அரசர்க்கரசன் அரசேந்திரச்சோழன் பெருவிழாப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | பிரம்மதேசம் (திருவண்ணாமலை மாவட்டம்)

232

21.07.2022 | அரசர்க்கரசன் அரசேந்திரச்சோழன் பெருவிழாப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | பிரம்மதேசம் (திருவண்ணாமலை மாவட்டம்)

தமிழ்ப் பேரினத்தின் மாமன்னன், அரசனுக்கு அரசன், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என பல்வேறு நாடுகளை வென்று புலிக்கொடி நாட்டி, தமிழனின் வீரத்தை உலகறியச் செய்த வீரமிகு நமது பெரும்பாட்டன் அரசேந்திரச்சோழன் (இராசேந்திரச் சோழன்) அவர்களின் பிறந்தநாளினை மிகச்சிறப்பாக கொண்டாடும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பாக, அவர் பள்ளிப்படை அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் ஒன்றியம், பிரம்மதேசம் கிராமத்தில் 21-07-2022 அன்று மாலை 04 மணியளவில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் ‘அரசர்க்கரசன் அரசேந்திரச்சோழன் பெருவிழாவானது’ பறையிசை ஆட்டம், சிலம்பாட்டம், சிவ வாத்தியம் போன்ற  தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வெகுசிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக, பிரம்மதேசம் கிராமத்தில் குறுகிய ஓலை கொட்டகையில் அமைந்துள்ள அரசேந்திரச்சோழனின் நினைவிடத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர் வணக்கம் செலுத்தினார்.

மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தமிழமுது, தமிழ் மீட்சிப் பாசறை புலவர் மறத்தமிழ்வேந்தன், மருத்துவப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இளவஞ்சி, வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் செந்தில்நாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் புலவர் கிருட்டினக்குமார் ஆகியோர் உரையாற்றினர். நாம் தமிழர் தொழிற்சங்க மாநிலத் தலைவர் அன்புத்தென்னரசன் நிகழ்வு ஒருங்கிணைப்பு மேற்கொண்டார்.

செந்தமிழன் சீமான் அவர்கள் பெருவிழாப் பேருரையாற்றினார்.

தெற்கே இலங்கை, வடக்கே கங்கை, குடதிசை மகோதை, குணதிசை கடாரம் இவற்றையெல்லாம் வென்று தன் பெருமிதத்தை நிலைநாட்டிய அரசனுக்கு அரசன் நம் அருமைப் பெரும்பாட்டன் அரசேந்திரச்சோழன் அவர்களினுடைய பிறந்தநாள் விழாவை பெருமிதத்தோடும் திமிரோடும் நாம் தமிழர் பிள்ளைகள் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். பிரம்மதேயம் என்கிற வரலாற்றுப் புகழ்பெற்ற இன்னும் பெரும்பேரு பெறப்போகிற இந்த கிராமத்தில், நம்முடைய பாட்டனாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது. தமிழினம் எவ்வளவு தூரம் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு நம்முடைய பாட்டனார் அடக்கம் செய்யப்பட்ட அந்த இடத்தை பார்க்கும்போதும், அவருடைய தந்தை ராஜராஜன் என்கிற அருண்மொழிச்சோழன் அடக்கம் செய்யப்பட்ட உடையாளூரை சென்று பார்க்கும்போதும் உணர முடியும். அதை பார்க்கும்போது அறம், மானம், வீரம் இவை மூன்றும் உயிரென்று வாழ்கிற ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் கண்ணில் நீர் வடியாது, இரத்தம் வடியும்.
இங்கே, நம்மை அண்டிஒண்டி பிழைக்க வந்தவர்கள், நம்மீது அதிகாரத்தைச் செலுத்தி ஆண்டு கொழுத்தவர்கள், உலகப் புகழ்பெற்ற சென்னை கடற்கரையில் 2 ஏக்கர் 3 ஏக்கர் நிலத்தில் பலகோடி செலவில் சமாதி கட்டி அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், சிறிய கூரைக்குக்கீழே நமது பெருமைக்குரிய பாட்டனார்கள் நினைவிடம் இருப்பதென்பது ஒவ்வொரு தமிழ் மகனும் வெட்கித் தலை குனிய வேண்டிய ஒரு இழிநிலை. இதை மாற்றுவதற்கேனும் மானத்தமிழ் பிள்ளைகள் நாம் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்கிற உறுதியை எற்கிறோம்.
சோழர் கால ஆட்சியை பொற்கால ஆட்சியாக மாற்றிய அரசன் இராஜராஜன் என்கிற அருண்மொழிச்சோழன். அரசனுக்கு அரசன், மாமன்னன் என்று தான் இருக்க வேண்டும். ஆனால் நாம் சமஸ்கிருதத்தை உள்வாங்கியதன் விளைவு அரசன் என்று இருக்க வேண்டிய இடத்தில் ராஜன் என்று மாறியிருக்கிறது. அரசனுக்கு அரசன் என்பது ராஜராஜனாக மாறிவிட்டது. அதை மீட்டுருவாக்கம் செய்கிற பணியை செய்வதன் விளைவாக, பதாகைகளில் அரைவட்டத்திற்குள் இராசேந்திரச்சோழன் என்றும் அதற்கு மேலே பெரிதாக அரசனுக்கு அரசன் அரசேந்திரச்சோழன் என்றும் எழுதி வருகிறோம். ராஜராஜன் என்று எப்படி மாற்றப்பட்டதோ அப்படி அரசனுக்கு அரசன் என்று மாறும். அது எப்படி பழக்கப்பட்டதோ அப்படி இதுவும் பழக்கப்படும். ‘பஸ் ஸ்டண்ட்’ என்று சொல்லிக்கொண்டிருந்தோம், இப்போது எல்லோரும் பேருந்து நிலையம் என்று தான் சொல்லுகிறோம். ஆரம்பத்தில் ‘ஜில்லா’ என்றீர்கள், இப்போது எல்லோரும் மாவட்டம் என்று தான் சொல்லுகிறீர்கள். நாம் வருவதற்கு முன்பு எல்லா தொலைக்காட்சியும் ‘லைவ்’ என்று தான் ஒளிபரப்பியது, இப்போது தான் நேரலை நடக்கிறது. நாம் வருவதற்கு முன்பு எல்லோரும் ‘பிரச்சாரம்’ தான் செய்துகொண்டு இருந்தார்கள், இப்போது நாம் தமிழர் பிள்ளைகள் வந்த பின்பு பரப்புரை செய்கிறார்கள். மாற்றம் என்பது தானாக வராது, அதை நாம் தான் உருவாக்க வேண்டும். இது நமது காலம்.

நாம் சோழர்களைப் பற்றி பேசுவதும், வரலாற்றைப் பேசுவதற்கும் காரணம், ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் வரலாறு தான் வழிகாட்டும். அண்ணல் அம்பேத்கர் சொல்வதைப் போல, வரலாறு படிக்காதவன் வரலாற்றைப் படைக்க முடியாது. வரலாற்றில் எங்கு நாம் வாழ்ந்தோம், எங்கு வீழ்ந்தோம் என்று அறியாது நாம் எழுச்சிபெற முடியாது. வரலாறு என்பது வெறும் வார்த்தை அல்ல, வருங்கால தலைமுறையின் வழித்தடம். சேர சோழ பாண்டியர் மூவரும் சேர்ந்து சண்டையிட்டிருந்தால் உலகம் முழுவதும் தமிழர் நிலமாகத்தான் இருந்திருக்கும். ஆனால், இவர்கள் சொந்த ரத்தங்களுக்குள் யுத்தம் செய்தார்கள்.
இப்போது கூட, நம்மை கொடியேற்ற விடாமல் தடுக்கிறார்கள். ஆனால், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, விஜய்காந்த் கொடியேற்றும்போது இவர்கள் வாய்திறக்கவில்லை. இந்த மண்ணின் மகன், மானத்தமிழ் பிள்ளை நான் கொடியேற்றும்போது உங்களுக்கு வலிக்கிறது என்றால் என்ன காரணம்? எங்களை பறை அடிக்க கூடாது என தடுக்கிறீர்கள்; பறை என்பது வெறும் பறை அல்ல, என் இனத்தின் எழுச்சிமிகு குறியீடு. எங்கள் முழக்கமே, ‘இது ஆதித்தமிழ் பறையடா, அதை அடித்து பகை முகத்தில் அறையடா’ என்பது தான். 2 சீட்டிற்கும் 3 சீட்டிற்கும் மண்டியிட்டு கூட்டணிக்கு செல்லும் உங்களுக்கு எங்களைப் போன்று தேர்தலில் தனித்து போட்டியிட துணிவிருக்கிறதா? பேரம் பேசி, காசு வாங்கிக்கொண்டு, சீட்டு வாங்கி கட்சி நடத்தும் கோழைகள் அல்ல நாங்கள். இந்த இடம் உங்கள் கோட்டையென்றால், ஒட்டுமொத்த தமிழ்நாடும் எங்கள் கோட்டை.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திவிலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திமாநில ஒருங்கிணைப்பாளர் நெய்வேலி ஆ.சிவக்குமார் அவர்களின் தந்தை மறைவு! – சீமான் ஆறுதல்