இன்று சிங்களவர்கள் செய்து விட்டார்கள். அவர்களுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். இலங்கையில் சிங்களவர்களின் இனவெறி தாக்குதலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அதற்குரிய பலனை பெற்றுத் தர வேண்டும். இலங்கை தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு தனி நாடு என்ற சிறப்பை பெற்றுத் தர வேண்டும்.

அதுவரை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்கக் கூடாது. அப்படி பொறுப்பேற்றால், தயவு செய்து விஷ்ணுவின் பிறப்பு என்று சொல்லிக்கொள்ளும் கோயில்கள் அனைத்தையும் மூடிவிடுங்கள். இந்திய ஆட்சியாளர்கள்தான் இன்றைய சூர்ப்பனகை.

இலங்கை தமிழர்களுக்காக போராடிய போராட்டத்தில் முத்துக்குமாரே சிறந்தவர். இலங்கை தமிழர்களுக்காக போராட மீண்டும் என் ஆஞ்சநேயரை அழைக்கிறேன்.

அப்பா, அம்மா, சீனி, தினகரன் என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு பிறவியில் கொடுக்கப்பட்ட தொழில் இதுதான். இதை நான் செய்யாவிட்டாலும், மிகப்பெரிய குற்றவாளி நான்தான்,” இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

இது குறித்து கிருஷ்ண மூர்த்தியின் பெற்றோர் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு தெரிவித்தனர். உடனே அவர் இன்று காலை சீகம்பட்டியில் உள்ள கிருஷ்ண மூர்த்தி வீட்டுக்கு விரைந்தார். அங்கு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த கிருஷ்ண மூர்த்தியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

முந்தைய செய்திபோரின் போது ஐ.நா ஏற்படுத்திய குருதிக்கறைகளை அதன் அறிக்கை அழித்துவிடாது: த ரைம்ஸ்
அடுத்த செய்திஇலங்கை அரசுக்கு உதவி செய்த மத்திய அரசு தமிழர்களிடமும் ஈழத்தமிழர்கள் ஆதரவாளர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் – கொளத்தூர் மணி