பதிமூன்றாம் நாளாகத் தொடரும் கோவை சட்டக்கல்லூரி மாணவர் போராட்டம்

26

கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் பெண்கள் விடுதியில் எந்த அடிப்படை வசதியும் இல்லாதது குறித்தும், மாணவிகளை தரக்குறைவாகப் பேசுவதோடு இந்துத்வா உணர்வை அப்பட்டமாக வெளிப்படுத்தி வரும் பேராசிரியை தாமரைச் செல்வி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடந்த 24.2.11 அன்று உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கினர்.

இப்போராட்டத்திற்கு முழுமுதல் காரணமான தாமரைச் செல்வி பத்து ஆண்டுகளுக்கு முன்பு கோவை குடும்ப நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். அது ஒப்பந்த அடிப்படையிலான பணி என்பதால் ஒப்பந்த காலம் முடிந்ததும் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞர்களில் ஒருவராகப் பணிபுரிந்தார். இந்தப்பணியை அவரே விரும்பி முயன்று பெற்றதாகவும், இஸ்லாமியர்களூக்கு எதிராக வழக்கு நடத்தவே இப்பணிக்கு வந்தார் என்று பேசப்பட்டது. ஏனெனில் மாவட்ட நீதிபதிக்கு இணையான குடுப்ப நல நீதிபதி பொறுப்பில் இருந்தவர் மற்றொரு நீதிபதி முன் வழக்காட வேண்டிய அரசு வழக்குரைஞர் பொறுப்பை ஏற்றுக் கொள்வது அபூர்வம்.

குண்டுவெடிப்பு வழக்கு முடிந்ததும் கோவை அரசு சட்டக் கல்லூரியில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

தமிழக சட்டக் கல்லூரிகள் அனைத்தும் ஆதிக்க சாதி மாணவர்கள், தலித் மாணவர்கள் என்று இரண்டாகப் பிளந்து கிடப்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆன்மீகம், யோகா தியானம் என்றெல்லாம் இவர் வகுப்பெடுக்கும் நேரங்களில் பேசுவது வழக்கம்.

பேராசிரியை, பின்பு அடுத்தகட்டமாக சைவ உணவின் மேன்மை குறித்தும் அசைவம் உண்பவர்கள் மிருகத்திற்குச் சமானம் என்றும் வகுப்பறையிலேயே பிரச்சாரம் நடத்தத் தொடங்கினார். சகிக்க முடியாத மாணவர்கள், சைவ உணவு உண்பவர்கள் எந்த விதத்தில் மேன்மையானவர்கள்? அதற்கு விஞ்ஞானப்பூர்வமான ஆதாரம் ஏதாவது உண்டா? என்று கேட்டனர். சாதி என்ற பெயரில் சக மனிதர்களை கற்பனைக்கெட்டாத கொடுமைகளுக்கு ஆளாக்கியவர்கள் சைவ உணவு உண்பவர்கள்தானே?

மாணவர்களின் கேள்விகளுக்கு முகம் கொடுக்க முடியாத ஆசிரியை என்னோடு பேச உங்களுக்குத் தகுதியே இல்லை, ஆடுமாடு தின்பவர்களோடு என்னால் பேசமுடியாது என்று சொல்லிவிட்டார். அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் தலித்து மாணவர்களைக் கேவலப்படுத்துவதாகவும் பாரபட்சம் காட்டுவதாகவும் இருந்தது.

சுத்தமான காவி உடையில் கல்லூரிக்கு வருவதும், தன் அறை முழுவதும் சாமி படங்களை ஒட்டி வைத்திருப்பதும் அவரது வழக்கம். தனது தொடர்ச்சியான பிரச்சாரத்தின் மூலம் அவர் ஒரு மாணவர் குழுவையும் உருவாக்கிவிட்டார். அந்த மாணவர்கள் பெரும்பாலும் ஆதிக்க சாதிப் பின்ணணியிலிருந்து வந்தவர்கள். அவர்களை சாமியார்கள் நடத்தும் யோகா தியான வகுப்புகளுக்கு அனுப்பிவிட்டு அவர்கள் வகுப்புக்கு வந்ததாக அட்டண்டென்ஸ்ஸும் கொடுத்துவிடுவார். (இவரைத்தான் டிஸிப்ளினேரியான் என்கிறார்கள்) இந்த மாணவர்கள் பின்பு ஏபிவிபி-ல் இணைந்து கொண்டார்கள்.

இவர் முன்பு நீதிபதியாக இருந்தவர் என்பதால் கல்லூரி முதல்வர் இவரது செயல்களை தட்டிக் கேட்க முடியாதவராக இருந்தார். முதல்வரையே இவர் ஒருநாள் கூட பிராக்டீஸ் செய்யாதவர் என்று கிண்டல் செய்வார்.

மாணவர்களை தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பொருட்டு விடுதி, இண்டெர்னல் மதிப்பெண்கள் கொடுக்கும் பொறுப்பு ஆகியவற்றை கேட்டுப் பெற்றுக் கொண்டார். இதன் மூலம் தனது நடவடிக்கைகளைத் தட்டிக் கேட்பவர்கள் கல்லூரிப்படிப்பை முடிக்க முடியாது என்று மிரட்டி வருகிறார்.

எந்த வசதியும் இல்லாத மாணவிகள் விடுதியை மேம்படுத்த இவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் பத்து நிமிடம், இருபது நிமிடங்கள் தாமதத்திற்கெல்லாம் காது கூசும் சொற்களால் மாணவிகளை ஏச இவர் தயங்கியதுமில்லை. விடுதியை விட்டு மாணவிகளை துரத்துவதையே நோக்கமாகக் கொண்டிருந்தார் என்று தோன்றுகிறது. மாணவிகள் தனியாக தங்கிப்படிப்பது இவரது இந்துத்துவ மனதுக்கு ஏற்புடையதாக இல்லாமலிருக்கலாம்.

இவரது நெருக்கடிகளால் தற்போது இரண்டே இரண்டு மாணவிகள் தான் விடுதியில் உள்ளார்கள். அவர்களையும் மோசமாகப் பேசவே தற்போதைய போராட்டம் வெடித்தது. மாணவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் இவரது நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் பெண்கள் உட்பட மாணவர்களீன் கண்ணியத்தை பாதிக்குமளவிற்குப் பேசத்தொடங்கியதோடு, உங்கள் வாழ்வைத் தீர்மானிக்கும் அதிகாரம் என்னிடம் இருக்கிறது என்று மிரட்டத் தொடங்கியதுமே போராட்டத்தில் இறங்க வேண்டிய நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டது.

பிற்காலங்களில் அதிகார மையங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய வழக்குரைஞர்களை உருவாக்கும் சட்டக் கல்லூரியில் தங்கள் ஆதரவாளர்களை அமர்த்தும் இந்துத்துவவாதிகளின் தந்திரம் ஒன்றும் புதிதல்ல.

வெளிப்பார்வைக்கு இவர்கள் பேசுவது தூய ஆன்மீகம், ஒழுக்க வாதம் என்பதுபோல் தோன்றினாலும், மனிதனை மனிதன் கேவலப்படுத்தும், சாதிப்பாகுபாடுகளை ஊக்கப்படுத்தும் குரூரம் உள்ளிருப்பது செயல்பாடுகளில் வெளிப்படுகிறது.

ஒரு ஆசிரியை தனது வீட்டிலோ அல்லது தான் விரும்பும் மத நிறுவனங்களிலோ மதப்பிரச்சாரம் செய்வதை யாரும் எதிக்கவில்லை. அனைத்து சாதி, மதப்பிரிவினரும், அனைத்துவிதமான பண்பாட்டுப் பின்னணியிலிருந்து வந்தவர்களும், அனைத்து விதமான உணவுப் பழக்கவழக்கங்கள் கொண்டவர்களும் பயிலும் ஒரு கல்லுரியில் குறிப்பிட்டவர்கள் உயர்ந்தவர்கள், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்று பாரபட்சம் காட்டுவதையும், அதிகாரத்தையும், மற்ற சலுகைகளையும் காட்டி மாணவர்களை ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை நோக்கி இழுப்பதையும் தான் மாணவர்கள் எதிர்த்துப் போராடுகிறார்கள்.

கோவையிலுள்ள அனைத்து முற்போக்கு இயக்கங்களும் இந்த மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக உள்ளன. இதை ஆதரிப்பது தமிழக மக்கள் அனைவரின் கடமையாகும்.

ஆனால் முடிவெடுக்க வேண்டிய சட்டக் கல்வித்துறை இயக்குனரகம் அமைதியாக இருக்கிறது.

அதேநேரம் கல்லூரிக்குள் இருந்து போராடிவரும் மாணவர்களுக்கு உணவும், நீரும் அனுப்புவதை போலீஸ் மூலம் தடுத்து மாணவர்களைப் பட்டினி போட்டு வழிக்கு கொண்டுவர முயல்கிறது. மாணவர்கள் போராட்டம் தோல்வியடையும் பட்சத்தில் நமது கல்வி நிறுவனங்களில் பிரச்சாரம் செய்ய இந்துத்துவாவினருக்கு சிவப்புக் கம்பளம் விரித்ததாகிவிடும். நமது இளம் மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கவும், பிரிவினையைத் தூண்டவும் அவர்கள் மேலும் ஊக்கம் பெறுவார்கள்.

எனவே நமது கல்வி நிறுவனங்களில் ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் நிலைநாட்ட வேண்டும் என்று கருதும் நண்பர்கள் தோழர்கள் அனைவரும்

1. முதலமைச்சர் செல்
தலைமைச் செயலகம்
சென்னை

2. சட்டக் கல்வித்துறை இயக்குனரகம்
புரசைவக்கம் ஹைரோடு,
கீழ்பாக்கம்,
சென்னை 10

என்ற முகவரிகளுக்கு

பேராசிரியை தாமரச் செல்வி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மின்னஞ்சல்,பேக்ஸ், தந்தி, கடிதம் போன்ற ஏதாவது ஒரு வழியில் செய்தி அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம்.

– மாணவர் போரட்டக் குழு

நன்றி

கீற்று

முந்தைய செய்திகலைஞருக்கு ஒரு திறந்த மடல்! தமிழருவி மணியன்
அடுத்த செய்தி[காணொளி இணைப்பு] பதிமூன்றாவது நாளாகத் தொடரும் கோவை சட்டக்கல்லூரி மாணவர் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு.