பேரன்பு தம்பி சாந்தனுக்கு சீமான் எழுதிய மடல்!

161

பேரன்பினால் என்னை நிறைத்து, என் நினைவுகளில் என்றும் நிறைந்திருக்கும் எனது பேரன்பு தம்பி சாந்தனுக்கு…

துயரம் இருளைப் போல சூழ்ந்திருக்கும் இந்த கொடும்பொழுதில் உன் நினைவுகளோடு எழுதுகிறேன்.

பெயருக்கு ஏற்றவன் நீ!

எல்லாவற்றிலும் அமைதியும், பொறுமையும் கொண்ட உன்னைப் பார்த்து சாந்தன் என சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று மகிழ்ந்திருக்கிறேன். ஏறக்குறைய 35 வருடங்கள் சிறையிலும் சிறப்பு முகாம் என்ற சித்திரவதைக் கூடத்திலும் நீ பட்ட பாடுகள் ஏட்டில் வடிக்க முடியாத வலி நிறைந்தவை. ஒவ்வொரு பொழுதிலும் இதோ அடுத்த மாதம் விடுதலை, அந்த வழக்கின் தீர்ப்பில் விடுதலை என சதா விடுதலையை பற்றியே எண்ணிக்கொண்டிருந்த உனது உயிர் இந்த மண்ணை விட்டு ஒரேடியாக விடுதலை அடைந்து விடும் என நான் ஒரு பொழுதும் நினைக்கவில்லை.

கடந்த 2011 ஆம் ஆண்டில் வேலூர் சிறையில் உங்களோடு நான் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அடைப்பட்டு இருந்தபோது உங்களில் ஒருவனாகி உங்கள் அன்பு நெருக்கத்தில் நெகிழ்ந்தவன் நான். விடுதலை என்ற கனவு எப்போது என்று தெரியாத நிலையில் நாட்கள் அவை. ஆனாலும் வாழ வேண்டும் என்கின்ற மகத்தான நம்பிக்கையை மனதில் சுமந்து உன் சுமைகளை எல்லாம் நீ வணங்கும் கடவுள்கள் முன்னிலையில் நீ மனமுருக வைக்கும் காட்சிகளைப் பார்த்த நாட்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.

அந்த பக்தி உன்னை பொறுத்தவரையில் வெறும் சடங்கோ சம்பிரதாயமோ அல்ல. மாறாக ஆன்மீகத்தில் நீ கொண்டிருந்த உச்ச நிலை உன் விடுதலைக்கு வழிவகுக்கும் என ஆழமாக நீ நம்பினாய். உனது கைகள் தட்டாத அதிகாரக் கதவுகள் ஏதுமில்லை. உன் கால்கள் படாத நீதிமன்ற படிக்கட்டுகள் ஏதுமில்லை. நீதிக்காக போராடி களைத்துப் போன உனது கால்கள் இன்று ஓய்வெடுக்கின்றன. அடைய முடியாத விடுதலை ஏக்கத்தை எப்போதும் சுமக்கும் உனது கண்கள் இப்போது மூடி விட்டன. தாய் நிலத்திற்கு திரும்ப வேண்டும் என்கின்ற வேட்கையோடு திகழ்ந்த உனது ஆன்மா இப்போது அமைதியாகிவிட்டது. என் மீது நீ கொண்டிருந்த பேரன்பினால் முதல் முறை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போது உனது உடலை என்னிடம் தான் வழங்க வேண்டும் என நீ சொல்லியிருந்த நாட்கள் கலங்கும் என் கண்களில் நிழலாடுகின்றன. அப்போது கூட என் தம்பிகளை தூக்கிலிட வேண்டுமென்றால் முதலில் என் பிணத்தை தாண்ட வேண்டும் என்று சொன்னதற்கு உரிமையோடு கோபித்துக் கொண்டாய் நீ.

உனது வருகைக்காக காத்திருந்த நமது அம்மாவின் விழி நீரை எதைக் கொண்டு நான் துடைப்பேன்.. எப்படியாவது நீ வீடு திரும்பி விடுவாய் என நம்பிக்கையோடு காத்திருந்த எனக்கு நானே எந்த சமாதானமும் சொல்ல முடியாமல் இந்த கனத்த இரவில் தனியே கண்ணீர் வடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறேன்.

எனது அருமை உடன் பிறந்தானே… என்னுயிர் சாந்தனே…

பேரன்பினையும், பெருவலியையும், நீங்கா நினைவுகளையும் எனக்கு அளித்துவிட்டு நீங்கிவிட்ட உனது உருவம் உயிருள்ளவரை என் உயிராழத்தில் தேங்கி நிற்கும்.

போய்வா…

நம் தாய் நிலமான தமிழீழத்தில் உனது உடல் விதைக்கப்படும் நிலத்தில் முளைக்கும் பனையில் மலரும் பனம்பூவின் வாசமாய், என் சுவாசமாய் என்றும் நீ என்னுள் இருப்பாய். விடுதலை பெற்ற பின்னும் உன்னோடு சிறப்புமுகாம் என்ற சித்திரவதை முகாமில் இருந்த மற்ற மூவருக்கான விடுதலைக்கு போராடுவேன் என்று உறுதி ஏற்கிறேன்.

வலியோடும் கண்ணீரோடும்…
உன் அண்ணன்…
சீமான்

அன்புத்தம்பி சாந்தனுக்கு முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 32 ஆண்டுகள் கடும் சிறை தண்டனையுடன், வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் மரணம் குறித்தான சிந்தனையுடன் வாழவேண்டிய கொடுந்தண்டனையும் வழங்கி தண்டித்தது இந்த நாடு.

பல கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகு மரண தண்டனையிலிருந்தும், சிறைக்கொடுமையிலிருந்தும், தண்டனை விதித்த நீதிமன்றமே விடுதலை செய்த பிறகும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு சிறிதும் கருணையற்று சிறப்பு முகாம் எனும் சித்ரவதை முகாமில் அடைத்து சிறுக சிறுக சிதைத்து இன்றைக்கு தம்பி சாந்தனை மரணம் வரை தள்ளியிருக்கிறது. அவரை உயிரோடு தாயகத்திற்கு அனுப்புவதில்லை என்ற முடிவில் வென்றுள்ளது இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு மாநில அரசும் தான்.

பெற்ற மகனை ஒரு முறையாவது உயிரோடு பார்த்துவிட வேண்டுமென 33 ஆண்டுகளுக்கும் மேலாக கவலை தோய்ந்த இதயத்தோடும் கண்கள் நிறைந்த கண்ணீரோடும் காத்திருந்த தாயின் வாழ்நாள் ஏக்கம் இறுதிவரை நிறைவேறவில்லை என்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம். தம்பி சாந்தனின் உயிரற்ற உடலையாவது அவரது தாயிடம் ஒப்படைக்க இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இத்துயர்மிகுச் சூழலில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பிறகும் திருச்சி சித்ரவதை முகாமில் அடைக்கப்ட்டுள்ள மீதமுள்ளவர்களையாவது திமுக அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புத்தம்பி சாந்தனுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

https://x.com/Seeman4TN/status/1762709350202626281?s=20\

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 32 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் வாடி, பல கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகு மரண தண்டனையிலிருந்தும், சிறைக்கொடுமையிலிருந்தும் விடுதலையான பிறகும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு சிறிதும் கருணையற்று சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடத்தில் அடைத்து வைத்திருந்ததன் விளைவாக உடல் மேலும் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பயனின்றி உயிரிழந்த சாந்தன் அவர்களுக்குப் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 03-03-2024 அன்று கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

முந்தைய செய்திபோதை பொருள் கடத்தல் வழக்கு விசாரணை குறித்து செய்தி சேகரித்த பாலிமர் செய்தித் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீதான திமுகவினரின் தாக்குதல், ஊடக சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடுஞ்செயல்! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திபுதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொடூரமாகக் கொலை செய்த கொடூரர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்