மனித உரிமை நாளில் சீமான் விடுதலை: வைகோ

35

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்துவிட்டது. இன்று உலக மனித உரிமைகள் நாளாகும். தமிழகத்தில் மனித உரிமைகளை அதிகாரக் கரங்களால் பறிக்க நினைக்கும் அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என, ம.தி.மு.க. செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் ஆட்சி நடத்தி வரும் தி.மு.க அரசு அரசியல் சட்டம் வழங்கி உள்ள அடிப்படை உரிமையான பேச்சுரிமையை நசுக்க குறிப்பாக, ஈழத் தமிழ் இனத்திற்கு ஆதரவுக் குரல் எழுவதை அடியோடு தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளது. அதனால்தான் தேசப் பாதுகாப்புச் சட்டத்தை ஈழத்தமிழருக்கு ஆதரவாகப் பேசுபவர் மீது தொடர்ந்து ஏவியது.

ஏற்கெனவே, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசி புதுவை காங்கிரஸ் அரசால் தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இயக்குனர் சீமான் மீது போட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விடுவித்ததை கருத்தில் கொள்ளவில்லை.

இனவெறி சிங்களக் கடற்படை தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்குவதைக் கண்டித்துப் பேசியதற்காக இயக்குனர் சீமானை முதலில் சாதாரண சட்டப் பிரிவின் கீழ் தி.மு.க. அரசு கைது செய்தது. அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்யப் போகிறார் என்று அறிந்தவுடன் தேசப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் போட்டு அரசு சிறையில் அடைத்தது.

ஏற்கனவே ம.தி.மு.க.வின் கொள்கை விளக்க செயலர் நாஞ்சில் சம்பத் மீது 2009 ஆம் ஆண்டு திருப்பூரில் பேசியதற்காக சாதாரணச் சட்டப் பிரிவுகளின்கீழ் கைது செய்து கோவை சிறையில் அடைத்தது. ஜாமீன் மனுவை நாஞ்சில் சம்பத் தாக்கல் செய்து திருப்பூர் நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை ஆணையைப் பிறப்பித்த பின்னர், நள்ளிரவில் மாவட்ட ஆட்சியரை அணுகிதேச பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நாஞ்சில் சம்பத்தை கோவைச் சிறையில் இருந்து வெளிவர விடாமல் காவல்துறை அடைத்தது. அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நானே வாதாடினேன். நாஞ்சில் சம்பத்தைப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தது தவறு எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

2009 மே 2ஆம் தேதி சிங்கள அரசு தமிழர்களை அழிக்க ஆயுதங்களை ஏற்றிச் சென்ற ராணுவ வாகனங்களை வழிமறித்த ம. தி.மு.க., மற்றும் பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை காவல்துறை கைது செய்து தேசப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தது.

இந்தக் கைது நடவடிக்கையை எதிர்த்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய புகார் மனுவின்பேரில்  பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கூறி உள்துறை அமைச்சகம் அவர்களில் சிலரை சிறையிலிருந்து விடுவிக்க வைத்தது. மற்றவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததில் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அரசு சிறையில் அடைத்தது. அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததில் அரசின் நடவடிக்கையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது.நேற்றைய தினம் சீமானை பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது.
இன்று உலக மனித உரிமைகள் நாளாகும். தமிழகத்தில் மனித உரிமைகளை அதிகாரக் கரங்களால் பறிக்க நினைக்கும் அரசை மக்கள் சக்தியைத் திரட்டி தூக்கி எறிய மனித உரிமை ஆர்வலர்கள் சூளுரை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்

முந்தைய செய்தி[புகைப்படங்கள் இணைப்பு] சிறையில் இருந்து சீறி பாய்ந்த சீமான்
அடுத்த செய்திபிரான்சு தமிழீழ மக்கள் பேரவை நடாத்தும் தொடர் எதிர்ப்புப்போராட்டம்