தமிழ் மரபுத் திருவிழா 2023 – மரபு நெல் கண்காட்சி, பொங்கல் படையல் மற்றும் மாபெரும் ஊர்ச்சந்தை

342

தமிழ் மரபுத் திருவிழா 2023!

மரபு நெல் கண்காட்சி, பொங்கல் படையல் மற்றும் மாபெரும் ஊர்ச்சந்தை…

(இது ஞெகிழியற்ற எல்லைப் பகுதி)

வேளாண் தந்தை ஐயா நம்மாழ்வார் மற்றும் மரபு நெல் மீட்புப் போராளி ஐயா நெல் செயராமன் ஆகியோரின் நினைவாக வருகின்ற சனவரி மாதம் 22, 2023, காஞ்சிபுரத்தில் ஒருநாள் நிகழ்வாக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தமிழ் மரபுத் திருவிழா 2023 நடைபெறவிருக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, இளைஞர் பாசறை மற்றும் காஞ்சிபுரம் மண்டலம் இணைந்து நடத்தும் இத்தமிழ் மரபுத் திருவிழாவினை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார். இவ்விழாவில் மரபுப் பேரணி, மரபு நெல் கண்காட்சி, மரபுப் பச்சரிசிப் பொங்கல் படையல் மற்றும் மாபெரும் ஊர்ச் சந்தை, மாவொளி சுற்றுதல் ஆகியவை நடைபெறவிருக்கின்றன.

அழிவின் விளிம்பில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர் மரபு நெல் வகைகளை மீட்கும் பணியில் சூழலியல் செயற்பாட்டாளர்கள் திரு. செ.நித்யானந்தம்,
வேம்பு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் திரு. மரு.பா.சரவணகுமரன்,
அறிவர் பாரம்பரிய விதை வங்கி அவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். இவர்களால் மீட்கப்பட்ட இவ்வாயிரத்திற்கும் மேற்பட்ட நெல் வகைகள் இத்திருவிழாவில் காட்சியிடப்படும். அவற்றில் நூறு வகை அரிசியினைக்கொண்டு பொங்கல் சமைத்து வழங்கப்படும். மேலும், இயற்கை விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்கள் சிறப்பிக்கப்பட உள்ளனர்.

நிகழ்வு நிரல்:

காலை 9 மணி முதல் 10 மணி வரை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் மரபியல் ஊர்வலம்.

திடல் நிகழ்வுகள்:

காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடங்கி வைக்க,

1. மரபு நெல் கண்காட்சி.
2. மரபுப் பச்சரிசிப் பொங்கல் படையல்.
3. இயற்கை உழவர்கள் சிறப்பிக்கபடுதல்.

பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில்,

1. உறியடி.
2. கயிறு இழுத்தல்.
3. கயிறு ஏறுதல்.
4. வழுக்குமரம் ஏறுதல்.
5. நாட்டுப்புறக் கலைகள் மற்றும் நாட்டு இசைக்கருவிகளின் காட்சி.
6. தெருக்கூத்து.
7. மாவொளி சுற்றுதல்.

மேற்குறிப்பிட்டுள்ள நிகழ்வுகள் நிகழும் வேளையில் நிகழ்ச்சி நடக்கும் திடலில் பல்வேறு அரங்குகள் செயலாற்றிக் கொண்டிருக்கும். பொதுமக்கள் அவற்றைக் கண்டு, களித்து, உண்டு மகிழலாம்.

திடல் அரங்குகள்:

காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை:
1. மரபு உணவு வகைகள், மளிகை, புத்தகங்கள் மற்றும் கைவினைப் பொருள் அரங்குகள்.
2. குழந்தைகளுக்கான மரபு விளையாட்டு அரங்குகள்.
3. பானை மற்றும் கைவினைப் பொருள்கள் செய்யும் பயிற்சி அரங்குகள்.
4. உடனடி ஒளிப்படங்கள் எடுத்துக் கொள்ளும் அரங்கு.
5. படக் காட்சிக் கூடம்.

தமிழர் திருநாளாம் தைத்திருநாளினையொட்டி நடைபெறவிருக்கின்ற இந்தத் தமிழ் மரபுத் திருவிழாவானது நாம் தொலைத்த மரபு வேர்களையும், நம் உணவுப் பழக்க வழக்கங்களையும், சூழலியல் கூறுகளையும் நினைவுபடுத்தும் மற்றும் மீட்டெடுக்கும் வகையில் அமையவிருக்கிறது. இந்நிகழ்வில் நாம் தமிழர் உறவுகள் அனைவரும், பொது மக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு பயன்பெற்று, நம் மரபினை மீட்டெடுக்கும் இம்மாபெரும் முதல் முயற்சிக்கு வலு சேர்க்க பேரழைப்பு விடுக்கிறோம். காஞ்சிபுரத்தில் இடம் விரைவில் அறிவிக்கப்படும்.

தொடர்புக்கு: 9176274006, 8939516274, 8508726442, 9003193815, 9840941431.