க.எண்: 2024080224
நாள்: 20.08.2024
சுற்றறிக்கை:
தமிழக வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது தொடர்பாக
தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கள ஆய்வு செய்து, வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கும் பணி இன்று
(20-08-2024) முதல் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு சனவரி 1-ம் தேதியைத் தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (ஆக.20) முதல் அக்.18-ம் தேதி வரை, வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்குச்சாவடி மறு சீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் நல்ல தரமான புகைப்படங்களை இணைத்தல், பகுதி எல்லைகளை உத்தேச, ஓரளவு மறுசீரமைத்து வாக்குச்சாவடிப் பட்டியல் குறித்து ஒப்புதல் பெறுதல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.
இப்பணியின் போது, வீட்டுக்கு வரும் அலுவலர்களிடம் அளிக்கப்படும் விவரங்கள், உரிய செயலியில் பதிவு செய்யப்பட்டு, சரிபார்க்கப்படும். இதையடுத்து, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அக்.29-ம் தேதி வெளியிடப்பட்டு அன்றிலிருந்து நவ.28-ம் தேதிவரை பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் உள்ளிட்டவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.
விண்ணப்பங்கள் வரும் டிச.24-ம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு, 2025-ம் ஆண்டு சனவரி 6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். எனவே, அக்.29 முதல் நவ 28-ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவோ அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தங்கள், இடமாற்றம் செய்யவோ விரும்பும் வாக்காளர், தகுதியுள்ள குடிமக்கள், படிவங்கள் 6, 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றைப் பூர்த்தி செய்து வழங்கலாம்.
அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் அளிக்கலாம். பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். முகவரிச் சான்றாக. முகவரிக்கான நீர், மின்சாரம், சமையல் கேஸ் இணைப்பு, ஆதார், வங்கி, அஞ்சல் அலுவலக கணக்கு புத்தகம், கடவுச்சீட்டு, விவசாயி புத்தகம், பதிவு செய்யப்பட்ட வாடகை குத்தகை பத்திரம், பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரம் ஆகியவற்றில் ஒன்றின் நகலை அளிக்கலாம்.
வயதுக்கான சான்றாக, பிறப்பு சான்றிதழ், ஆதார், பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், பிறந்த தேதியுடன் கூடிய 10-ம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு சான்றிதழ்கள், கடவுச்சீட்டு ஆகியவற்றை அளிக்கலாம். 25- வயதுக்கு கீழ் உள்ள விண்ணப்பதாரர்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயம். மேலும், https://voters.eci.gov.in/, ஆகிய இணையதள முகவரி மற்றும் “வாக்காளர் உதவி” திறன்பேசி செயலி (VOTER HELPLINE Mobile App) ஆகியவற்றின் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, நாம் தமிழர் உறவுகள் இவ்வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்தி, உடனடியாகத் தங்கள் பகுதிகளில் புதிதாகக் கட்சியில் இணைந்துள்ள 18 வயது நிரம்பிய தம்பி, தங்கைகளது ஆவணங்களைப் பெற்று, அவர்கள் வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கத் தேவையான உதவிகளை மிகுந்த பொறுப்புணர்வுடன் ஆற்றிட வேண்டுமெனவும், வாக்காளர் அட்டையில் பெயர், முகவரி திருத்தம் தேவைப்படும் உறவுகளுக்கு அதற்கான வழிகாட்டு உதவிகளை விரைந்து செய்துதர வேண்டுமெனவும் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி