CPCL எண்ணெய் நிறுவனத்தின் தவறினால் வெளியேறிய எண்ணெய்க் கழிவுகளை மீனவப் பெருங்குடி மக்கள் அள்ளுவதா? – சீமான் கண்டனம்

92

CPCL எண்ணெய் நிறுவனத்தின் தவறினால் வெளியேறிய எண்ணெய்க் கழிவுகளை மீனவப் பெருங்குடி மக்கள் அள்ளுவதா? அரசின் கவனக்குறைவுக்கு அப்பாவி மக்களைப் பலியாக்க திமுகவின் திராவிட மாடல் அரசு துணிந்துவிட்டதா?

உரிய பாதுகாப்புக் கருவிகளோடு முறையானப் பயிற்சி பெற்றவர்களை எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்துவதனை விட்டுவிட்டு, எவ்வித பாதுகாப்புக் கருவிகளும் கொடுக்காமல் மீனவ மக்களை ஈடுபடுத்துவதென்பது ஒரு நல்ல ஆட்சிக்கு அழகல்ல என்பதனைத் தாண்டி அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

“எங்களுக்கு இந்தக் கைகளால்தானே வாக்களித்தீர்கள்”, என்று தன் ஆட்சியின் கீழுள்ள ஏழை எளிய மக்களின் அதே கைகளுக்கு, திமுகவின் தண்டனை அளிக்கும் செயலா இது? என்று கேட்கத் தோன்றுகிறது.

தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் ஒரு வகையில் பேசியும், களத்தில் அதற்கு மாறாகவும் ஈடுபட்டு வரும் CPCL நிறுவனமும், அதனை சரிவர கவனிக்காத தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியமும் தான் தண்டனைக்கு ஆளாக வேண்டுமேயொழிய, ஏற்கனவே பெருமழையினாலும் எண்ணெய்க் கசிவினாலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மீனவப் பெருங்குடி மக்களல்ல.

இந்தக் கொடிய செயலினை உடனடியாக தமிழ்நாடு அரசு நிறுத்த வேண்டும். பாதுகாப்புக் கருவிகளோடு முறையானப் பயிற்சி பெற்றவர்களை எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தவேண்டும். மேலும், இதுவரை இந்த அபாயகரமானச் செயலில் ஈடுபடுத்தப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும், துயர் துடைப்பு உதவிகளும் தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும்.

https://x.com/NaamTamilarOrg/status/1735550772614668394?s=20

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: திரு.வி.க. நகர் தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!
அடுத்த செய்திமிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: ஆவடி தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!