விடுதலைப்போராட்ட வீரரும், முதுபெரும் கம்யூனிச தலைவருமான சங்கரய்யா மறைவு – சீமான் துயர் பகிர்வுச் செய்தி

51

விடுதலைப்போராட்ட வீரரும், முதுபெரும் கம்யூனிச தலைவருமான ஐயா சங்கரய்யா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

மாணவப் பருவத்திலேயே தாயக விடுதலைக்காக சிறைசென்று பற்பல கொடும் துன்பங்களைத் தாங்கிய ஐயா அவர்களின் ஈடு இணையற்ற ஈகம் மிகுந்த போற்றுதலுக்குரியது. 80 ஆண்டுகால பொதுவாழ்வில் தூய்மையும், நேர்மையுமாக மக்கள் தொண்டாற்றிய பெருந்தகை. வெள்ளையனே வெளியேறு இயக்கம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நுழைவு போராட்டம் என நூற்றாண்டு கடந்த பெருவாழ்வில் ஐயா அவர்கள் பங்களித்த போராட்டக் களங்கள் அவரது புகழை என்றும் நிலைத்திருக்கச் செய்யும்.

விடுதலை வீரர், பொதுவுடமைப் போராளி, மாணவர் சங்கத் தலைவர், விவசாய சங்கத் தலைவர், இதழியலாளர் , சட்டமன்ற உறுப்பினர் என ஐயா அவர்களின் அப்பழுக்கற்ற அரசியல் பெரும்பணிகள் என்றென்றும் நினைவுக்கூரத்தக்கது.

ஐயா அவர்களின் இழப்பென்பது தூய அரசியலை நேசித்து நிற்கும் எங்களைப் போன்ற பிள்ளைகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். ஈடுசெய்ய முடியாத இழப்பில் தவிக்கும் ஐயா சங்கரய்யா அவர்களின் மகனிடம் அலைபேசி மூலம் தொடர்புகொண்டு குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரினைப் பகிர்ந்து கொண்டேன்.

ஐயா சங்கரய்யா அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

https://x.com/Seeman4TN/status/1724689989165080916?s=20

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபெருந்தமிழர் ஐயா நல்லக்கண்ணு அவர்களை சீமான் அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்
அடுத்த செய்திசுற்றறிக்கை: குருதிக்கொடை முகாம் ஒருங்கிணைத்தல் பற்றிய விளக்கங்கள்