திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் 22 பேர் அறவழியிலான உண்ணாநிலை போராட்டத்தினை இன்று முதல் ( 19.03.2014 ) ஆரம்பித்துள்ளனர். தங்களையும், சிறப்புமுகாம்களிலுள்ள ஈழத்தமிழர்கள் அனைவரையும் விடுதலை செய்யக்கோரியே காலவரையறையற்ற இந்த உண்ணாநிலை போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
ஈழநேரு, புருசோத்தமன், கேதீஸ்வரன், முகமது சாதீக், வினோதன், சிவகுமார், தேவரூபன், நந்தகுமார், ரமேஸ், யோகீஸ்வரன், உமாரமணன், கிரிதரன், வேல்முருகன், சசிதரன், பாலச்சந்திரன், ஈஸ்வரன், தர்மராஜா, சுபாகரன், அருள்ஞானராஜ், குணராஜ், உதயதாஸ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரே உண்ணாநிலை போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
இதுவரையில் செங்கல்பட்டு , பூந்தமல்லி, திருச்சி ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் இயங்கி வந்தன. கடந்த மாதம் எதுவித முன்னறிவிப்புமின்றி பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர்கள் 7 பேர் திருச்சி சிறப்பு முகாமிற்கு மாற்றப்பட்டு பூந்தமல்லி சிறப்பு முகாம் மூடப்பட்டது. தற்போது இயங்கி வரும் இரண்டு சிறப்பு முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களையும் விடுதலை செய்யக்கோரி செந்தூரன் என்பவர் 07.03.2014
தொடக்கம் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உண்ணாநிலை போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார் . உண்ணாநிலை ஆரம்பித்து நான்காவது நாள் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து வேலூர் சிறையில் அடைத்தது காவல்துறை. அங்கும் தனது உண்ணாநிலை போராட்டத்தினை செந்தூரன் 13 வது நாளாக தொடர்ந்து வருகின்றார். இவரின் உண்ணாநிலை போராட்டத்திற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மலேசிய நாட்டவரான கருனைராஜ் என்பவர் இதே கோரிக்கையினை வலியுறுத்தி 17.03.2014 தொடக்கம் உண்ணாநிலை போராட்டத்தினை ஆரம்பித்தார். அவர் மூன்றாவது நாளாக போராட்டத்தை தொடர்கின்ற இன்றைய நாளில் மேலும் 22 ஈழத்தமிழர்கள் உண்ணாநிலை போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
தற்போது திருச்சி சிறப்பு முகாமில் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் 8 பேரும் ஈழத்தமிழர்கள் 31 பேரும் மலேசியத்தமிழர் ஒருவரும் அடைக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு சிறப்பு முகாமில் ஈழத்தமிழர்கள் 28 பேரும் நைஜீரிய நாட்டவர்கள் 05 பேரும் பங்களாதேஷ் நாட்டவர்கள் 03 பேரும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.ஈழத்தில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது மருத்துவ பொருட்கள் கொண்டு செல்ல முயன்றதான வழக்குகளில் கைதான ஈழத்தமிழர்களும் இந்தியாவில் வாழ முடியாத கெடுபிடிகளினால் அவுஸ்திரேலியாவிற்கு கடல் வழியாக செல்ல முற்பட்டு கைதான ஈழத்தமிழர்களும் நீதிமன்றம் பிணை வழங்கிய பின்னர் சிறை வாசலில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாக சிறப்பு முகாம்களில் அடைக்கப்படுகின்றனர். அதேபோன்று விசா காலாவதியான வழக்குகளில் கைதாகும் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் இங்கு அடைக்கப்படுகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கே இந்த சட்டம் பொருத்தமானதாக அமைகின்ற போதும் அகதிகளாக வருகின்ற ஈழத்தமிழர்களையும் இவ்வாறு அடைத்து கொடுமைப்படுத்துகின்றது காவல்துறை. அரசிற்கு இருக்கும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியே இவ்வாறு காவல்துறை செயல்படுகின்றது. இது தொடர்பாக தொடர்ந்து அகதிகள் உண்ணாநிலை போராட்டம் நடத்துவதும் உண்ணாநிலை போராட்டம் நடத்துபவர்களை, தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறை கைது செய்து சிறையில் அடைப்பதும் வழமையான நடைமுறையாகி விட்டது. அகதிகளுக்கு இருக்கும் உரிமையை கூட வழங்குவதற்கு தயாராக இல்லாத நிலையில் உண்ணாநிலை போராட்டத்தின் அழுத்தத்தினால் ஒரு சிலரை விடுதலை செய்து அந்த போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வருவதும் ஈழத்தமிழர்களின் வாழ்க்கையில் தொடர்ந்து நடைபெறும் சம்பவமாகி விட்டது.
சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை திறந்தவெளி முகாமுக்கு மாற்றக்கோரியும் செந்தூரன் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கினை திரும்பபெற்று அவரை விடுதலை செய்யக்கோரியும் தமிழ்தேசியக்கூட்டமைப்பு சார்பில் கண்டனப்பேரணி ஒன்று சென்னையில் இன்று இடம்பெற்றுள்ளது.