தமிழ்த்தேசிய தத்துவத்தைத் தாங்கி நிற்கும் மாபெரும் புரட்சிப்படையாகவும், தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் பேரியக்கமாகவும் திகழும் நாம் தமிழர் கட்சியானது தேர்தல் களத்தில் பணபலம், படைபலம் மற்றும் அதிகார பலம் கொண்டு மோதும் திராவிட, இந்தியக் கட்சிகளுக்கு இணையாகப் போட்டியிட்டு வென்றிட நமது கட்டமைப்பைக் கடைக்கோடி கிராமம் வரை வேரூன்றச் செய்வது மிகமிக இன்றியமையாதது என்று தமிழ்நாடு முழுமைக்கும் கடந்தமுறை நான் மேற்கொண்ட கட்டமைப்பு சுற்றுப்பயணத்தின்போது தெரிவித்திருந்தேன்.
நாம் தமிழர் கட்சிக்கு நாளுக்கு நாள் பெருகிவரும் தமிழிளந்தலைமுறையின் பேராதரவினை ஒருங்கிணைத்து, அவர்களைக் கட்சி கட்டமைப்புக்குள் கொண்டுவந்து வலிமை சேர்க்க வேண்டுமென்ற எனது அறிவுறுத்தலை ஏற்று, தான்மையை விடுத்து, இரவும், பகலும் கண் துஞ்சாது, கடுமையாக உழைத்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாக கட்டமைப்பு அடிப்படையில் ஒவ்வொரு வாக்ககத்தையும் கிளையாகக் கட்டமைத்து, முழுமையாக அனைத்து கிளைகளுக்கும் (260 வாக்ககங்கள்) ஏறத்தாழ 1700 கிளைப் பொறுப்பாளர்களைத் தெரிவு செய்து, ஒப்புதல் பெற்று நியமித்ததன் மூலம் தமிழ்நாட்டின் மற்ற 233 கட்சி நிர்வாக மாவட்டங்களுக்கும் முன் மாதிரியாக முசிறி நிர்வாக மாவட்டம் திகழ்கிறது.
அதேபோன்று, கட்டமைப்பு பணிகளில் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு இரண்டாவது இடத்தில் பெரம்பலூர் மற்றும் மூன்றாம் இடத்தில் திருப்போரூர் நிர்வாக மாவட்டங்களும் உள்ளன.
இவர்களை முன்மாதிரியாக் கொண்டு மற்ற நிர்வாக மாவட்டங்களைச்சேர்ந்த பொறுப்பாளர்களும் தங்களது பகுதிகளில் கிளை கட்டமைப்பினை விரைந்து முழுமைப்படுத்த வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.
நாம் தமிழர் கட்சிக்கு வலிமையான நிர்வாகக் கட்டமைப்பினை உருவாக்கி, சாதித்துக் காட்டியதன் மூலம் எனது அன்பையும், பாராட்டுகளையும் பெற்று என் மனதுக்கு நெருக்கமாகி போன முசிறி, பெரம்பலூர், திருப்போரூர் நிர்வாக மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது புரட்சிகர வாழ்த்துகள்!
https://x.com/Seeman4TN/status/1762761407232106875?s=20
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி