இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ள 69 தமிழக மீனவர்களையும் விரைந்து மீட்டெடுப்பதற்குரிய துரித நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
இலங்கைக்கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 69 பேர் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். தமிழக மீனவர்களைத் தாக்குவதும், படுகொலை செய்வதும், அவர்களது உடமைகளைப் பறிப்பதும், கைதுசெய்வதுமான சிங்கள இனவாத அரசின் கொடுங்கோல்போக்குகள் கடும் கண்டனத்திற்குரியது.
தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 55 பேரையும், புதுக்கோட்டை ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 14 பேரையும் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, கடந்த மூன்று நாட்களில் அடுத்தடுத்து கைது செய்திருப்பதோடு மட்டுமல்லாது, அவர்களது படகுகளையும் இலங்கைக்கடற்படையினர் பறிமுதல் செய்திருப்பது அம்மீனவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் கலக்கத்தையும், சக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக மீனவர்கள் மீது சிங்கள இராணுவம் நடத்திவரும் தொடர் வன்முறைத்தாக்குதல்களும், படகுகளைப் பறித்து கொள்ளும் அநீதியும், வலையறுப்பு நிகழ்வுகளும், மீனவர்களை நடுக்கடலில் வைத்துத் தாக்குவதும், கடலுக்குள் தள்ளி விடுவதும், ஆயுதத்தைக் கொண்டு துன்புறுத்துவதும், அவர்களது உடைமைகளைப் பறித்துக்கொள்வதும், மீன்களைக் கடலில் வீசியெறிவதும், வலைகளை அறுத்தெறிவதும், படகுகளைச் சேதப்படுத்துவதும், சிறைப்பிடிப்பதும், துப்பாக்கிச்சூடு நடத்துவதும் என சிங்கள இராணுவம் அரங்கேற்றிவரும் கொடுமைகள் சொல்லி மாளக்கூடியதல்ல. சிங்கள இனவாத அரசின் தமிழக மீனவர்கள் மீதான இக்கோரத்தாக்குதல்கள் யாவும் தமிழர்கள் மீதான இனவெறிப்பாகுபாட்டின் வெளிப்பாடேயாகும். தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக்கடற்படையினரின் இத்தகையத் தாக்குதல்களுக்கெதிராக ஒன்றிய அரசு இதுவரை கண்டனம் தெரிவித்ததுமில்லை; எச்சரித்ததுமில்லை. இதன்விளைவாகத்தான், சிங்கள இனவெறி இராணுத்தின் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கதையாகி வருகிறது. தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் மீனவர்கள் மீதான இலங்கைக்கடற்படையின் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறதே ஒழிய, குறைந்தபாடில்லை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருந்தும், மீனவர்களின் வாழ்வுரிமைப்போராட்டம் தொடர்பானச் சிக்கலில், ஒன்றிய அரசிடம் வலியுறுத்திக் குறைந்தபட்ச எதிர்வினையாற்றக்கூட நெருக்கடி தராது, அலட்சியம் காட்டி, கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்துவிட்டதெனக் கருதிக் கைகட்டி வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் மெத்தனப்போக்கானது வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த தமிழர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். மொத்தத்தில், தமிழகத்தை ஆளும் திமுக அரசின் கையலாகத்தனமும், ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் வஞ்சகப்போக்குமே தமிழக மீனவர்களின் இத்துயர நிலைக்குக் காரணமாகும்.
ஆகவே, இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசு உடனடியாகத் தலையிட்டு இலங்கைக்கடற்படையினரால் சிறையிலடைக்கப்பட்டுள்ள 69 மீனவர்களையும் மீட்டெடுப்பதற்குரியத் துரித நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமெனவும், தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து கைதுசெய்யப்பட்ட மீனவர்களின் விடுதலையை விரைந்து சாத்தியப்படுத்த முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். இத்தருணத்தில், சக மீனவர்களின் கைதைக் கண்டித்தும், தங்களின் வாழ்வாதாரத்தை காக்கக்கோரியும் மீனவப்பெருமக்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி இறுதிவரை துணைநிற்கும் என உறுதியளிக்கிறேன்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி