வீரத்தியாகி நமது பாட்டன் விஸ்வநாத தாஸ் 82ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – கட்சித் தலைமையகம்

126

31-12-2022 | பாட்டன் விஸ்வநாத தாஸ் 82ஆம் ஆண்டு நினைவேந்தல் | சீமான் செய்தியாளர் சந்திப்பு

இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி நமது பாட்டன் விஸ்வநாத தாஸ் அவர்களின் 82ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக 31-12-2022 இன்று கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது

நிகழ்வின் நிறைவாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், “தமிழினத்தினுடைய பெருமைமிகுந்த முன்னவர்களில் இந்த நிலப்பரப்பு அடிமைப்பட்டு இருந்தபோது, அதன் விடுதலைக்காக அரும்பாடாற்றிய எங்கள் அருமைப் பாட்டனார். மருத்துவ குலத்தில் பிறந்து, அக்குலத்தவர் பாதி இசைத்துறையைத் தேர்வு செய்துவிட்டனர், மற்ற பாதி முடிதிருத்தும் கலைத் தொழிலை ஏற்றுக்கொண்ட  நிலையில், தனக்கிருந்த இசைப் பேராற்றலைப் பயன்படுத்தி, பாட்டு எழுதுவது, அதனை மிகவும் இனிமையாகப் பாடுவது, அசாத்திய நடிப்பாற்றல் திறன் போன்றவற்றைக் கொண்டு மங்கிக்கிடந்த நாட்டு விடுதலை உணர்வை, தன் பாட்டின் மூலமாகவும், நடிப்பின் மூலமாகவும் இந்த மண்ணின் மக்களுக்கு ஊட்டிய ஒரு மகத்தானக் கலைஞன் நம்முடைய பாட்டனார், விஸ்வநாத தாஸ் அவர்கள்.

ஒரு காலகட்டத்தில், விஸ்வநாத தாஸ் நாடகம் நடக்கிறது என்றாலே அங்கே மக்கள் உணர்வு பெற்று எழுச்சிக் கொள்கிறார்கள் என்று அறிந்துக்கொண்ட வேலைக்கார அரசுக் காவலர்கள், அவரைச் சிறை பிடிப்பது பிறகு விடுதலை செய்வது என்பதை வாடிக்கையாக வைத்திருந்தது. அந்தச் சூழலில் தொடர்ச்சியாக அவர் சிறைபிடிக்கப்பட்டதால் பொருளாதாரம் ஈட்டி தன் குடும்பத்தை சரிவர கவனிக்க முடியவில்லை. மிகவும் நலிவுற்ற நிலையில் இருந்த அவருக்கு மேலும் நெருக்கடி ஏற்படும் வகையில் அவர் பரம்பரையாக வாழ்ந்த வீடு ஏலத்திற்கு வருகிறது. அதனையும் இழக்கும் சூழ்நிலைக்கு வருகிறார் நமது பாட்டனார். அன்றைய மாநகரத் தந்தையாக இருந்த வாசுதேவ் அவர்கள், “நீங்கள் துன்பப்படக் கூடாது, இந்த வீட்டிற்கு என்ன தொகை வருமோ அதை நானே கட்டி உங்கள் வீட்டை மீட்டுத் தருகிறேன். அதனை நீங்களே பயன்படுத்துங்கள்” என்று கூறியபோது, “என்னால் புல்லை உண்ண முடியாது” என்று கூறி அதை மறுத்தார் நமது பாட்டனார்.

முன்பெல்லாம், இந்த மருத்துவர் குலத்தைச் சார்ந்தவர்கள் தான் மக்களுக்குச்  சில மருத்துவப் பணிகளைச் செய்தார்கள். அவர்கள் தான் மகப்பேறு, அறுவைச் சிகிச்சைகள் செய்தார்கள். அதனாலேயே அவர்கள் மருத்துவ குலம் என்று அழைக்கப்பட்டார்கள். எங்கள் கோயில்களில் பண்டாரங்கள், குயவர்கள், நாவிதர்கள், வண்ணார்கள் தான் வழிபாடு செய்துக்கொண்டிருந்தார்கள். அப்படிபட்ட எங்களைத் தாழ்த்தி, தீண்டத்தகாதவன் என்று தள்ளி வைத்துவிட்ட சூழலில், இந்த மருத்துவக் குலமும் தாழ்த்தப்பட்ட சமூகமாகக் கருதப்பட்டுவிட்டது. அதனால், இந்த நாவிதக் குலத்தில் பிறந்த விஸ்வநாத தாசுடன் நாங்கள் நாடகத்தில் நடிக்க மாட்டோம் என்று மறுத்த உயர்சாதி நடிகர்கள் பலர் உள்ளனர். அது நம் பாட்டனாருக்கு மிகுந்த வலியையும், மனச்சோர்வையும் கொடுத்துவிட்டது.

ஒரு பொதுவானவனாக இருந்து, இந்த மண்ணின் உரிமைக்கு, அதன் விடுதலைக்குப் போராடுகிற ஒரு மகனை தாழ்த்தப்பட்டவன் என்று பார்க்கும் அவர்களும் வெள்ளைய ஏகாதிபத்தியத்தின் அடிமை தான். அந்த நிலையிலிருந்த நமது பாட்டனார், பிறர் உதவியை நாடாது தானே நடித்து பொருளாதாரம் ஈட்டி அவர் வீட்டை மீட்டுவிடலாம் என்று எண்ணித்தான் தனது நாடகத்தில் “தாழ்த்தப்பட்ட சோதரரைத் தாங்குவோர் உண்டோ, மண்ணில் ஏங்குவோர் உண்டோ” என்றெல்லாம் வருந்திப் பாடுகிறார். தான் ஏற்றிருக்கும் பாத்திரத்தின் முழு வடிவமாகவே மாறி அந்த வேடத்தில் கரைந்து நாடகத்தில் நடிக்கும் ஆற்றல் பெற்றவர் நம்முடைய பாட்டனார்.

தொடர்ச்சியாக நாடகத்தில் நடித்த நமது பாட்டனார் உடல் நலிவுற்ற நிலைக்குச் செல்கிறார். அப்பொது இறுதியாக அவர் முருகன் வேடமிட்டு நடிக்கிறார். அந்த நாடக மேடையிலேயே அவர் இறுதியாக இட்ட முருகன் வேடத்திலேயே அவரின் இன்னுயிர் பிரிகிறது. அப்படிபட்ட அளப்பரிய ஈகத்தைச் செய்தவர்கள் நமது பாட்டனார் விஸ்வநாத தாஸ் போன்றவர்கள் போற்றப்படவில்லை என்றால், அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசனார் போன்றவர்களெல்லாம் புறந்தள்ளப்பட்டு, இருட்டடிப்புச் செய்யப்பட்டார்கள் என்றால், இன்று வரை ஆதிக்கத்தில் இருப்பவர்களின் உள்ளத்தில், சிந்தனையில் இருக்கும் தீண்டாமை எனும் அழுக்கு தான் அதற்குக் காரணம்.

மாபெரும் நடிப்பாற்றல் பெற்ற கலைஞன் நமது பாட்டனார் விஸ்வநாத தாஸ் போன்றவர்களை நாங்கள் போற்றுவதற்குக் காரணம் வருங்காலத் தலைமுறைப் பிள்ளைகளுக்கு நம் வரலாற்று அடையாளங்களை, சுவடுகளை எடுத்துச் சொல்ல வேண்டியக் கடமையும் பொறுப்பும் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் இருக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், “வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் ஒருநாள் தங்களுக்கான வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள்” என்று கூறுகிறார். அப்படி எம்மினா வரலாற்றை எழுதுவதற்கான முயற்சி, செயல், வேலைத்திட்டம் தான் நாங்கள் செய்வது.

எனக்குப் பின்னால் வரக்கூடிய என் தம்பி தங்கைகளுக்கு, அதற்குப் பின்னால் வரக்கூடிய என் இனத்தலைமுறைக்கு விஸ்வநாத தாஸ், வ.உ.சி, அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசனார், திரு.வி.க, மறைமலை அடிகள், அண்ணல் தாங்கோ, கி.ஆ.பெ.விசுவநாதம், பாரதி, பாரதிதாசன் போன்ற எம்மினா முன்னோர்கள் யாரென்று தெரிய வேண்டும். தன் வரலாறு தெரியாத இனம், தனக்கான வரலாற்றை எப்படிப் படைக்கும். அதற்குத் தான் இந்த வேலையை எங்களின் வரலாற்றுப் பெரும்பணி என்று கருதி, அடுத்தத் தலைமுறைக்கு எம்மின முன்னவர்களை அடையாளப் படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

அப்படிபட்ட விடுதலைப் போராட்ட ஈகியர் எங்களுடைய பாட்டனார் விஸ்வநாத தாஸ் அவர்களுக்கு நாம் தமிழர் பிள்ளைகள் பெருமிதத்தோடு எங்களின் புகழ் வணக்கத்தைச் செலுத்துவத்தில் பெருமை கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.

 

முந்தைய செய்திநத்தம் தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு
அடுத்த செய்திசம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு