ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை முன்வைத்து சென்னை பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியப் பெருமக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 31-12-2022 அன்று நேரில் சந்தித்து, அவர்களது போராட்டத்திற்கு அதரவு தெரிவித்தார்.
சம வேலைக்கு சம ஊதியம் வேண்டி சென்னை, பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் 5வது நாளாக தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியப் பெருமக்களை நேரில் சந்தித்து, போராட்டத்திற்கு ஆதரவளித்து அவர்களின் கோரிக்கையைக் கேட்டறிந்தேன்.
(1/4) @Anbil_Mahesh pic.twitter.com/mAIIMDnpgY— சீமான் (@SeemanOfficial) December 31, 2022
அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியப் பெருமக்கள் சம வேலைக்கு சம ஊதியம் வேண்டி சென்னையில் 5 வது நாளாக நடத்திவரும் உண்ணாநிலைப்
போராட்டத்தில் நேரில் கலந்துக்கொண்டு போராட்டத்திற்கு ஆதரவளித்து அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்தேன். ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கை மிகமிக நியாயமானது.
வருங்காலத் தலைமுறையினருக்கு கல்வியையும், நல்லொழுக்கத்தையும் போதித்து நல்லதொரு குடிமக்களாக நாட்டிற்கு உருவாக்கித் தரும் போற்றுதற்குரிய ஆசிரியப் பெருமக்களை உரிமைகேட்டு வீதியில் இறங்கிப்போராடச் செய்திருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
ஆசிரியர்களின் போராட்டத்தால் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வியும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
அன்புத்தம்பி அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் உடனடியாக போராடும் ஆசிரியர் பெருமக்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து மாணவர்களின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் காத்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.