வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச போர்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென மனித உரிமை அமைப்புக்களும் மேற்கத்திய நாடுகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனால் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக மூன்று பேர் நிபுணர் குழு நியமிக்கப்பட்ட போது அதனை இலங்கை அரசாங்கம் கடுமையாக எதிர்த்தது. ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு இலங்கைக்கு விஜயம் செய்ய நுழைவு அனுமதி கோரிய போது அரசாங்கம் மறுத்திருந்தது. அதேவேளை இம் முடிவில் தளர்ச்சியை ஏற்படுத்தி நிபுணர்கள் குழுவுக்கு நுழைவு அனுமதி வழங்க அரசாங்கம் பின்னர் முடிபு செய்திருந்தது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவுக்குப் போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள ஒருபோதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.அரசின் அறிவிப்புத் தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸ் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம் கேள்வி எழுப் பிய போது உண்மைகளைக் கண்டறி வதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவிடம் பேசுவது மட்டும் நிபுணர்கள் குழுவின் பணியல்ல. நல்லிணக்க ஆணைக்குழுவுடன் விவகாரங்களைக் கையாளுவது என்பதற்கப் பால் தமது பணி பரந்து பட்டது என நிபுணர் குழு தெளிவுபடுத்தியிருக் கின்றது எனத் தெரிவித்திருக்கின்றார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இந்நிலைப்பாடு கொழும்பின் நிலைப்பாட்டுடன் முரண்படுவதாக அமைந்திருப்பதால் இருதரப்பினருக்கும் இடையிலான இழுபறி நிலை மேலும் சில நாட்களுக்குத் தொடரக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன