நீட் தேர்வுக்கெதிராக அறவழிப்போராட்டம் செய்த மக்கள் பாதை இயக்கத்தினரை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து அப்புறப்படுத்துவதா? – சீமான் கண்டனம்

70

‘நீட்’ தேர்வுக்கெதிராக அறவழிப்போராட்டம் செய்த மக்கள் பாதை இயக்கத்தினரை கைதுசெய்து போராட்டத்தை ஒடுக்குவதா? – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

‘நீட்’ தேர்வை நிரந்தரமாக நீக்கக்கோரி சாகும்வரையிலான பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் பாதை இயக்கத்தினர் மீது காவல்துறையினர் மூலம் அடக்குமுறையை ஏவி வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து அறவழிப்போராட்டத்தை ஒடுக்கிய தமிழக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. நீட் தேர்வை வன்மையாக எதிர்ப்பதாகச் சொல்லும் அதிமுக அரசு, அதே நோக்கத்திற்காக அறப்போராட்டம் செய்யும் இளைஞர்களைக் குண்டாந்தடியாகக் கைதுசெய்து அப்புறப்படுத்தியிருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. நீட் தேர்வுக்கு விலக்குக்கோரி தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானத்திற்கு ஒப்புதல்தர மறுத்து, எதேச்சதிகாரப்போக்கோடு மாநிலத்தின் தன்னுரிமையை மறுக்கும் மத்திய அரசைக் கண்டிக்கவோ, அரசியல் நெருக்கடி கொடுக்கவோ நெஞ்சுரமற்ற தமிழக அரசு அப்பாவி இளைஞர்கள் மீது தாக்குதல் தொடுக்க முனைவது வெட்கக்கேடானது.

மதிப்பிற்குரிய ஐயா சகாயம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் மக்கள் பாதை இயக்கத்தினர் நீட் தேர்வு முறைக்கெதிராக சென்னையில் அமைந்துள்ள அவ்வியக்கத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த 14ம் தேதி முதல் காலவரையற்ற பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நேரில் அணுகி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முன்னெடுப்புகளை விரைந்து செய்கிறோம் எனும் நம்பிக்கை மொழிகளைத் தர வேண்டிய தமிழக அரசு, அதற்கு நேர்மாறாகக் கைதுசெய்து போராட்டத்தைக் குலைக்க முனைவது சனநாயகத்துரோகமாகும். தங்கை அனிதா தொடங்கி 13 பிஞ்சுகள் நீட் எனும் கொலைக்கருவிக்கு இரையாகியுள்ள நிலையில், கிராமப்புற மாணவர்களின் மருத்துவக்கனவு முற்று முழுதாய் பொசுங்கிய தற்காலத்தில் நீட் தேர்வை எதிர்த்து அறப்போர் செய்ய வேண்டிய தமிழக அரசு அதிகாரமற்ற எளியப் பிள்ளைகள் மீது பாய்வது அரச நிர்வாகத்தின் கையாலாகத்தனத்தையே காட்டுகிறது. நீட் தேர்வுக்கு எதிராக ஒட்டுமொத்தத் தமிழகமே எதிர் நிற்கையில், அதே நோக்கத்திற்காக பட்டினிப்போராட்டம் செய்த மக்கள் பாதை இயக்கத்தைச் சேர்ந்த தம்பி, தங்கைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முனைவது மக்களின் உணர்வுகளுக்கெதிரான படுபாதகச்செயலாகும்.

நீட் தேர்வின் மூலம் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் முற்றாகச் சிதைக்கும் மத்திய அரசின் மனுதர்மக் கோட்பாட்டிற்கும், நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறுவோம் எனக்கூறி பல ஆண்டுகளாகத் தமிழக மாணவர்களை வஞ்சித்து வரும் தமிழக அரசின் ஆளுமையற்ற செயல்பாட்டுக்கும் எதிரான கோபத்தின் வெளிப்பாடே இத்தகைய போராட்டங்கள் என்பதை எவராலும் மறுக்கவியலாது. ஆகவே, அதனைப் புரிந்துகொண்டு நீட் தேர்வை நிரந்தரமாக நீக்குவதற்கான சட்டப்போராட்டத்தினையும், அரசியல் நகர்வுகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும், கைதுசெய்யப்பட்டுள்ள மக்கள் பாதை அமைப்பினர் மீது எவ்வித வழக்கும் தொடராது அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதமிழ் முழக்கம் சாகுல் அமீது ஐயா அவர்களின் கண்ணீர் அஞ்சலி
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்களது மறைவிற்கு கண்ணீர் வணக்கம்சாகுல் அமீது