அறிவிப்பு: செப்.12, சங்க காலம் தொட்டு இன்றுவரை.. தமிழரா.. திராவிடரா..? இன விடுதலை அரசியல் கருத்தரங்கம் – சென்னை (போரூர்)

1437

அறிவிப்பு: செப்.12, சங்க காலம் தொட்டு இன்றுவரை.. தமிழரா.. திராவிடரா..? இன விடுதலை அரசியல் கருத்தரங்கம் – சென்னை (போரூர்) | நாம் தமிழர் கட்சி

உலகத்தின் மிகமூத்தக் குடியான தமிழ்த்தேசிய இனத்தின் தனித்துவ அடையாளங்களை இல்லாதொழித்து, அதன் உண்மை வரலாற்றுக்குப் புறம்பாகத் தமிழர் என்கின்ற தேசிய இனத்தை அடையாளமழிப்பு செய்கின்ற முயற்சிகள் வரலாறு முழுக்க நடந்து வருகின்றன. மொழி, கலை, இலக்கிய, இலக்கண, பண்பாட்டு விழுமியங்கள் மூலமாக ஓர் இனம் கண்டடைந்த முதுபெரும் தன்மையை நீர்த்துப்போகச் செய்யும் இத்தகைய திசைதிருப்பல்களையும், ஒரு தேசிய இனத்தின் இறையாண்மையை, வரலாற்றுப் புரட்டுகள் மூலம் இல்லாமல் போகச்செய்யும் திரிபுவாதங்களையும் எடுத்த எடுப்பிலேயே முறியடிக்க வேண்டியது, உணர்வும் அறிவும் ஒருங்கே பெற்ற தமிழர்களது கடமையாகவும், காலத்தின் கட்டாயமாகவும் இருக்கிறது.

சங்ககாலம் தொட்டுத் தமிழர்கள் என்கிற ‌தேசிய இனத்தின் மக்கள் வரலாற்றில் யாராக அடையாளப்பட்டிருக்கிறார்கள் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டிட, எதிர்காலத் தலைமுறைக்கு ஆவணப்படுத்திட, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பில் “சங்க காலம் தொட்டு.. தமிழரா.. திராவிடரா..?” என்ற தலைப்பில் மாபெரும் இன விடுதலை அரசியல் கருத்தரங்கத்தினை வருகின்ற 12-092021 ஞாயிற்றுக்கிழமையன்று, காலை 10 மணி முதல் முழு நாள் நிகழ்வாக, சென்னை போரூர் மேம்பாலம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஈஸ்வரி திருமண நிலையத்தில் நடைபெறவிருக்கின்றது.

இம்மாபெரும் கருத்தரங்க நிகழ்வினை, செம்மை மரபுப் பள்ளியின் நிறுவனர் ஆசான் ம.செந்தமிழன் அவர்கள் தொடங்கி வைத்து, ‘சங்க காலத் தமிழர் வாழ்வியல்’ என்ற தலைப்பில் இறைப் பேருரை நிகழ்த்த உள்ளார். இந்தக் கருத்தரங்கின் காலை அமர்வில் தமிழர் நலம் பேரியக்கத்தின் தலைவர் இயக்குநர் மு.களஞ்சியம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் அ.வினோத் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் நாச்சியாள் சுகந்தி ஆகியோர் உரையாற்றவிருக்கின்றனர். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகான மாலை அமர்வில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் பேரறிஞர் ஐயா கி.வெங்கட்ராமன் அவர்களும்,‌ மாபெரும் ஆய்வறிஞர் தக்கார் மா.சோ.விக்டர் அவர்களும், ‌தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பேராசான் பெ.மணியரசன் அவர்களும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு தலைப்புகளில் மாபெரும் உரை நிகழ்த்தவிருக்கின்றனர்.

இந்த மாபெரும் நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெருநிகழ்வாக மாற்றவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உண்மையையும், தெளிவையும் விரும்பும் இனமானத் தமிழர்களும், அனைத்து தமிழ்த்தேசிய இயக்கங்களைச் சேர்ந்த உறவுகளும், சமூகச் செயற்பாட்டாளர்களும், தமிழ்த்தேசிய உணர்வாளர்களும், சக தேசிய இனச்சொந்தங்களும் பெருந்திரளாகப் பங்கேற்று இந்நிகழ்வினைச் சிறப்பிக்குமாறு நாம் தமிழர் கட்சி பேரன்புகொண்டு அழைக்கிறது.

திரள்வோம்! திரள்வோம்!
பகைமிரளத் திரள்வோம்! பைந்தமிழ் இனத்தீரே!

-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்
அடுத்த செய்திகவுண்டம்பாளையம் தொகுதி மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு