சுற்றறிக்கை: உலகத் தாய்மொழி நாளன்று தமிழ் மீட்சிப் பாசறை முன்னெடுக்கும் “தமிழ்த் திருவிழா”

833

க.எண்: 2021020063
நாள்: 07.02.2021

சுற்றறிக்கை: உலகத் தாய்மொழி நாளன்று தமிழ் மீட்சிப் பாசறை முன்னெடுக்கும்
“தமிழ்த் திருவிழா”

ஆண்டுதோறும் பிப்ரவரி 21 அன்று “உலகத் தாய்மொழி நாள்” கொண்டாடப்படுகிறது. உலக நாடுகளின் ஒன்றியக் (United Nations) கணக்கீட்டின் படி ஏறத்தாழ 6000 மொழிகள் உலகில் உள்ளன. அவற்றுள் 43 விழுக்காடு (ஏறத்தாழ 2600) மொழிகளில் பல இறந்தும் மற்றும் பல இறக்கும் நிலையில் உள்ளன. அதாவது, இரு கிழமைக்கு ஒரு மொழி அழிகிறது என்பதே உலக நாடுகளின் ஒன்றியந் தரும் புள்ளிக் கணக்கு. ஒரு மொழி அழியும் போது அம்மொழி மட்டுமில்லாமல் அதனோடு அந்த மொழி சார்ந்த மக்களின் பண்பாடு, கலை, அறிவியல் என அனைத்தும் அழிகிறது என்பதே உண்மை.

இந்திய ஒன்றியத்தின் தவறான மொழிக் கொள்கையாலும், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்ற அயலர்களின் ஆட்சியாலும், திராவிட ஆட்சியாளர்களின் சூழ்ச்சியாலும் நம் மொழியை நாம் மெல்ல இழந்து வருகிறோம். உலக நாடுகளின் ஒன்றியக் கணக்கான அழியும் மொழிகளின் பட்டியலில் உலகின் முதற்றாய்மொழியான நம் தமிழ் மொழியும் இணையாமல் இருக்கச் செய்வதே ஒவ்வொரு தமிழனின் கடமை.

தமிழை மீட்டெடுக்கும் இந்த அரும்பணியின் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி – தமிழ் மீட்சிப் பாசறையின் மற்றுமொரு முன்னெடுப்பே உலகத் தாய்மொழி நாளான பிப்ரவரி 21-இல் நாம் திட்டமிட்டுள்ள கீழ்க்கண்ட மூன்று களப்பணிகள்.

) கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளைத் தமிழில் மாற்றுவது,

) ஊர்திப் பதிவெண்களைத் தமிழில் மாற்றுவது,

) தமிழில் கையொப்பமிடுவது.

௧. கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளைத் தமிழில் மாற்றுவது

பணி 1:

ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு முதன்மையான பகுதியை (prime area) தேர்ந்தெடுத்து, இப்போதே அங்குச் சென்று கள ஆய்வு செய்து அங்கு இருக்கும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் அரசாணைகளின் படி1 உள்ளதா என்று பார்க்க வேண்டும். அப்படி அரசு வகுத்த அளவின் படியும், தமிழில் இல்லாத வணிக நிறுவனங்கள் / அங்காடிகளின் பெயர்களைக் குறிப்பெடுத்து வரவேண்டும். அவற்றிற்குச் சரியான தமிழ்ப் பெயரைப் பரிந்துரைத்து, தமிழ் மீட்சிப் பாசறை கொடுத்துள்ள மடலில்2 தற்போதைய பெயரையும், அதற்கு இணையான தமிழ்ப் பெயரையும் பதிந்து அந்தக் கடைக்காரர்களிடம் அளித்துப் பெயர் மாற்றச் சொல்லி வலியுறுத்த வேண்டும்.

நம் கொள்கைகளில் உடன்பாடுள்ள கடை உரிமையாளர்களைக் கண்டுபிடித்து (ஒரு தொகுதிக்கு 10 கடைகளுக்குக் குறையாமல்) அவர்களின் கடைப் பெயர்களை மாற்றும் பணியை உடனே செய்யும் படி ஏற்பிசைவு வாங்க வேண்டும். பெயர்ப் பலகைகளை மாற்றுவதற்கான பணிகளை முன்பே திட்டமிட்டு அணியமாக வைத்து, மாற்றத்தை மட்டும் கும்பம் ௯, ௨௦௫௨ (பிப்ரவரி 21, 2021) அன்று செய்ய வேண்டும்.

1குறிப்பி (reference):

க) அரசாணை (நிலை) எண்.1541, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, நாள் 29.07.1982.

௨) அரசாணை (நிலை) எண்.349, தமிழ்வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை, நாள். 14.10.1987.

௩) அரசாணை (நிலை) எண்.291, தமிழ்வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை, நாள் 19.12.1990.

௪) சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிப்பேராணை எண்.7334/17 வெளியிடப்பட்ட தீர்ப்பாணை.

மேற்குறிப்பிட்ட அரசாணைகளின் படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் கட்டாயமாக முதலில் தமிழிலும் அடுத்துத் தேவைப்பட்டால் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளிலும் முறையே 5:3:2 என்ற அளவில் அமைத்தல் வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் பயன்படுத்தும் நிலையில் முறையே 5:3 என்ற அளவில் அமைத்தல் வேண்டும்.

ஆவணப்படுத்தல்:

முன்பு இருந்ததையும் மாற்றப்பட்ட பெயர்ப் பலகையையும் படம் எடுத்து முகநூல் மற்றும் கீச்சகப் பக்கங்களில் #தமிழோடுவாழ்வோம் #எங்கும்எதிலும்தமிழ் #தமிழ்மீட்சிப்பாசறை என்ற பதிவுக்குறி (hashtag) உடன் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். கூடுதலாக இந்த ஆவணங்களைச் செயற்களத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பணி 2:

கும்பம் ௯, ௨௦௫௨ (பிப்ரவரி 21, 2021) அன்று, அந்தந்த மாவட்டத்தைச் சார்ந்த அனைத்துத் தொகுதி தமிழ் மீட்சிப் பாசறை பொறுப்பாளர்களும் இணைந்து கட்சியின் மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்கள், வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள் மற்றும் அந்தந்த மாவட்ட வேட்பாளர்கள் இணைந்து ஒரு அணியாகச் சென்று

௧. மாவட்ட ஆட்சியரிடம் பெயர்ப் பலகைகளுக்கான சட்டத்தை, உயர் நயன்மன்றத்தின் (நீதிமன்றத்தின்) பரிந்துரைக்கேற்ப மாற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்திக் கோரிக்கை மடல் அளிக்க வேண்டும்.

௨. தமிழ் வளர்ச்சித் துறை அலுவலருக்கு இதையே வலியுறுத்திக் கோரிக்கை மடல் அளிக்க வேண்டும்.

௩. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அலுவலருக்கு இதையே வலியுறுத்திக் கோரிக்கை மடல் அளிக்க வேண்டும்.

ஆவணப்படுத்தல்:

அரசு அலுவர்களிடம் கோரிக்கை மடல் அளிப்பதை படம் எடுத்து முகநூல் மற்றும் கீச்சகப் பக்கங்களில் #தமிழோடுவாழ்வோம் #எங்கும்எதிலும்தமிழ் #தமிழ்மீட்சிப்பாசறை என்ற பதிவுக்குறி (hashtag) உடன் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். கூடுதலாக இந்த ஆவணங்களை செயற்களத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இணைப்புகள்:

 • 2கடைகளுக்குக் கோரிக்கை வைக்கும் மடல் இணைக்க வேண்டும்.
 • அரசு அலுவலர்களுக்கு அளிக்க வேண்டிய மூன்று மடல்கள் இணைக்க வேண்டும்.
 • மாவட்ட வணிகர் சங்க ஆளுவர்களிடம் (நிர்வாகிகளிடம்) அளிக்க வேண்டிய மடல் இணைக்க வேண்டும்.

௨. ஊர்தி எண்களைத் தமிழில் மாற்றுவது

ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு முதன்மையான பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு ஊர்தி எண் மாற்றும் பணி செய்வதற்கான இடத்தை இறுதி செய்ய வேண்டும். அங்கு ஊர்தி எண் மாற்றும் நிகழ்வை கும்பம் ௯, ௨௦௫௨ (பிப்ரவரி 21, 2021) அன்று நடத்த மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்கள் காவல் துறையிடம் ஏற்பிசைவு (அனுமதி) வாங்க வேண்டும்.

கும்பம் ௯, ௨௦௫௨ (பிப்ரவரி 21, 2021) அன்று காலை 9 மணி அளவில் அந்த இடத்தில் பதாகைகள் வைத்து அந்தப் பக்கம் வரும் ஊர்திகளுக்குத் தமிழில் ஊர்தி எண் வைக்கலாம் என்ற சட்ட குறிப்பைத் தாங்கிய துண்டறிக்கையைக் கொடுக்கலாம். அதைப் படித்து ஏற்பிசைவு கொடுப்பவர்களுக்கு இலவயமாக ஊர்தி எண்களைத் தமிழில் மாற்றிக் கொடுக்கலாம்.

குறிப்பு –

 1. ஊர்தி எண்களை மாற்ற அந்தந்த மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்கள் ஒட்டிகளை (Stickers) உருவாக்கிப் பயன்படுத்தலாம்.
 2. ஊர்தி எண் முன்பு இருந்தது, நம் உறவுகள் அவற்றைத் தமிழில் மாற்றுவது மற்றும் மாற்றிய ஊர்தியின் படம் என்று மூன்று படங்களையும் முகநூல் மற்றும் கீச்சகப் பக்கங்களில் #தமிழோடுவாழ்வோம் #எங்கும்எதிலும்தமிழ் #தமிழ்மீட்சிப்பாசறை என்ற பதிவுக்குறி (hashtag) உடன் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். கூடுதலாக இந்த ஆவணங்களை செயற்களத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மாற்றுபவர்களை அவர்களின் ஊர்திகளில் நாம் அளிக்கும் துண்டறிக்கையை எப்போதும் வைத்திருக்கும்படி அறிவுறுத்துவது நன்று. காவல்துறை ஊர்தி எண் தமிழில் இருப்பதைப் பற்றி வினா எழுப்பினால் அந்தத் துண்டறிக்கை அதற்கு விடையாக அமையும்.

இணைப்புகள்:

 • துண்டறிக்கையின் மாதிரி
 • ஒட்டிகள் மாதிரி

௩. தமிழில் கையொப்பம் இடுவது

ஊர்தி எண் மாற்றும் இடங்களில் ஒரு பக்கத்தில் ஒரு பெரிய கையொப்பப் பதாகை ஒன்றை வைத்து அதில் அந்தப் பக்கம் செல்பவர்களுக்குத் துண்டறிக்கை கொடுக்கும் போது தமிழில் கையொப்பம் இட வலியுறுத்த வேண்டும்.

துண்டறிக்கையில் தமிழில் கையொப்பம் இடுவதை அனைத்து அரசு அலுவலகங்களிலும் தனியார் அலுவலகங்களிலும் ஏற்க வேண்டும் என்ற சட்டத்தை குறிப்பிட வேண்டும்.இதன் மூலம் இதுவரை தமிழில் கையொப்பம் இடாதவர்களை முதன்முதலில் கையொப்பமிட வைத்து ஏற்படுத்தலாம்.

இணைப்புகள்:

 • துண்டறிக்கையின் மாதிரி
 • கையொப்பப் பதாகை மாதிரி

செயற்களத்தில் ஆவணப்படுத்தல்:

செயற்களத்தில் தொகுதி நிகழ்வுகளாக கீழ்க்கண்ட நிகழ்வுகளைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்திப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 1. தமிழ்த் திருவிழா – வணிகப் பெயர்ப் பலகை
 2. தமிழ்த் திருவிழா – ஊர்தி எண்கள்
 3. தமிழ்த் திருவிழா – தமிழ்க் கையொப்பம்

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நாம் தமிழர் கட்சியின் கோட்பாட்டை நிலை நாட்ட நம் தாய்மொழியான தமிழின் சிறப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்குறிப்பிட்ட இம்மூன்று பணிகளையும் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் பேரெழுச்சியோடு தமிழ் மக்களுக்கு எடுத்துச் செல்ல அழைக்கிறோம்.

– தமிழ் மீட்சிப் பாசறை
நாம் தமிழர் கட்சி

தரவிறக்கங்கள் (Downloads)

1.பெயர்ப்பலகைகள் குறித்த அரசாணையை அரசு அதிகாரிகள் நடைமுறைப்படுத்த கோரிக்கை

2.பெயர்ப்பலகைகள் குறித்த அரசாணையை வணிகர் சங்க பொறுப்பாளர்கள் நடைமுறைப்படுத்த கோரிக்கை

3.பெயர்ப்பலகைகள் குறித்த அரசாணையை வணிகர்கள் நடைமுறைப்படுத்த கோரிக்கை