நம் தாயகக் கனவின் கிழக்கு – நாம்தொடுக்கும் போர்க்குற்ற வழக்கு! போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வழக்கிடுவோம் – பேராசிரியர் தீரன்.

125

நம் தாயகக் கனவின் கிழக்கு – நாம்தொடுக்கும் போர்க்குற்ற வழக்கு!போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வழக்கிடுவோம், போராடுவோம் தமிழர்களே!

‘உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தான் தீரவேண்டும். தப்பைச் செய்தவன் தண்டனை பெற்றுத்தான் தீரவேண்டும்’ என்;று தமிழில் ஒரு முதுமொழியுண்டு. மே, 2009- நான்காம் கட்ட ஈழப்போரில் பல்லாயிரக் கணக்கான போராளிகளும், சுமார் 40,000க்கு மேற்பட்ட ஈழத்தமிழ் மக்களும் இனப்படுகொலை செய்யப்பட காரணமான இலங்கைத்தீவின் அதிபர் மகிந்த இராஜபக்சே, பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபய இராஜபக்சே, இராணுவத் தலைமைத் தளபதி பொன்சேகா உள்ளிட்ட தமிழர்களை இனஅழிப்பு செய்தவர்களும், அதற்குத் துணைபோனவர்களும் இன்றைக்குச் சர்வதேசச் சட்டங்களின் முன்னால் போர்க்குற்றவாளிகளாக விசாரிக்கப்பட வேண்டும் என்று புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்கள் அந்தந்த நாட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுத்து வருகின்றனர்.
முள்ளிவாய்க்கால் போர் இழப்புகளால் சோர்வடைந்த உலகத் தமிழர்கள் 2009-இல் வட்டுக்கோட்டைத் தீர்மான அடிப்படையில் மீள்வாக்கெடுப்பு நடத்தி தங்கள் வலிமையையும் ஒற்றுமையையும் எடுத்துக்காட்டினர். 2010-இல் இலங்கை அதிபர் இராஜபக்சே, தமிழர்களை இனப்படுகொலை செய்ததற்காகப் போர்க்குற்ற விசாரணைக்குட்படுத்தி தண்டனை பெற்றுத்தரும் சட்டப்போராட்ட வழிமுறையைத் தீவிரப்படுத்தி வருவது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழர்கள் ஒன்றுபட்டால் வென்று காட்டலாம் என்பதற்கு அடையாளமாக இலண்டன் வாழ் தமிழர்கள் வரலாற்றில் மீண்டும் ஒரு முத்திரை பதித்துக் காட்டியுள்ளனர். அதிபர் இராஜபக்சே, தனிப்பட்ட பயணமாக ஆக்ஸ்போர்டு பல்கலையில் உரையாற்ற இலண்டன் சென்றிருந்தார். கடந்த 30 ஆண்டுகளில் காணாத கடும் பனிப்பொழிவு அய்ரோப்பிய நாடுகளில் இருந்தும்கூட செய்திகிடைத்த சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் 30.11.2010 அன்று இராஜபக்சே வந்திறங்கிய ஹீத்ரு விமான நிலையத்தில் வந்து கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இலண்டன் வாழ்த் தமிழர்களின் போராட்டத்தால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பாதுகாப்பு கருதி, போர்க்குற்றவாளி இராஜபக்சேவின் உரை நிகழ்ச்சியை நடத்தாமல் நீக்கம் செய்துவிட்டது. இலண்டன் வருகைதரும் போது போர்க்குற்றத்திற்காகக் கைது செய்யப்படக்கூடாது என்னும் உத்தரவாதத்தைப் பிரித்தானிய அரசிடம் பெற்ற பிறகே இராஜபக்சே இலண்டன் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராஜபக்சேவுடன் பயணம் மேற்கொண்ட இராணுவ மேஜர் ஜெனரல் சாகி கல்லேஜ் முள்ளிவாய்க்கால் போரில் அப்பாவி மக்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும் குண்டுவீசிய போர்க்குற்றத்திற்காக இலண்டன் தமிழர்கள் ஆதாரங்களுடன் மத்திய இலண்டன் ஹார்ஸ் பெரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அவரைக் கைது செய்திட பிடி ஆணை பிறப்பித்தது அந்த நீதிமன்றம். ஆனால் அந்த மேஜர் ஜெனரல், தான் கைது செய்யப்படலாமென அஞ்சித் தனது பயணத்தை  முன்னதாக முடித்துக்கொண்டு இலண்டனை விட்டு வெளியேறியதாக ஸ்காட்லாந்து காவல் துறை தெரிவித்தது.

இலண்டன் பயணத்தை அடுத்து ஜெர்மனி செல்லவிருந்த இராஜபக்சே அங்கும் இவருக்கெதிராக தமிழர்கள் போர்க்குற்ற வழக்கு தொடுத்து தயாராக இருப்பதை அறிந்து பயணத்தைப் பாதியிலேயே இரத்து செய்து விட்டு, இலண்டனிலிருந்து நேராகக் கொழும்புவிற்குத் தப்பியது தம்பிரான் புண்ணியம் என தலைதெறிக்க ஓடிவந்துள்ளார். பிரித்தானிய அரசும், அந்நாட்டுச் சட்ட நடைமுறைகளும் சனநாயக வழியில் தமிழர்கள் தங்கள் எதிர்ப்பினைக்காட்டவும் போராட்டங்கள் நடத்தவும் அனுமதி வழங்கியிருந்தது பாராட்டத்தக்கது. சனநாயகம் பற்றி வாய்க்கிழியப் பேசும் இந்தியா போன்ற நாடுகள் எதற்கெடுத்தாலும் தடைவிதிக்கும் போக்கை கைவிட்டு இனியாவது தங்கள் நாட்டில் கருத்துரிமை, பேச்சுரிமைகளின் குரல்வளையை நெறிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அண்மையில் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி நிறைவு விழாவில் சனநாயகத்தை மதிக்கும் இங்கிலாந்து நாட்டின் இளவரசர் சார்லசுக்கு பக்கத்தில், இலங்கைத்தீவில் தமிழ்த்தேசிய இனத்தை அழித்த ஒரு போர்க்குற்றவாளி இராஜபக்சேவை அமர்த்திப் பாராட்டி மகிழ்ந்த இந்தியாவைப்பற்றி உலகநாடுகள் கேலிபேசுகின்றன.  இப்படியெல்லாம் மனிதநேயத்திற்கு எதிராக மக்கள்விரோத போக்கில் நடந்துக்கொள்ளும் இந்தியா ஐ.நா.பாதுகாப்பு குழுவில் இடம்பெறத் துடிப்பதை என்னவென்று சொல்வது. ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் இந்தியாவின் இத்தகைய சனநாயகத்திற்கெதிரான செயல்களை மௌனமாக பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன.

இன்றைக்கு விக்கிலீக்ஸ் இணைய தளம் இலங்கையில் தமிழர்க்கெதிராக நடைபெற்ற போர்க்குற்றங்கள், இனஅழிப்புகளைப் பற்றி ஏராளமான ஆதாரங்களை வெளியிட்டு இருப்பது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பேட்ரிக் ஏ புட்னிஸ் 2010, சனவரியில் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்த இரகசியத் தகவலில், இலங்கைப் போரின்போது(2009) அப்பாவித் தமிழர்கள் பலர் ஈவிரக்கமின்றி இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அதிபர் இராஜபக்சே, அரசுப் பொறுப்பிலுள்ள அவரது தம்பிகள் மற்றும் இராணுவ ஜெனரலாக இருந்த சரத்பொன்சேகா ஆகியோர்தான் காரணம் என்றும் போரின்போது மனித உரிமைகளை மீறி இலங்கை இராணுவம் செயல்பட்டதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன என்று குறிப்பிட்டு இருப்பதாக விக்கி லீக்ஸ் இணைய தளம் nளியிட்டுள்ளது. இதற்காகத் தமிழர்கள் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜீலியன் அசான்ஜே-வுக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளனர். அவரது மகத்தான செயல் உலகையே இன்று திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது. 25.08.2009-இல் இலங்கை சனநாயகப் பத்திரிகையாளர் சங்கம் இலங்கை அரசின் போர்க்குற்ற ஆதாரங்களை ஆவணப்படுத்தி இலண்டன் சேனல்4 தொலைக்காட்சிக்கு அனுப்பிவைத்ததாகக் கூறப்படுகிறது. ஐ.நா.மன்ற சட்டவிதிகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றி விசாரிக்கும் கூடுதல் நீதிமன்ற சிறப்புச் செய்தியாளர், பேராசிரியர் கிரிஸ்டோப் ஹெய்ன்ஸ் என்பவர் ‘இலங்கை இராணுவத்தினர் தமிழர்களுக்கு எதிராக நடத்திய இனப்படுகொலைகள், பாலியல் கொடுமைகள் பற்றி மீண்டும் இலண்டன் சேனல்4 வெளியிட்டுள்ள நூற்றுக்கணக்கான ஆதாரங்களைச் சாட்சியங்களாக எடுத்துக்கொண்டு போர்க்குற்ற விசாரணை நடத்த பிரித்தானியா சர்வதேசப் பொது மன்னிப்புச் சபையை வலியுறுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொசாவோ, செர்பியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற போர்க்குற்ற விசாரணைகளில் முக்கிய பங்கு வகித்தவரும், இன்றைக்குச் சர்வதேச வழக்குரைஞர் சங்கத்தின் செயல் இயக்குநராக உள்ளவருமான மார்க் எல்லிஸ் என்பவர் ‘சேனல்4 வெளியிட்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் செய்துள்ள போர்க்குற்றங்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன என்றும் இதற்குக் காரணமான இராணுவ வீரர்கள் மட்டுமன்றி, அவர்களுக்கு ஆணையிட்ட அனைத்து உயர்மட்ட அதிகாரவர்க்கம் வரை விசாரணை நடத்தி தண்டிக்கப்பட உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டியது சர்வதேச சமூகத்தின் முக்கிய கடமையாகும்’ என்று அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்தவாரம் கோவையில் கொடீசியா வளாகத்தில் நடைபெற்ற ஜவுளித்துறை கண்காட்சியில் இலங்கை தொழில் அமைச்சர் பத்ருதீன் கலந்துகொள்ள இருப்பதாகச் செய்தி கேள்விப்பட்ட நாம் தமிழர் கட்சி, ம.தி.மு.க, பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தமிழர் அமைப்புகளின் தொண்டர்கள் திரண்டு கடும் எதிர்ப்புக் காட்டியதால், அமைச்சருக்குப் பதிலாக விழாவில் கலந்துக்கொள்ள வந்த இலங்கை ஆளும் கட்சி எம்.பி. காசிம் பைசல் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறவாசல் வழியே வெளியேறினார்.

27.11.10 அன்று இலண்டனில் நடைபெற்ற தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வில் வரலாறு காணாத பனிப்பொழிவை முறியடித்து 50,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கார்த்திகைப் பூக்களைக் காணிக்கையாக்கி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி உள்ளனர். அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய இங்கிலாந்து தொழிற்கட்சியின் பிரபல அரசியல் தலைவர் கென் லிவிங்ஸ்டோன் ‘இலங்கையில் சனநாயகம் அழிந்து சர்வாதிகாரம் தலையெடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இலங்கைத் தமிழர் இனப்படுகொலைக்குக் காரணமான போர்க்குற்றவாளிகள் அதிபர் மகிந்த இராஜபக்சே உள்ளிட்ட அனைவரும் தண்டிக்கப்பட உரிய நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து அரசை வலியுறுத்துவோம்’ என்று முழக்கமிட்டுள்ளார்.
2006  செப்டம்பர் முதல் 2009 மே வரை இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற இனஅழிப்புகளைக் கண்டு இராஜபக்சே உள்ளிட்ட அனைவரும் போர்க்குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும் எனக்கூறிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் ஓ பிளேக் இன்றைக்குத் தமிழர்கள் இலங்கை அரசுடன் சமரசமாகப் போக வேண்டுமென அறிவுரை வழங்குகிறார். ஆனால் வடக்கு-கிழக்கு தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நடைபெறுவதையோ, வடக்கில் தமிழர் நிலங்களில் சிங்கள இராணுவத் தளங்களும், குடியிருப்புகளும் அமைக்கப்பட்டு வருவதைப் பற்றியோ இன்னும் 30,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் மீள்குடியமர்த்தம் செய்யப்படாமல் முகாம்களிளேயே உள்ளது பற்றியோ வாய் திறக்க மறுக்கிறார். ஆனால் அமெரிக்காவில் உள்ள இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பும் பிற மனித உரிமை அமைப்புகளும் இணைந்து செயல்பட்டு இலங்கையில் நடந்த பல்லாயிரக்கணக்கான போர்க்குற்றங்களை ஆவணப்படுத்தி செனட் அமைப்பின் மூலம் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கும், ஐ.நா.மன்றத்திற்கும் விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக அனுப்பி வருகின்றனர்.

இலங்கை 4ஆம் கட்டப் போரில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள் புரிந்த இராணுவத் தளபதிகளைப் போர்க்குற்ற விசாரணையிலிருந்து தப்புவிக்க வெளிநாடுகளில் தூதுவர்களாக நியமித்து வருகிறார் இராஜபக்சே. அவ்வாறு ஜெர்மனியில் நியமிக்கப்பட்ட இலங்கைக்கான தூதர் ஜெனரல் டயஸ் தமிழர்களுக்கெதிரான போர்க்குற்றம் புரிந்தவர் என்பதை ஆதாரங்களோடு அந்நாட்டில் வாழும் தமிழர்கள் அவர்மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.

வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட கட்டுரையொன்றில் இலங்கையின் கடைசிக்கட்டப்  போரின்போது தொடர் குண்டுவீச்சின் மூலம் 40,000க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களைக் கொன்ற போர்க்குற்றவாளியான மேஜர் ஜெனரல் சேவேந்திர சில்வாவை  ஐ.நா.வில் இலங்கையின் நிரந்தர துணைப்பிரதிநிதியாக இலங்கை அரசு நியமித்துள்ளது எனச் சுட்டிக் காட்டியுள்ளது. சமாதானம் பேச வெள்ளைக் கொடியோடு வந்த அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போராளிகளைக் கொல்ல, தான் ஆணை எதுவும் பிறப்பிக்கவில்லை என்று கோத்தபய இராஜபக்சே இதுவரை மறுத்துவந்தார். ஆனால் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பிடம் (வுயுபு) தாக்கல் செய்த மனுவில் ஒரு சிங்கள இராணுவ உயரதிகாரி ‘சரணடைய வந்த போராளிகளைக் கொன்று அவரது உடல்களை எரித்துவிடுமாறு பாதுகாப்புத் துறையின் தலைமை தங்களுக்கு ஆணை பிறப்பித்ததாக’ ஒப்புக்கொண்டுள்ளார்.

இவ்வாறு உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழீழப் பிரச்சனைக்குத் தீர்வு காண இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை நடத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் அதே நேரத்தில், சில தமிழ்த்தேசிய ஊடகங்கள்கூட சிங்கள உளவுத் துறையின் ஆளமைக்கு அடிபணிந்து விட்டனவோ என்று எண்ணுமளவிற்கு நடந்து கொண்டுள்ளன. இலங்கை அரசு போர்க்குற்றங்களிலிருந்து தப்பிக்க எடுக்கும் பகீரத முயற்சிகளுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ தமிழர்களாகிய நாம் துணை போகக்கூடாது என்பதில் எச்சரிக்கையாய் இருப்பது அவசியம்.

சிங்கள இராணுவத்தால் சிதைத்துக் கொல்லப்பட்ட இசைப்பிரியா ஆயுதமேந்திப் போராடிய போராளி என்று சிங்கள உளவுத்துறை கூறுவதை அப்படியே சில தமிழ் ஊடகங்களும் செய்திகளாக வெளியிட்டு உள்ளது உண்மைக்குப் புறம்பானது. 2009 மே 23 (அ) 24 இல் செட்டிக்குளம் முகாமிலிருந்து சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்ட இசைப்பிரியா ஒரு இதய நோயாளி என்று வன்னி மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இசைப்பிரியா முள்ளிவாய்க்கால் பகுதி மருத்துவ முகாமில் சேவை செய்யும் ஊழியராகச் செயல்பட்டவர். ஆயுதமேந்திப் போராடியவர் அல்ல என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இசைப்பிரியாவின் மகள் அகல் பதுங்கு குழியில் இருந்தபோது சிங்கள இராணுவக் குண்டுவீச்சின்போது மூச்சுத் திணறி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 15.3.2009 இல் இறந்து போனார். சேவையாளராகவும் செய்தியாளராகவும் இருந்த இசைப்பிரியாவைப் பாலியல் கொடுமை செய்து கொன்ற சிங்கள இராணுவம் அப்பட்டமாகப் போர்க்குற்றம் செய்துள்ளது. அதை மறைத்து திசை திருப்பவே இசைப்பிரியாவை ஆயுதப் போராளியாகத் திரித்து தப்பிக்கப் பார்க்கிறது என்கிறது சேனல்4. முள்ளிவாய்க்கால் போர் முடிவுற்ற பின்னரும் தமிழர்கள் தொடர்ந்து இனஅழிப்புக்கு ஆளாகி வருகின்றனர் என்பதற்கு பத்திரிகையாளர் இசைப்பிரியா கொல்லப்பட்ட விதம் தகுந்த போர்க்குற்ற சாட்சியமாகும்.

இத்தகைய ஆதாரங்களை ஆவணப்படுத்தி சிங்கள அரசு மற்றும் இராணுவத்தினர் நிகழ்த்திய மனிதாபிமான மற்ற போர்க்குற்றங்களை விசாரிக்க நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க வேண்டிய தலையாய பணிகளில் உலகத் தமிழர்கள் இன்னும் தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டும். நம் மண்ணில் நாம் வாழ இயலாது உலகம் முழுதும் நம்மை விரட்டியடித்தது சிங்கள இனவெறி அரசு. இன்று தமிழர்கள் வாழாத நாடுகளே இல்லை என்கிறபோது, அந்நாடுகளுக்குத் தமிழினத்தை அழித்தவர்கள் தலைகாட்ட முடியாத அளவிற்குப் போர்க்குற்ற விசாரணை  என்ற சட்ட வழிமுறையைக் கையிலெடுத்துச் சரியாக நாம் அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். போர்க்குற்றம் புரிந்தமைக்காக யூகோஸ்லோவியா அதிபர் மிலேசோவிச் தண்டிக்கப்பட்டது போல் இலங்கை அதிபர் இராஜபக்சேவும் தண்டிக்கப்படும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை.

இலண்டனில் தான்பெற்ற அவமானத்தைத் தாங்க முடியாததால் போர்க்குற்ற தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்கிற அச்சத்தில் அதிபர் இராஜபக்சே தனது இராணுவத்தைக் கொண்டு கெடுபிடி செய்து வன்னிப் புகுதி கிளிநொச்சியில் சில தமிழர்களை வைத்து ‘இராஜபக்சே தமிழர்களைப் பாதுகாக்கும் இரட்சகர்’ என்று தனக்கு ஆதரவாக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தச் செய்துள்ளார். இலையில் பரிமாறப்பட்ட சோற்றில் முழுப் பூசணிக்கயை மறைக்கப் பார்த்த மூடனைத்தான் இராஜபக்சேவின் செயல் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

‘முள்ளிவாய்க்கால் போர் முடிவு அல்ல. ஓர் திருப்புமுனை’ என்ற கவிஞர். காசி ஆனந்தனின் தீர்க்கமான வரிகள் மெய்யாகி வருகின்றன. நெருக்கடியில் வாழ்ந்த போதிலும் இலங்கை அதிபர் தேர்தலில் 85 சதவீதத் தமிழர்களும், நாடாளுமன்றத் தேர்தலில் 80 சதவீத தமிழர்களும்  தேர்தலைப் புறக்கணித்துக் காட்டியிருப்பதன் மூலம் ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர் பிரச்சனைக்கு என்றுமே தீர்வு கிடைக்காது என்கிற உறுதிப்பாட்டை உலகிற்கு எடுத்துக்காட்டினர். புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழீழம் மட்டுமே ஒரே தீர்வு என்பதை வட்டுக்கோட்டைத் தீர்மான மீள்வாக்கெடுப்பின் மூலம் நிரூபித்துக் காட்டினர். இன்றைக்கு விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கும் இலங்கையின் 4வது போர்க்காலச் சம்பவங்கள் தமிழர்களை இனஅழிப்பு செய்த போர்க்குற்றவாளிகள் யாரும் தண்டனையிலிருந்து தப்பமுடியாது என்பதை உறுதிப்படுத்துகிறது. கடப்பாரையை விழுங்கிவிட்டு கசாயம் குடித்து சரிசெய்யப்பார்க்கிறார் இராஜபக்சே. அது ஒருபோதும் நடக்காது. நாம் காணவிரும்பும் தமிழருக்கான தனித்தாயகப் பாதை இருண்டு போகவில்லை. போர்க்குற்ற வழக்கு விசாரணை என்னும் வெளிச்சம் நம்மை விடியலை நோக்கி வழிநடத்தும். வுpழிப்பாக இருந்து முனைப்பாகச் செயல்படுவோம் வாருங்கள்! நம் தாயகக் கனவின் கிழக்கு! நாம்தொடுக்கும் போர்க்குற்ற வழக்கு!

தற்போது நடந்து முடிந்த 2010 ஆம் ஆண்டு மாவீரர் நாள் தமிழீழத்திற்கான முக்கியத்துவத்தை பெற்றுவிட்டது. புலம்பெயர்ந்த நாடுகளில் மாவீரர் நாள் வாரம் சிறப்புடன் நடைபெற்று உள்ளன. அதே வேளையில் தமிழீழத்தில் சிங்கள இனவெறி அரசு மாவீரர் துயிலும் இல்லங்களைப் புல்டோசர்களைக் கொண்டு அழித்த போதிலும, மக்கள் தங்கள் வீடுகளில் மாவீரர்களுக்காக விளக்கேற்றிக் கொண்டாடி இருக்கின்றனர். துமிழகமெங்கும் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, ஆங்காங்கே தமிழீழ ஆதரவு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் பல்லாயிரக்கணக்கில் மக்களைத் திரட்டி பரப்புரை செய்துள்ளனர்.

தமிழர் நெஞ்சங்களில் இருந்து தாயக விடுதலைக்காக உயிர்க்கொடை அளித்த மாவீரர் நினைவுகளை ஒருபோதும் அகற்ற இயலாது என்பதைச் சிங்கள அரசின் நடவடிக்கைகள் எடுத்துக்காட்டின. தமிழர்கள் வழிபாட்டுத்தலங்களில் உள்ள மணிகளை ஒலித்து வணங்குவார்கள். என அஞ்சிய அரசு அந்த மணிகளைத் துணிகளால் சுற்றி மறைத்து உள்ளனர். தமிழர்களின் வழிபாட்டு உரிமைகளைப் பறிக்கும் சிங்கள அரசின் இத்தகைய நடவடிக்கைகள் இனஅழிப்புக் குற்றங்களாகவே ஐ.நா. வரையறுத்துள்ளது.
அண்மையில் இலங்கைப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தமிழர் பிரச்சினைக்கு உருப்படியான தீர்வு பற்றி எதுவும் பேசவில்லை. இலங்கைத்தீவில் தமிழர் பகுதிகளான வடக்கு-கிழக்கு மாநிலங்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் 13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென அவர் பேசியிருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளாகவே இந்தியா, போகாத ஊருக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பது போல் நடந்து கொள்வது மிகவும் அபத்தமானது.

ஏற்கனவே 13ம் திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற பிரதமாராய் இருந்த இராஜிவ்காந்தி 1989-இல் இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்பி நேறிடையாக ஒரு போரை நடத்தி மூக்குடைக்கப்பட்டு திரும்பினார். 2009-இல் இந்தியா மறைமுகமாக ஒரு போரை தமிழர்களுக்கெதிராக நடத்தி இனஅழிப்புக்குத் துணைபோன போதிலும் ‘நான் இருக்கும் வரை வடக்கு-கிழக்கு மாநில இணைப்பு ஒருபோதும் நடக்காது’ எனத் திட்டவட்டமாக 2வது முறை இலங்கை அதிபரான  போது இராஜபக்சே மறுத்துவிட்டார். அதுமட்டுமன்றி இலங்கை உச்சநீதிமன்றமும் 13ஆம் திருத்தச்சட்டத்தை நிராகரித்துப் பல ஆண்டுகள் ஆகிறது. கிளிப்பிள்ளைபோல் மீண்டும் மீண்டும் 13ஆம் திருத்தச்சட்டம் பற்றி இந்தியா பேசிக் கொண்டிருப்பது தமிழர்களை ஏய்க்கும் ஒரு ஏமாற்றுத்தனமாகவே தெரிகிறது.
1983 இல் ஈழத்தமிழர் நூற்றுக்கணக்கில் இனப்படுகொலைக்கு ஆளான போது பிரதமாயிருந்த இந்திரா காந்தி தமிழ்ப் போராளிக்குழுக்களுக்கு இந்தியாவிற்கு அழைத்துவந்து ஆயுதப்பயிற்சிகள் வழங்கினார். அப்போது இந்தியாமீது இலங்கைக்கு அச்சமிருந்தது. ஒடுக்கப்பட்டுக்கொண்டிருந்த ஈழத்தமிழர்களுக்கும் இந்தியாமீது நம்பிக்கை இருந்தது. 2009 முள்ளிவாய்க்கால் போரில் 40,000க்கும் மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்களும், ஆயிரக்கணக்கான விடுதலைப் போராளிகளும் சிங்கள இராணுவத்தால் இனஅழிப்புக்கு ஆளானபோது அதற்குத் துணை போன இந்தியாமீது ஈழத்தமிழர்களின் நம்பிக்கை முற்றிலும் தகர்ந்தது. இலங்கை இனவெறி அரசுக்கு இந்தியாவைக் காட்டிலும் சீனா, பாகிஸ்தான் நாடுகளுடன் நெருக்கும் அதிகமானது.

இலங்கையைப் போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து காப்பாற்ற இந்தியா தொடர்ந்து முயற்சித்து வந்தாலும், இலங்கை இந்தியாவை இப்போது மட்டுமல்ல, எப்போதுமே நம்பியதும் கிடையாது. இந்தியாவுக்கு ஆதரவாக நடந்ததும் கிடையாது. சீனா, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளுக்கு தொழில் வணிக வாய்ப்புகளை வழங்குமளவிற்கு இலங்கை இந்தியாவுக்கு வழங்குவதும் கிடையாது. மாறாக இந்தியாவின் எதிரி நாடுகளால் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை வாயில்வரை வரவழைத்துக்கொள்ளும் நீர்த்துப் போன இராசதந்திரக் கொள்கைகளையே அது தற்போது கடைபிடித்து வருகிறது.

இருமுறைக்குமேல் ஒருவர் அதிபராக வரமுடியாது என்கிற தடையை நீக்கித் தன்னை இலங்கையின் சர்வாதிகாரி ஆக்கிக்கொண்டார் இராஜபக்சே. தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றமும், இராணுவ ஆக்கிரமிப்புகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் போர்முடிந்து 2 ஆண்டுகளாகியும் தமிழர் பகுதிகளில் புனரமைப்பு வேலைகளைச் செய்யாமல் இன்னும் 30,000க்கும் மேற்பட்ட தமிழர்களை முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர். இதுபற்றி எஸ்.எம்.கிருஷ்ணா பேசவும் இல்லை. குறைந்தது இந்தியா இதுபற்றி கவலைப்படுவதாகக்கூட தெரிவிக்கவில்லை.

நவம்பர் 27 மாவீரர் நாளன்று யாழ்ப்பாணம் காந்தார் மடம் பகுதியில் இந்தியாவின் துணைத் தூதரகத்தை எஸ்.எம்.கிருஷ்ணா திறந்து வைத்துள்ளார். தமிழீழத்தை இந்தியா அங்கீகரிக்கவில்லை என்றாலும், மறைமுகமாக அதற்குக் கிடைத்த அங்கீகரமாகவே இது கருதப்படுகிறது. வுpழாவில் பேசிய எஸ்எம்.கிருஷ்ணா யாழ்ப்பாணத் தமிழறிஞர்கள் ஆறுமுக நாவலர், தாமோதரம் பிள்ளை ஆகியோரைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.  ஆறுமுக நாவலர் எழுதிய நல்லறிவுச் சுடர் கொளுத்துதல், பிரபந்தத்திரட்டு ஆகிய நூல்களில் இலங்கைத்தீவில் வாழும் ஈழத்தமிழர்கள், வரலாற்றுச் சிறப்புகளும், இலக்கியப் பெருமைகளும் கொண்ட தனித்துவமான ஒரு தேசிய இனம் என்பதை எடுத்துக்காட்டியுள்ளார். அத்தகைய பூர்வீகத் தமிழ் தேசிய இனத்தைத்தான், அவர்களுக்குப் பின்னால் இலங்கைத்தீவில் குடியேறிய சிங்களர்கள் இன்றைக்கு வல்லாதிக்கம் செய்து அழித்து வருகின்றனர் என்பதை எஸ்.எம.கிருஷ்ணா அறிந்திருக்கமாட்டார்.
தமிழ்நாட்டில் சில எழுத்தாளர்கள் இலங்கையில் மூன்று வகையான தமிழ் பேசும் மக்கள் உள்ளனரென்றும், சிறுபான்மையினராக உள்ள தமிழர்கள், பிழைக்கப்போன தமிழர்கள் தனிநாடு கேட்பது சரியா? என்றெல்லாம் வரலாறு தெரியாமல் பிதற்றிக் கொண்டுள்ளனர். தோன்றுதொட்டு தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் தமிழர்களைப்போல இலங்கையிலும் தமிழர்கள் பழமைவாய்ந்த ஒரு தனித் தேசிய இனம் என்பதையும், 1833இல் அய்ரோப்பியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை வரும்வரை யாழ், வன்னி, கோட்டை அரசுகளைத் தனித்தனியே (தமிழ்நாட்டில் சேர,சோழ, பாண்டியர், பல்லவர் என ஆண்டதுபோல) தமிழர்கள் ஆட்சி செய்ததாகவும், தென்னிலங்கையைச் சிங்களர் தனியே ஆண்டதாகவும் வரலாறு தெரிவிக்கிறது.

இதையெல்லாம் அறியாமல் இலங்கைத் தமிழர் பிரச்சனையைச் சிறுபான்மை என்கிற வட்டத்துக்குள் மட்டும் வைத்துப் பார்த்து இந்தியா சிங்கள வல்லாதிக்கத்திற்கும், தமிழின அழிப்புக்கும் துணைபோகக் கூடாது. இந்திய அரசு அவ்வாறு தவறுகள் செய்தாலும் அதைத் தட்டிக் கேட்கும் உரிமையும் கடமையும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உண்டு. இந்தியாவில் உள்ள மேற்கு வங்க மாநில வங்காளிகள் அக்கரை காட்டியதால்தான் வங்கதேசம் இன்று விடுதலை பெறமுடிந்தது. மேற்கு பாகிஸ்தான் உருது முஸ்லீம்களின் பெரும்பான்மை, கிழக்கு பாகிஸ்தான் வங்காளி முஸ்லீம்கள் சிறுபான்மை என்றெல்லாம் அலட்சியப்படுத்தப்படவில்லை. ஒடுக்கப்பட்டு வரும் ஒரு தேசிய இனம் தனது விடுதலைக்காகப் போராடுவது ஏற்றுக்கொள்ளப்பட்ட உலக நடைமுறையாகும். தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களே தமிழீழத்திற்கு ஆதரவாக இல்லையென்றோ, தமிழ்நாடு ஆதரித்தாலும் இந்தியா அதைத் தடுத்து நிறுத்தும் என்கிற எண்ணம் இருப்பதால்தான் சிங்களவர் தமிழர்களைத் தொடர்ந்து ஒடுக்கி வருகின்றனர். அரசியல், சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்து தமிழ்நாட்டில் உள்ள 7 கோடித் தமிழர்களின் குரல் ஓங்கி ஒலித்தால் இந்தியாவின் நிலைப்பாட்டிலும் ஒரு மாற்றம் பிறக்கும். தங்களுக்கான தேசிய விடுதலையை இலங்கைத் தமிழரும், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் பார்த்துக் கொள்வார்கள். ஈழத்தமிழரின் விடுதலைக்கான தடைகளை உடைத்தெரியும் தார்மீகக் கடமைகளைத் தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாட்டுத் தமிழர்கள் செய்தால் போதுமானது. தங்களின் அரசியல் வேறுபாடுகளை ஈழத்தமிழர் பிரச்சினைக்குள் புகுத்தி குளிர்காயக் கூடாது.
அகன்ற தமிழகம் அமைக்கப் பார்க்கிறார்கள் என்று போலியான காரணத்தைக் காட்டி விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்கும் இந்திய அரசைத் தட்டிக்கேட்க பெரிய அரசியல் கட்சிகள் தயங்குகின்றன. தமிழர்களுக்குத் தனியே கொடி, படை, நாடுகள் இருந்தபோதே அகன்ற தமிழகம் அமைக்கப்படாத போது, இப்போது மட்டும் எப்படி அமையும்? வங்கதேசம் விடுதலை பெறும் போது, இந்தியாவின் மேற்கு வங்கமும், வங்க தேசமும் சேர்ந்து அகன்ற வங்கம் அமைந்து விடும் என்று யாரும் பூச்சாண்டி காட்டவில்லை. விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு போர்முடிந்தது எனப் பறைச்சாற்றிய பிறகு இந்தியாவில் விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீட்டிப்பது தமிழ்த்தேசிய இனம் இலங்கையில் ஒடுக்கப்பட ஊக்கமளிப்பதாகத்தானே அமையும்! 7 கோடி இந்தியத் தமிழர்களின் போர் நிறுத்தக் கோரிக்கையை அலட்சியப்படுத்திய இந்தியா நமது வரிப்பணத்தில் இலங்கையின் இனவெறி அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்வது ஐ.நா.வின் பிரகடனத்திற்கு எதிரானதல்லவா?
அண்மையில் இந்திய பொருளாதார நிபுணர் தனது கட்டுரையில் ‘இராணுவ ஒடுக்குமுறையின் கீழ் சீனா, திபெத்தையும், இந்தியா, காஷ்மீரையும் வைத்திருப்பதுபோல் இலங்கையில் சிங்கள இராணுவ ஆதிக்கத்தின் கீழ் ஈழத்தமிழர்களை ஒடுக்கி வைக்க இந்தியா உதவியாய் இருக்கிறது’ எனக் குறிப்பிட்டு இருப்பது இங்குக் கவனிக்கத் தக்கதாகும். தென்னாப்பிரிக்கா, நமீபியா, வங்கதேசம், பாலஸ்தீனம் போன்ற நாடுகளின் விடுதலைக்குச் சாதகமான அணுகு முறையைக் கடைபிடித்த இந்தியா, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மட்டும் பாதகமான அணுகு முறைகளைக் கையாள்வது தமிழின விரோதப் போக்கையும், பழிவாங்கல் உணர்வையும்தானே எடுத்துக்காட்டுகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களே இந்தியாவின் தவறான அணுகுமுறைகளைத் தட்டிக்கேட்டு தடுத்து நிறுத்தாவிட்டால், பிறநாடுகள் மட்டும் எப்படி நம்மீது அக்கரை காட்டுவார்கள்? கோடிக்கணக்கான ஊழல் பணத்தை மறைக்க முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளானதைத் தடுக்காமல் நாடகமாடி நயவஞ்சகம் செய்தவர்களை மனசாட்சி உள்ளவர்கள் மன்னிப்பார்களா? தேடிக்கொண்ட இனத்துரோக வரலாற்றுக் களங்கத்தைச் சேர்த்த பணத்தால் ஒருபோதும் துடைக்கமுடியாது.

சூழ்நிலைக்கேற்ப தடம் புரளும் தமிழக அரசியல் கட்சிகளை எதிர்கொள்ள, தமிழ்த் தேசியத்தின்பால் உண்மையான அக்கரை கொண்ட கட்சிகளும், அமைப்புகளும் தங்களுக்குள் வலிமையானதொரு கூட்டமைப்பை உருவாக்கி, இனத்திற்கும் மொழிக்கும் இரண்டகம் செய்வாரோடு எக்காரணம் கொண்டும் உறவு கொள்ளாமல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

தமிழக மீனவர் பிரச்சினை, ஈழப்பிரச்சினை போன்றவற்றில் இந்தியா முழுதும் உள்ள அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகளின் ஆதரவைத் திரட்டி நட்பு வட்டங்களை உருவாக்க வேண்டும்.
தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அலட்சியப்படுத்தப்படும்போது, உலகெங்கும் வாழும் தமிழர்களின் துணைகொண்டு சர்வதேச அமைப்புகளின் மூலம் தீர்வு காண முயல வேண்டும்.
விடுதலைக்குப் போராடும் பிற தேசிய இனங்களுக்கு அமையாத ஆற்றலும், வலிமையும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களுக்கு இருப்பது தமிழீழ விடுதலைக்குப் பெரிதும் துணை நிற்கும். காலச்சூழ்நிலைக்குத் தகுந்தவாறு விவேகத்துடன் வியூகம் அமைப்பதில் தமிழர்கள் கவனம் செலுத்த வேண்டும். விடுதலைப் பெற்ற பிற தேசிய இனங்களின் படிப்பினைகளைப் பாடமாகக் கற்று அதற்கேற்ப நமது குறைநிறைகளைப் போக்கிக் கொள்ள வேண்டும். விடுதலைக்குப் போராடிவரும் பிற தேசிய இனங்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி நமது வழிமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் ஆளும் தரப்பு மற்றும் அனைத்து அரசியல் சக்திகளிடமும் நல்லுறவை ஏற்படுத்தி நமது கோரிக்கையின் நியாயங்களைத் தெளிவுபடுத்தி ஆதரவு திரட்டுதல் வேண்டும்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் ஒற்றுமையையும் மனவலிமையையும் சிதைக்க அல்லது குறைக்க எண்ணும் எந்தவொரு அக, புறச் சக்திகளுக்கும் இடம் தராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்து நமது தேசியக் கனவுகளைத் தகர்க்க இலங்கை அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்போது நாம் விழிப்பாக இருந்து போர்க்குற்ற வழக்கு தொடுக்கும் பணிகளை அனைத்து நாடுகளிலும் முடுக்கிவிட வேண்டும்.
கைதிகளைக் கொண்டு தயாரித்து அனுப்பப்படும் சீனப்பொருட்களை வாங்க உலகநாடுகள் தடைசெய்யும்போது, இனப்படுகொலை செய்து வரும் இலங்கையின் பொருட்களை வாங்கத் தடைவிதிக்க அந்தந்த நாடுகளில் நாம் போராட வேண்டும்.

தமிழீழப் பிரச்சினையில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு இன்றியமையாதது எனத் தேசியத் தலைவரால் 2008இல் கையளிக்கப்பட்டுவிட்டது. அரசியல்வழி, ஆயதவழி போராட்டங்களைப் போலவே கடந்த இரு ஆண்டுகளாகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயக இலட்சியத்தைத் தற்போதைய அறவழி சட்டப் போராட்டத்தின் மூலம் தொய்வடையாமல் கொண்டு செல்வது பாராட்டத்தக்கது. தனிப்பட்ட முறையில் ஒரு அமைப்பிற்கோ, தலைமைக்கோ முக்கியத்துவம் அளிக்காமல், தாயக விடுதலையில் தடம் புரளாத அனைத்துச் சக்திகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். சுனநாயக அடிப்படையில் கூட்டுப்பொறுப்பேற்று அவரவர் பங்களிப்பை வீண் குழப்பங்களுக்கு இடம் தராமல் சிறப்புடன் நிறைவேற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இலங்கையில் தற்போது நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இந்தியாவுடன், குறிப்பாக தமிழ்நாட்டுடன் வாய்ப்புள்ள தொழில், வணிக, உறவுகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழர்களை ஒடுக்க அனைத்து நாடுகளுடனும் அரச தந்திர உறவுகளை வைத்து இலங்கை செயல்படும்போது, நண்பர் எதிரி எனப் பாகுபாடு கருதாமல் ஈழத்தமிழர்கள் தெற்காசிய நாடுகளுடன் இணக்கமான தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்.

அண்மையில் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா ‘இந்தியா பிறநாடுகளில் நடைபெறும் மனிதஉரிமை மீறல்களை எதிர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்று சுட்டிக்காட்டியிருப்பதையே நாமும் வலியுறுத்த விரும்புகிறோம். அணிசேராத நாடாக இருந்தபோது இந்தியா பிறநாட்டு விடுதலைப் போராட்டங்களை ஆதரித்தும் மனிதஉரிமை மீறல்களைக் கண்டித்துக் குரலெழுப்பியும் உள்ளது. உலகமயமாக்கல் கொள்கையை ஏற்றபிறகு பன்னாட்டு-உள்நாட்டு தொழில் வணிக மதலீட்டு நிறுவனங்களால் ஆட்டுவிக்கப்பட்டு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தேசிய இனங்களின் உரிமைகளை நசுக்குவதிலும் வாழ்வாதாரங்களைப் பறிப்பதிலும் குறியாகச் செயல்படுகிறது. உலகமே இன்றைக்கு விக்கி லீக்ஸ் இணையத்தளமும் – சேனல்4 தொலைக்காட்சியும் அம்பலப்படுத்திய ஈழத்தமிழர்களை இலங்கை இராணுவம் இனரீதியாக அழித்துக்கொல்லும் போர்க்குற்றங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சர்வதேச சமூகம், சர்வதேச விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். ஆனால் இந்தியாவையும், தமிழகத்தையும் ஆள்பவர்கள் இதுகுறித்து வாய்திறக்க மறுக்கிறார்கள். உலகவரலாறு காணாத 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே வாய் திறக்காதவர்கள், ஈழத்தமிழர் இனஅழிப்பைக் கண்டித்த எங்கே குரலெழுப்பப் போகிறார்கள்? எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பார்கள். ஊலகில் நாம் 10 கோடித் தமிழர்கள்! நமது இலக்கியத்தை அடைய முயன்றால் முடியாதது என்ன?

பேராசிரியர் தீரன்

மாநில ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு]19.12.2010 அன்று தஞ்சை மாவட்டம் திருவையாறில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்.
அடுத்த செய்திஇலங்கையில் நடைபெற்ற போர்குற்றம் தொடர்பான விசாரணைக்கு நியமித்துள்ள குழுவுக்கான பதவிகாலம் நீட்டிப்பு.