சண்டே இதழில் வெளிவந்துள்ள சீமானின் தோழர்கள் கட்டுரை

535

சீமானின் தோழர்கள்தன் கூட்டங்களுக்கு திரளும் படித்த இளைஞர்களை ஆக்கபூர்வமான அரசியல் சக்தியாக மாற்றவேண்டிய கடமை சீமானுக்கு இருக்கிறது. அதை அவர் உணர்ந்துள்ளாரா? என்.அசோகன்

அடுத்து சீமான் பேசுவார் என்று அறிவித்தார்கள். அவருடைய பாஞ்சாலங்குறிச்சி, வீரநடை போன்ற படங்களையெல்லாம் பார்த்திருந்த காரணத்தால் எழுந்து வெளியே தேநீர் அருந்த போகலாம் என்று முடிவுசெய்தேன். சிலரின் முட்டிகளை இடிக்காமல் வெளியே போகமுடியாது என்பதால், வேறு வழியின்றி இருக்கையில் சாய்ந்து அமர்ந்தேன். கறுப்பாய் கம்பீரமாய் இருந்த ஓர் இளைஞர், மேடையில் ஏறினார்.  சட்டையை இன் பண்ணாமல் விட்டிருந்தார்.  கணீரென்ற, மிக எளிதாக உச்சஸ்தாயியை எட்டி இறங்கும் குரலில் பேச ஆரம்பித்தார்.  உணர்ச்சி பொங்கும் தென்தமிழக பேச்சுத்தமிழ். வெளியேறும் எண்ணம் காணாமல்போனது. தந்தை பெரியாரின் கருத்துகளைத்தான் அந்த மேடையில் அவர் பேசினார். கிளிஜோசியம் பற்றி, ‘‘உன் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று ஒரு கிளிக்குஞ்சுக்கா தெரியும்?’’ என்று அவர் சீறியது நினைவிருக்கிறது. சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்ட ஏதோ ஒரு நூல் வெளியீட்டு விழா அது.

அதன்பின் சீமானின் உரத்தக் குரலுக்கு  நிறைய வேலைகள் இருந்தன. அவர் ஈழம் சென்றார். ‘தம்பி’ படம் எடுத்தார். இமைக்காமல் மாதவனை படம் முழுக்க உறும வைத்தார். வாழ்த்துகள் படம் எடுத்தார். கலைஞரிடம் சென்று ‘வாழ்த்துகள்’ வாங்கியும் வந்தார்.  2008&இல்  ஈழப்போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட சீமான்,  அதற்கு ஆதரவு திரட்ட உலகம் முழுக்க பேச ஆரம்பித்தார்.

அவர் பேச்சு,  தமிழ் உணர்வுகொண்ட ஈழ ஆதரவாளர்களைக் கவர்ந்தது. ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குக் கேட்கும் என அவர் கத்திப்பேசியது இந்திய அரசுக்குத்தான் கேட்டது. முதல் சிறைவாசம் மதுரையில். மீண்டும் ஈரோட்டில் முழங்கி இரண்டாம் சிறைவாசம் கோவையில். பின்னர் புதுச்சேரியில் வழக்குப் போட்டு சிறையில் அடைத்தார்கள். அதில் பாளையங்கோட்டையில் பேசியதற்காக தேசிய பாதுகாப்புச்சட்டமும் இணைந்தே பாய்ந்தது. மூன்றரை மாதம் கழித்து, அந்த சிறைவாசத்தில் இருந்து மீண்டு வந்த இரண்டாவது நாளே நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்குப் புறப்பட்டார்.  காங்கிரஸை வீழ்த்துவோம் என முழங்கினார். சீமானின் அனல்கக்கும் பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்தார்கள்.  ஒரு சில இடங்களில் அவர் பேச்சுக்குப் பலன் இருந்தாலும்  மற்ற இடங்களில் காங்கிரஸ் வென்றதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

2010 மே 18&ல் நாம் தமிழர் இயக்கத்தை கட்சியாக அறிவித்தார். பின்னர் தமிழ் மீனவர்கள் விவகாரத்தில் ‘மீனவரை அடித்தால் தமிழகத்தில் இருக்கும் சிங்கள மாணவனை அடிப்போம்’ என்றார். மீண்டும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் வந்தது. வேலூர் சிறை அவரை வரவேற்றது. ஐந்தரை மாதப் போராட்டத்துக்குப் பிறகு சிறைவாசத்தை  உடைத்து வெளியே வந்தார், இப்போது சீமான் முழுநேர தமிழ்த்தேசிய அரசியல்வாதி. நான்கு முறை சிறைக்கொட்டடிக்கு தன் கொள்கைக்காகச் சென்றுவந்த  விழுப்புண்கள் இருக்கின்றன.

விஜய்யை வைத்து பகலவன் படம் எடுக்கத் திட்டமிட்டிருந்தார். அவரும் அரசியல்வாதியாகிவிட்ட நிலையில், எப்போது எடுப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் சீமானைப் பற்றி இங்கே எழுதியாகவேண்டும். ஏனெனில் தமிழக அரசியலில் எப்போதும் பிரதான கட்சிகளுக்கு வெளியே ஓடிக்கொண்டிருக்கும்  தனித்த தமிழ்த் தேசிய அரசியலின் முக்கிய மையங்களில் ஒருவர் இன்று சீமான்தான்.

தமிழ்த்தேசியம் என்பது மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கத்தில் முளைத்து, திராவிட அரசியலின் ஊடாக ஓடியது. அண்ணாவுக்குள்ளும் இது ஆழமாக இருந்தபடியால் தேர்தல் அரசியலில் இருந்தபோதும் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாடு என்று  பெயர்வைத்தார். அவருக்குப் பின்னால் கலைஞர், நாவலர் போன்றவர்கள் மொழி உணர்வு, தமிழ் உணர்வு என்றெல்லாம் நிறையப் பேசினார்கள்.  இந்நிலையில் தமிழ்த் தேசியம் தீவிரவாத முகமும் கொண்டது. ஆனால் அது அடைந்தது தோல்வியே. ஆனால் அந்தப் போராட்ட முகம் கடல்கடந்து இலங்கையில் வலுப் பெற்றது. இங்கே தமிழ்த்  தேசியம் பேசுபவர்களுக்கு உந்துதலாகவும் அது இருந்தது.  வைகோ, பழ.நெடுமாறன் போன்ற தலைவர்கள் ஈழ ஆதரவுக்காக கொடுமையான சிறைவாசம் அனுபவித்தார்கள்.

இதன் பின்னர் இலங்கையில் போர் வெடித்து, அதன் காரணமாக நடந்த  தமிழ் இனப்படுகொலை முந்தைய தலைமுறை தமிழ்த் தேசியவாதிகளை கையறு நிலைக்குக் கொண்டுபோய் கண்ணீர்விட வைக்க, கற்றறிந்த புதிய இளம் தமிழ்த் தலைமுறைக்கு கோபமே வந்தது. முத்துக்குமார் அக்கோபத்தின் வெளிப்பாடு.மையநீரோட்டக் கட்சிகளின்பால் ஈடுபாடற்று, கல்லூரியில் பயின்று, கணிப்பொறி கற்று, தாராளவாதத்தின் சுவைகளை அறுவடை செய்து கொண்டிருக்கும் தற்போதைய இளைஞர் கூட்டத்தில் இருக்கும்  தமிழ்த் தேசிய ஆர்வலர்களைப் பார்க்கவேண்டுமா? எங்கு சீமான் கூட்டம் நடந்தாலும் போங்கள். அங்கு காலர் இல்லாத, புரட்சிகர வாசகங்கள் எழுதப்பட்ட பனியன்களை அணிந்த, அரும்பு மீசை, அல்லது அதுகூட இல்லாத இளைஞர்களைப் பார்க்கலாம்.

‘‘சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு வேலையிலிருந்து ஓய்வுபெற்றவர்கள் ஆடி அசைந்து தமிழ் உரிமைக் கூட்டங்களுக்கு வருவார்கள். ஆனால் இன்று சீமானின் கூட்டங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் பார்க்க முடிகிறது. கிரிக்கெட், சினிமா, கணிப்பொறி, ஷாப்பிங் மால் என்று சுற்றித்திரியும் இவர்களை ஈர்த்து ஒரு அரசியல்பால் ஆர்வம்கொள்ள வைத்திருப்பது சீமானின் வெற்றியே’’ என்று கருத்துக் கூறுகிறார் ஒரு அரசியல் நோக்கர்.

முத்துக்குமாரின் மரணம் தமிழ் உணர்வு கொண்ட இளைஞர்களிடம் எழுச்சியை உருவாக்கியது. அதில் கணிசமானவர்கள் இன்று சீமானின் கூட்டங்களுக்கு வருகிறவர்கள்.  இவர்கள்தான் அவரது கட்சியிலும் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் ஆட்சிமாற்றத்தை உருவாக்கி விடக்கூடிய அளவுக்கு பெரிய சக்தி அல்ல. ஆனால் தமிழ் மொழி பேசும் இனத்திற்கான உரிமைகள் குறித்து ஆவேசமாக சிந்திப்பவர்கள். மைய நீரோட்ட திராவிடக் கட்சித் தலைவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை வைத்திருப்பவர்கள். திராவிடம் என்றவுடன் ஞாபகம் வருகிறது. சீமான் திராவிட அடையாளத்தைத் துறந்தவர். தமிழன் என்ற அடையாளத்தை வலியுறுத்துகிறவர்.  அவரது வாழ்வியல் ஆசான் தந்தை பெரியாரின் கொள்கைகளுடன் முரண்பட்டு பெரியாரிய வாதிகளிடம்  குட்டுப்பட்டவர். பெரியார்  திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சீமானை தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்திக் கொள்ளமுடியாது என்றார். நமது பேட்டியில் சீமான், ‘‘திராவிடத்தை நான் எதிர்க்கவில்லை. அதே சமயம் ஏற்கவும் இல்லை’’ என்கிறார். தமிழகத்தில் தமிழரைவிட தமிழுணர்வு அதிகம் கோண்ட தெலுங்கு, கன்னட தாய்மொழியாளர்களுக்கு  என்ன பதில் சொல்வது என்று யாரும் அவருக்கு எடுத்துச் சொல்லியிருக்கக் கூடும். அல்லது அவரது தலைவரான பிரபாகரன் கொண்டாடிய  எம்.ஜி.ஆரின் பின்புலம் ஞாபகம் வந்திருக்கக்கூடும். ‘தாயே தமிழே வணக்கம் அம்மா’ என்ற பெயரில் வாழ்ந்து அழிந்த தமிழினத்தின் வரலாற்றை அவர் நூலாக எழுதி வருகிறார். இந்த நூல் அவரது கொள்கைகளை விளக்கக் கூடும்.
தமிழக அரசியலில் காங்கிரசுக்கு மாற்றாக வளர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம், அடிப்படையில் படித்த இளைஞர்களால் வளர்ந்த கட்சி. 40  வயதில் கட்சியை ஆரம்பித்தார் அண்ணா. அவர் கட்சியில் அவர்தான் மூத்த தலைவர், மீதி அத்தனை பேரும் தம்பிகளே. இளைஞர்கள் திரண்டார்கள்; மாணவர்கள் திரண்டார்கள்; பின்னர் பொதுமக்கள் திரண்டார்கள். காங்கிரசை திமுக, ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்றியது.  பின் இக்கட்சி களின் இளைஞர்கள் எல்லாம் முதியவர் கள் ஆனார்கள். ஆனால் தமிழ் உணர்வை வெறும் மேடை அலங் காரமாக மட்டும் பயன்படுத்துவதைக் கண்டு, கசந்த அடுத்த தலைமுறை தமிழுணர்வு கொண்ட இளைஞர்கள் நமக்கு யார் தலைவர் என்று கேட்டுக்கொண்டபோது வைகோ புயலாகப் புறப்பட்டு வந்தார். ஆனால் அரசியல் சமரசங்களை அவராலும் புறந்தள்ள இயலவில்லை. ஆண்டுகள் கழிந்தன. முள்ளிவாய்க்கால் நிகழ்ந் தது. புதிதாய் உருவாகி இருந்த இன் னொரு தலைமுறை தமிழ் உணர்வு கொண்ட இளைஞர்கள், சீமானைக் கண்டார்கள். இப்போது சீமான் தங் களுக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும் என்று குரல் கொடுக் கிறார்.

‘‘பல தேசிய இனங்கள் ஒன்றிணைந்து வாழ்கிற இந்தியா போன்ற நாட்டில் ஒவ்வொரு இன அடையாளத்தையும் உரிமையையும் பேசும் அரசியல் இருக்கும். அந்த அரசியல் பேசுவது  எல்லா தலைமுறையிலும் எதிரொலிக்கும். இந்தக் குரலை தங்கள் அரசியல் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தும் தலைவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதும் தேசிய அரசியல் பேசி  சமரசம் செய்து கொள்கிறார்கள். பின் இன்னொரு தலைமுறை மீண்டும் இந்த அரசியலைத் தூக்கிப்பிடிக்கிறது. இது ஒரு சுழற்சியாக இந்த மண்ணில் நடந்துகொண்டே இருக்கிறது’’ என்கிறார் ஓர் அரசியல் விமர்சகர்.

‘‘எங்களுக்கு அரசியல் வல்லமை வேண்டும். அது இல்லாவிட்டால் எதுவும் செய்யஇயலாது’’ சீமான் சொல்கிறார். ‘‘இந்தத் தேர்தலில் காங் கிரசுக்கு எதிராகப் பிரச்சாரம். 2016&இல் நாமே தேர்தலில் நிற்போம்.”காங்கிரசை தமிழகத்தில் ஒழித்த திமுகவுடன் இன்று காங்கிரஸ் கூட்டுச் சேர்ந்துள்ளது. அந்த காங்கிரசை தோற்கடிப்பேன் என்கிறார் சீமான். ஆக, சீமான் இங்கே மிச்சமிருக்கும் தமிழ்த் தேசியத்தின் வெளிப்பாடு. ஆனால் அண்ணாவின் சாதுர்யம் இப்போதிருப்பவர்களுக்கு வருமா? அதுபோன்ற சூழல் அமையுமா?‘‘ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட காங்கிரசை இவர்கள் இனியும் எப்படி தோற்கடிப்பது? இவர்கள் உண்மையிலேயே தோற்கடிக்க வேண்டியது இன்னொரு காங்கிரசாக வளர்ந்துவிட்ட திராவிடக் கட்சிகளைத்தானே?” என்று கேட்கிறார் ஒரு  தமிழ்த்தேசிய அரசியல் விமர்சகர்.

‘‘இங்கே பாருங்கள். 67&க்குப் பிறகு தமிழகத்தில் தனியாக ஒரு  கட்சி ஆட்சியைப் பிடிப்பது என்பது சாத்தியமே அல்ல. கூட்டணி சேர்ந்தால்தான் அரசியல் அதிகாரம் கிடைக்கும். கொள்கைகளால் மாறுபட்டிருந்தாலும், ஏதாவது ஒரு பொதுவான அம்சத்தைத் தேடி (பெரும்பாலும் அது அதிகாரத்தை சுவைப்பதுதான்)கூட்டுவைப்பதுதான் தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியா முழுக்க நடக்கிறது. தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் நாளைக்கு இந்திய தேசியம் பேசுபவர்களுடன் கூட்டணி வைத்தால்தான் ஆட்சியைப் பிடிக்கமுடியும். அதுதான் எதார்த்தம்’’ என்று தமிழக அரசியல் சூழலை விளக்குகிறார் அவர்.

சீமானை நம்பிக்கைக்குரிய இளைஞராகக் காண்கிறார் இயக்குநர் மணிவண்ணன்.‘‘அவரால் மக்களைத் திரட்டமுடியும். அதைக் காண்கிறோம். தன்னெழுச்சியாக திரளும் இளைஞர் கூட்டம்  அவருக்குப் பின்னால் உள்ளது. ஆனால் அவரது வெற்றியை அவர் செய்யக்கூடிய செயல்களே தீர்மானிக்கும்” என்கிறார் அவர்.‘‘சீமானின் உண்மை, நேர்மை, ஈழ ஆதரவு, தமிழ்த்தேசிய சிந்தனை, மொழிப்பற்று ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள முடிகிறது. அவர் தன்னுடைய கூட்டத்துக்கு வருகிறவர் களைக் குறிப்பிட்ட செயல் திட்டத்தின்பால்  எடுத்துச் செல்லாவிடில் அவரது உழைப்பு, நேரம், வருமான இழப்பு போன்றவற்றால் எந்தப் பலனும் இல்லாமல் போய்விடும்” என்று கவலையுடன் எச்சரிக்கிறார் கொளத்தூர் மணி.

‘‘சீமான் இப்போதைக்கு தன்முனைப்பு இல்லாதவராக இருக்கிறார். அதுபோன்று இருப்பவர்கள் அரிதே. அப்படி இருக்கையில் பொதுவாழ்வில் பிறரோடு இணைந்து ஈகோ இல்லாமல் செயல்படமுடியும்’’ என்று கருத்துச் சொல்கிறார் சீமானை அறிந்த ஒருவர். ஆனால் இதே மனநிலை அவருக்குத் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்து கிறார்.

மதம் சாராமல் சாதி சாராமல் மொழி அடையாளத்துடன் இணைவது தமிழ் அடையாளம் என்கிற விதத்தில் நன்றே. ஆனால் இந்த ஒற்றுமை உணர்வு மானுடத்தின் மீதான அன்பாக மாற்றம் அடையவேண்டும். தகவல் தொழில்நுட்பத்தால், உலகமயமாக்க லால் சுருங்கியிருக்கும் இக்கால கட்டத்தில் அடையாளங்களைத் தாண்டிய மானுட அன்பே உலகுக்கு அவசியம்.  இன்று  ஈழப் படுகொலையை எதிர்த்து  உலக அளவில் குரல் கொடுக்கும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் பலர், தமிழர்கள் அல்ல. மானுடத்தின் மீதான அன்பே இதை சாத்தியமாக்குகிறது. தமிழ்த்தேசிய அரசியல் என்பது இதைப் பின்னணியாகக் கொண்டு விரிந்த மனப்போக்குடன் வளர வேண்டும். இதை 42 வயதே நிரம்பிய சீமான் சாதுர்யத்துடன் வளர்த்தெடுக்க வேண்டும். இது இன்றைய காலகட்டத்தில் தமிழ்த்தேசியம் எதிர் நோக்கும் வரலாற்றுச் சவால்.

முந்தைய செய்திசெந்தமிழன் சீமான் அவர்கள் சன்டே இந்தியன் இதழுக்கு அளித்த பேட்டி.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு]நாமக்கல் மாவட்ட மல்லசமுத்திரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.