இராமராஜ்ஜிய இரத யாத்திரை மறியல் போராட்டம்:  சீமான் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது

111

கட்சி செய்திகள்: இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல் போராட்டம்:  சீமான் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது | நாம் தமிழர் கட்சி

நாடு தழுவிய அளவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் காவி பயங்கரவாத நடவடிக்கைகள் பரவலாகி வருகின்றன. இந்நிலையில் விஸ்வ ஹிந்து பரிசத்-தின் ஏற்பாட்டில் அயோத்தி முதல் இராமேஸ்வரம் வரை “இராமராஜ்ஜிய இரத யாத்திரை” என்ற பெயரில் இராம ராஜ்ஜியத்தை மறுநிர்மாணம் செய்தல், இராமஜன்ம பூமியில் இராமர் கோவில் கட்டுதல் உள்ளிட்ட முழக்கங்களை முன்வைத்து பிப்ரவரி 13 அன்று அயோத்தியிலிருந்து உ.பி முதல்வர் யோகி ஆதித்யாநாத் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

உத்திரபிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகா, கேரளம் வழியாக தமிழ்நாடு நோக்கி வந்து கொண்டிருக்கிறது. மார்ச் 20 அன்று திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் நுழைந்து இராஜபாளையம் வழி மதுரை வருகிறது. மதுரை – இராமேஸ்வரம் – திருநெல்வேலி – கன்னியாகுமரி – நாகர்கோவில் என மார்ச்-23 அன்று திருவனந்தபுரம் சென்று முடிகிறது.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டுநாடு முழுவதும் கலவரச் சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த இரத யாத்திரை கட்டமைக்கப்படுகிறது.

1990-ல் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பரிவாரங்களால் முன்னெடுக்கப்பட்ட“இராம் இரத யாத்திரை” நாடெங்கிலும் பெரும் கலவரங்களிலும், மசூதி இடிப்பிலும் போய் முடிந்ததை நாடே அறியும்.

தமிழகத்தில் எதிர்ப்பியக்கம் கட்டமைக்க வேண்டிய நிலையில்தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் ஒருங்கிணைக்கப்பட்ட ‘காவி பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் மீ.த.பாண்டியன்தலைமையில் மார்ச் 20  ‘இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல் போராட்டம்’ அறிவிக்கப்பட்டது இதில் சனநாயக முற்போக்கு அரசியல் இயக்கங்கள், கட்சிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் பலர் பங்கேற்பதாக அறிவித்திருந்தனர்.

இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் பெருந்திரளாகப் பங்கேற்க திட்டமிருந்தனர்.

இந்நிலையில் இரத யாத்திரைக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக பாஜக-வின் நீட்சியாக செயல்படும் அதிமுக அரசு திருநெல்வேலி மாவட்டம் முழுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மறியல் போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாக அறிவித்திருந்த முக்கிய தலைவர்கள் முன்கூட்டியே காவலர்களால் ஆங்காங்கே கைது செய்யப்பட்டனர். நாம் தமிழர் கட்சியின் திருநெல்வேலி மாவட்டப் பொறுப்பாளர்கள் சிலரும் கோவில்பட்டி தொகுதிஇளைஞர் பாசறைச்செயலாளர் அருண்குமார் உள்ளிட்டோர் நள்ளிரவு 2 மணியளவில் கைதுசெய்து கழுகுமலை காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியாமல் காவலர்களால் கைது செய்ய இயலவில்லை.

ஏற்கனவே அறிவித்திருந்தபடி திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலை அருகே பேரணியாக சென்று மறியலில் ஈடுபட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 100க்கும் மேற்பட்ட நாம் தமிழர் உறவுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,

இராமராஜ்ய இரத யாத்திரை என்ற பெயரில் இரத்த யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆண்டாள் பிரச்சினை, ஐயா பெரியார் சிலை உடைப்பு, இரத யாத்திரை போன்றவை திட்டமிட்டு வன்முறையைத் தூண்டும் நோக்கில் பாஜக நடத்துகிறது.

முதலில் நாடெங்கிலும் நீரோடட்டும் பிறகு தேரோடட்டும்..! கடவுள் பெயரால் கலவரத்தை எப்படி அனுமதிக்க முடியும்! மதத்தின் பெயரால் மனிதப் பலியை எப்படி ஏற்கமுடியும்! இராமராஜ்யத்தை விட சிறப்பாக ஆட்சிசெய்த எங்கள் முன்னோர்களின் பெயரில் சோழராஜ்ஜியம் பாண்டியராஜ்ஜியம் அரசாட்சியை  மறுபடியும் நிறுவுவோம் என்று நாங்களும் ஊர் ஊராக தேரோட்டிக் கொண்டு சென்றால் அனுமதிப்பார்களா..? எனவே இது அவசியமற்றது.

அமைதி சோலையாக இருக்கும் தீந்தமிழ் நாட்டில் தீய சக்திகளுக்கு என்ன வேலை? பல மதங்கள், பல வழிபாட்டு முறைகள், பன்முகத்தன்மை கொண்ட பல தேசிய இனங்கள் ஒருதாய் பிள்ளையாக ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருக்கிற தாய்நிலம் தமிழ்நாடு! போடப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவு என்பது எல்லோருக்குமானதாக இருக்கவேண்டும் ஆனால் இரத யாத்திரை வருபவர்களுக்கு பொருந்தாது அதை எதிர்த்து போராடும் போராட்டக்காரர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற நிலைப்பாடுதமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா? பாஜக ஆட்சியா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

எல்லா மாநிலங்களும் அனுமதிக்கின்றன தமிழகம் மட்டும் ஏன் எதிர்க்கிறது என்று கேட்கப்படும் கேள்வி எல்லோரும் அடிமையாக இருக்கிறார்கள் நீங்கள் மட்டும் ஏன் நிமிர்ந்து நிற்கிறீர்கள் என்று கேட்பது போன்ற கொடுமையான சர்வாதிகாரக் கருத்து திணிப்பு! அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் ஒரு கலவரத்தை ஏற்படுத்தி அதன்மூலமாக அரசியல் இலாபத்தை அடைய நினைக்கிற கெட்டநோக்கத்தைத் தடுப்பதற்காகவே போராடுகிறோம் என்று சீமான் குறிப்பிட்டார்..


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமுனைவர் ம.நடராசன் அவர்களின் மறைவானது தமிழ்ச்சமூகத்திற்குப் பேரிழப்பு! – சீமான் இரங்கல்
அடுத்த செய்திகாவிரி நதிநீர் உரிமை மீட்புப் பொதுக்கூட்டம் – ஓசூர் (இராம் நகர்)