வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனத்தைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமாரை இலங்கை கடற்படையினர் படுகொலை செய்ததை கண்டித்து நெல்லை சந்திப்பு முன்பு நாம் தமிழர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் தலைமை வகித்தார்.
இதில் கலந்து கொண்டு இயக்குனர் சீமான் பேசியது:
“கடந்த 60 ஆண்டுகளாக ஈழ மண்ணிலுள்ள தமிழர்களையும், இங்குள்ள தமிழர்களையும் சக மனிதர்களாகக் கருதாமல் சிங்கள ராணுவத்தினர் கொன்று குவிக்கின்றனர். இந்திய அரசு கரம் நீட்டி தடுப்பதற்கு பதிலாக கரம் கொடுத்து உதவுகிறது. இதுவரை 538 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலைகளைத் தடுத்து நிறுத்தத் துடித்தால் என்னை தேச துரோகி என்கின்றனர். இந்த நாட்டின் குடிமகனான மீனவன் கொல்லப்படுவதை கடற்படை தடுக்க வேண்டாமா? இங்கு வந்த மத்திய அமைச்சர் பிரனாப் முகர்ஜி பேசும்போது கூட இலங்கை நட்பு நாடு என்கிறார்.
எல்லை தாண்டினால் மீனவர்களை சுடுவோம் என்னும் நாடு எப்படி நட்பு நாடு ஆகும்? பகை நாடாக கருதப்படும் பாகிஸ்தான் கூட இதுவரை ஒரு இந்திய மீனவர்களையும் கொல்லவில்லை. எனவே இலங்கையுடான உறவை இந்தியா துண்டிக்க வேண்டும். கூட்டுப்படை பயிற்சியில் ஈடுபடக் கூடாது. எந்த உதவியும் செய்யக்கூடாது. திமுக எத்தனை இடங்கள் கொடுத்தாலும் அத்தனை இடங்களிலும் காங்கிரசை தோற்கடிப்போம்,” என்று தெரிவித்தார்.