ஈழத்தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் அருட்தந்தை ஐயா அன்ரன் சின்னராசா அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்! – சீமான் புகழாரம்

142

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பெரிதும் துணைநின்ற அருட்தந்தை ஐயா அன்ரன் சின்னராசா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து, மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

மாவீரர்கள் குட்டிமணி, தங்கத்துரையோடு வெலிக்கடை சிறையில் சிங்களர்களால் சொல்லொணா கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்பட்டு சிறைமீண்ட ஐயா அன்ரன் சின்னராசா அவர்கள், இறைநேசராகி அருட்பணி புரிந்தபோதும், ஈழ விடுதலைப்பணியைத் துறவாது தொடர்ந்து ஆற்றி, தாயகப்போராளியாகவும் திகழ்ந்த பெருமைக்குரியவர். போரினால் பாதிக்கப்பட்ட தமிழீழ குழந்தைகளின் கல்விக்கு உதவியதோடு, சிங்கள இனவாத கொடுமைகளிலிருந்து மீள புலம்பெயர் தமிழர்களுக்கு மேற்கத்திய நாடுகளில் அடைக்கலமும் பெற்றுதந்து பெரும்பணி புரிந்தவர். நாடு கடந்து கனடாவில் வாழ நேரிட்ட போதும், இரவுபகல் பாராது அயராது உழைத்து தமிழினப் படுகொலையை ஆவணப்படுத்திய போற்றுதலுக்குரியவர். ஈழத்தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஐயா அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

அருட்தந்தை ஐயா அன்ரன் சின்னராசா அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஈழச்சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகாங்கேயம் தொகுதி தைப்பூசத் திருவிழா
அடுத்த செய்திஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவளித்த தமிழக உழைக்கும் மக்கள் முன்னேற்ற கட்சித் தலைவர் இரா.குமார் மீது கொலைவெறித் தாக்குதல்! – சீமான் கண்டனம்