சுற்றறிக்கை: அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கவிருக்கும் மக்கள் விழிப்புணர்வுப் பரப்புரை தொடர்பாக

620

க.எண்: 2021010011
நாள்: 18.01.2021

சுற்றறிக்கை:

சென்னை மீஞ்சூரில், சனவரி 22, 2021 அன்று நடைபெறவிருக்கும்
அதானி துறைமுக விரிவாக்கத்திற்கான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அப்பகுதி பொதுமக்களைப் பெருமளவில் பங்கேற்க செய்ய வேண்டி,
அத்திட்டத்தின் பேராபத்தினை எடுத்துரைக்கும் விதத்தில்
நாம் தமிழர் – சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கவிருக்கும்
மாபெரும் மக்கள் விழிப்புணர்வுப் பரப்புரை 

அதானி துறைமுகங்களின் துணை நிறுவனமான மரைன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர் பிரைவேட் லிமிடெட் (எம்.ஐ.டி.பி.எல்) என்ற நிறுவனம், சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தை தற்போதைய அளவான ஆண்டுக்கு 24.66 மில்லியன் டன்னில் இருந்து ஆண்டுக்கு 320 மில்லியன் டன்னாக விரிவாக்கம் செய்யும் திட்டத்தை முன்மொழிந்து, சுற்றுச்சூழல் அனுமதிக்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு விண்ணப்பித்துள்ளது. இத்திட்டத்திற்கு தேவைப்படும் 6111 ஏக்கரில் கிட்டத்தட்ட 2300 ஏக்கர் மக்கள் பயன்பாட்டிலும், வாழ்வாதாரத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த புறம்போக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. மேலும் 2000 ஏக்கர் அளவில் கடல் பரப்பை ஆக்கிரமிக்கும் வகையில், சுமார் 6 கி.மீ வரையிலான கடல் பகுதிகளில் மணல் கொட்டப்படவுள்ளது. இவ்வாறு கடற்பரப்பில் மணலை கொட்டி அதன் இயல்புத் தன்மையிலிருந்து மாற்றுவது திரும்பப்பெறவியலா சூழலியல் மாற்றங்களை ஏற்படுத்தும்.

மேலும், இத்திட்டத்தின் மூலம் 2000 ஏக்கர் அளவிலான பழவேற்காடு நீர்ப்பகுதிகளும், கொற்றலை ஆற்றின் உப்பங்கழிகளும் தொழிற் பூங்காக்களாக மாற்றப்பட உள்ளது. குறைந்தது 6 முக்கியமான மீன்பிடி தளங்கள் இத்துறைமுகத்தால் அழிக்கப்படும். துறைமுகத்தால் ஏற்படும் கடல் அரிப்பு அளவில் சிறிய காட்டுப்பள்ளி தீவை எளிதில் சுரண்டிவிடும். இது நடந்தால், பழவேற்காடு காயல் பகுதி இனி இருக்காது, ஏனெனில் அது வங்காள விரிகுடாவில் ஒன்றிணைந்துவிடும். இதனால் பழவேற்காடு பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடற்றவர்களாக மாற்றப்படுவார்கள். பழவேற்காட்டின் காயல் பகுதி, கொற்றலை ஆறு, எண்ணூர் கழிமுகம் ஆகியவையே சென்னையில் பெருமழை காலங்களில் வெள்ளத்தின் வடிகாலாக அமைகின்றன. துறைமுகத்தை விரிவுப்படுத்துவதன் மூலம் ஏற்படும் கடல் அரிப்புகளால் இந்த இயற்கை வெள்ள வடிகால்களையும் இழப்பதால் மழைக்காலங்களில் சென்னையில் ஏற்படும் வெள்ளத்தின் அளவு வருங்காலங்களில் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இப்பகுதிகளில் தற்போது அமைந்துள்ள துறைமுகங்களினால் ஏற்பட்ட கடல் அரிப்புகளே கடலோர கிராமங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காட்டுப்பள்ளியில் இருபது மடங்கு அளவில் துறைமுக விரிவாக்கம் செய்யப்பட்டால் அதனால் ஏற்படும் அழிவை நினைத்துக்கூட பார்க்கமுடியாது.

இந்நிலையில் இத்திட்டத்திற்கான மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் வரும் 22.01.2021 அன்று காலை 11 மணியளவில் சென்னை, மீஞ்சூர் பகுதியில் உள்ள சந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் உள்ள பகவான் மகாவீர் கலையரங்கத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் என்பது குறித்தும், சனவரி 22, 2021 அப்பகுதியில் வாழும் மக்கள் பெருந்திரளாக பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்குச் சென்று தங்கள் ஆதங்கத்தை பதிவு செய்யவும் வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாம் தமிழர் கட்சியின் சுற்றுசூழல் பாசறை சார்பாக வரும் சனவரி 20 மற்றும் 21, 2021 ஆகிய தேதிகளில் காட்டுப்பள்ளி குப்பம் மற்றும் காட்டுப்பள்ளி கிராமம் ஆகிய இடங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்குக் கருத்து பரப்புரை மற்றும் விழிப்புணர்வு பரப்புரை நடைபெற உள்ளது.

இதையொட்டி பொன்னேரி, திருவொற்றியூர், மாதவரம் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய தொகுதிகளில் உள்ள நாம் தமிழர் கட்சியின் அனைத்து உறவுகளும், முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு பரப்புரைக்கு வலுசேர்க்கும் வகையில் அவற்றில் கலந்துகொண்டு, மக்களை ஒருங்கிணைக்க பொறுப்பாளர்களுக்கு உதவிசெய்து இந்த விழிப்புணர்வு பரப்புரையை மாபெரும் வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி


 

முந்தைய செய்திசென்னை, காட்டுப்பள்ளியில் அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்! – சீமான் பேரழைப்பு
அடுத்த செய்திஅறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள்