நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் மீது கோரத்தாக்குதலை நிகழ்த்திய சமூகவிரோதிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

102

திருப்பூர், பல்லடத்தைச் சேர்ந்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளரான தம்பி நேசபிரபு அவர்கள் மீது சமூக விரோதிகள் கோரத்தாக்குதல் தொடுத்த செய்தியானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் அதிகரித்து வரும் வன்முறை வெறியாட்டங்களும், கொலைவெறிச்செயல்களும், ஆணவக் கொலைகளும் சட்டம் ஒழுங்கின் இலட்சணத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

பத்திரிகையாளரான தம்பி ஷபீர் அகமதுவுக்கு வெளிப்படையாகக் கொலைமிரட்டல் விடுக்கப்படுவதும், பத்திரிக்கையாளரான தம்பி நேசபிரபு அவர்கள் மீது கொலைவெறித்தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதுமான கொடும் நிகழ்வுகள் அரசின் கையாலாகத்தனத்தையே காட்டுகின்றன. தம்பி நேசபிரபு அவர்கள் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதைக் கூறியும், தகுந்த நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரின் அலட்சியப் போக்கினாலேயே இவ்வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. தம்பி நேசபிரபு மீதானத் தாக்குதலுக்கு எனது வன்மையானக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, தம்பி நேசபிரபுவைத் தாக்கிய கொடுங்கோலர்கள் மீது கடும் சட்டப்பிரிவுகளின் வழக்குத் தொடுத்து, உடனடியாக அவர்களை சிறைப்படுத்த வேண்டுமெனவும், தம்பி நேசபிரபு உடல்நலம் பெற்று, மீண்டுவர தகுந்த மருத்துவச்சிகிச்சை வழங்கப்படுவதையும், அவரது முழு பாதுகாப்பினையும் உறுதி செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

https://twitter.com/Seeman4TN/status/1750435807578443801?t=ufCTjJ4cXtV1vcaUZ-EQdg&s=19

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம், 2024! – சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திமலர்வணக்க நிகழ்வு: சேவியர் குமார் குடும்பத்தாருக்கு சீமான் ஆறுதல்!