முக்கிய அறிவிப்பு: தென் மாவட்டங்களில் பெருவெள்ளத் துயர் துடைப்புப் பணிகள் – திருநெல்வேலி விரையும் சீமான்

315

முக்கிய அறிவிப்பு:

தென் மாவட்டங்களில் பெருவெள்ளத் துயர் துடைப்புப் பணிகள்

கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவில் பெய்த தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில் அனைத்து முக்கிய அணைகளும் நிரம்பி வழிகின்றன. பல்லாயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளன. மின்சாரம் முற்றிலுமாகத் தடைப்பட்டுள்ளதால் தென் மாவட்டங்கள் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளன. ஆறுகள், ஏரிகள், குளங்கள் உடைப்பெடுத்து தரைப்பாலங்கள், சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பல கிராமங்கள் தனித்தீவுகளாகத் துண்டிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி, நெல் உள்ளிட்ட விளைபொருட்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. சிறு-குறு தொழிற்கூடங்கள், வீடுகள், கடைகள் போன்றவற்றில் வெள்ளநீர் புகுந்ததால் பெரும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது.

கொடும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களின் துயர் துடைக்கும் விதமாக,
நாளை மறுநாள் 21-12-2023 வியாழக்கிழமையன்று காலை 11 மணியளவில்,
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் திருநெல்வேலிக்கு நேரில் சென்று துயர் துடைப்பு உதவிகளை வழங்கவிருக்கிறார்.
அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும் நேரில் சென்று துயர் துடைப்பு உதவிகள் வழங்கவிருக்கிறார். இதற்காக, அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வரும் துயர் துடைப்புப் பொருட்கள் திருநெல்வேலி, ரகமத் நகர், 80 அடி சாலை அருகில் அமைந்துள்ள எல்.எஸ்.மகாலில் சேகரிக்கப்பட்டு, சிறு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு உடன் கொண்டுசெல்லப்படவிருப்பதால், களப்பணிக்கு உறவுகள் அனைவரும் மண்டபத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்பெரும்பணிக்கு, கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு