ஐயா பெரியார் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை | சீமான் செய்தியாளர் சந்திப்பு

189

24-12-2022 | ஐயா பெரியார் நினைவுநாள் – சீமான் செய்தியாளர் சந்திப்பு

ஐயா பெரியார் அவர்களினுடைய 49ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி 24-12-2022 அன்று, நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வின் நிறைவாக நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், “மூடப்பழக்கங்களில் மூழ்கி, சாதி-மத சாக்கடைக்குள் சிக்கி, மீள எழ முடியாத இழி நிலையிலிருந்த எம் மக்களை, அந்த அறியாமை இருள் நீக்கி, அறிவு ஒளி பாய்ச்சி, இந்த சமூக மேம்பாட்டிற்கு அரும்பாடாற்றியப் பெருந்தகை நமது ஐயா பெரியார் அவர்கள். ‘பெண்ணடிமைத்தனம்’ என்னும் பெருங்கொடுமை பன்னெடுங்காலமாக இந்த நிலத்தில் இன்று வரையிலும் கூடப் புரையோடிப்போனப் புற்றாக இருக்கிறது. பெண்களுக்கான உரிமைக்கு சிந்தனை வித்திட்டு, அதற்குப் போராடியப் பெருந்தகை ஐயா பெரியார் அவர்கள். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அதற்குச் சட்ட வடிவம் கொடுத்து, செயல் வடிவம் பெறச்செய்தார்கள். மனிதப் பிறப்பில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு பார்க்காத ஒரு சமநிலைச் சமூகம் படைக்கத்தான் எண்ணற்ற நமது முன்னோர்கள் போராடினார்கள். அந்த வரிசையில் முதன்மைப் பங்கு கொண்ட புரட்சியாளர் ஐயா பெரியார் அவர்கள். “ஒரு மனிதன் சக மனிதனை தாழ்த்தி வீழ்த்தி சுகம் காண்கிறான் என்றால், அது ஒரு மனநோய் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? தன்னை உயர்ந்த சாதி என்று எண்ணிக்கொள்கிற பெருமக்கள், அதைப் போலவே தங்களுக்கு கீழே எவரும் தாழந்த சாதி என்ற ஒன்று இல்லை என்று எண்ணிக்கொண்டால், இந்த சமூகத்தில் எந்த சிக்கலும் இருக்காது” என்று போதித்தவர் ஐயா பெரியார்.

பெண்களுக்குச் சம உரிமை அடிப்படையில் இடப்பங்கீடு கேட்கிறபோது, “கடவுள் மறுப்பாளர் நான், கடவுளை வணங்குகிறவர்கள் நீங்கள். அனுதினமும் நீங்கள் வழிபடும் சிவனே தன் உடலில் பாதியைத் தன் மனைவிக்குக் கொடுத்து, ‘அர்த்தநாரீசுவரராக’ நிற்கிறார். அந்த இறையை ஏற்காத நான் பெண்களுக்குச் சம உரிமைக் கேட்டுப் போராடுகிறேன். அனுதினமும் அந்த இறையை வணங்கும் நீங்கள் பெண்களுக்கு வழங்கப்படும் சரிபாதி இடப்பங்கீடு கூடாது என்று எதிர்க்கின்றீர்கள். நீங்கள் அந்த இடத்தில் உங்கள் மனைவிமார்களை வைத்துப் பார்த்தால் உங்களுக்கு எதிர்க்கத்தான் தோன்றும். உங்களைப் பெற்ற தாயை, உங்கள் உடன்பிறந்த சகோதிரிகளை வைத்துப் பார்த்தால் எதிர்க்கத் தோன்றாது” என்று வாதிட்டவர் ஐயா பெரியார் அவர்கள்.

மால்தஸ் என்கிற ஒரு பொருளாதார மேதை, “உற்பத்தியும் மக்கள் தொகையும் சமவிகிதத்தில் முன்னேறாது, மக்கள் தொகை மட்டும் அதிகளவில் பெருத்துக் கொண்டு போனால், அந்த நாடு பற்றாக்குறையைத் தான் சந்திக்கும்” என்று கூறுகிறார். அந்த கோட்பாட்டை மால்தசுக்கு முன்பே இந்த மண்ணில் சிந்தித்து செயலாக்கம் பெறச்செய்ய வேண்டும் என்று போராடியவர் ஐயா பெரியார் அவர்கள். குடும்பக் கட்டுபாடு என்கிற திட்டமே அவர் சிந்தனையில் வந்தது தான். இரண்டு பிள்ளைகள் போதும் என்ற எண்ணத்தை விதைத்தவர் அவர் தான். இரண்டு பிள்ளைகளும் பெண் பிள்ளைகளாகப் பிறந்துவிட்டால், கொள்ளி போட ஆண் பிள்ளை வேண்டுமே, அதற்கு என்ன செய்வது? என்ற கேள்வி எழுந்தபோது, “பெண்பிள்ளை கொள்ளி போட்டால் பிணம் வேகாதா?” என்று பெண்ணுரிமை குறித்து சிந்தித்த மனிதர் ஐயா பெரியார். அப்படி இந்த சமூக மாறுதலுக்கானப் புரட்சியைச் செய்த எண்ணற்ற முன்னோர்களில் நமக்கு வழிகாட்டியாக இருக்கிற ஐயா பெரியார் அவர்களைப் போற்றுவதில் பெரும் மகிழ்வடைகிறோம். அந்த மகத்தான மனிதருக்கு நாம் தமிழர் பிள்ளைகள் பெருமிதத்தோடும், திமிரோடும் எங்கள் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறோம்” என்று தெரிவித்தார்.

பின்னதாக செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சீமான், “அன்று ஆரியர்கள், எங்கள் வரலாற்றை திரித்தார்கள். எங்கள் இறையைத் தன்வயப்படுத்தினார்கள். எங்களின் சிவனை ருத்திரனாக்கினார்கள், கொற்றவையைப் பார்வதியாக்கினார்கள், முருகனை சுப்ரமணியனாக்கினார்கள், மாயோனைக் கிருஷ்ணனாக்கினார்கள், இன்றைக்கு எங்கள் வள்ளுவனுக்கு காவி போர்த்தி ஆரிய மயமாக்கப் பார்க்கிறார்கள். அதேபோன்று, திராவிடக் கோட்பாட்டைக் கொண்டவர்களும் பொய்யைத் திரும்பத் திரும்பப் பேசி, அதனை உண்மையாகப் பார்க்கிறார்கள். இதுவரை ஐயா பெரியார் அவர்களை நான்  இழிவாகப் பேசியதற்கான சான்று ஏதேனும் உள்ளதா? ஆனாலும் திராவிடர்கள், நாம் தமிழர் கட்சி ஐயா பெரியாருக்கு எதிரானவர்கள் என்பது போன்ற பிம்பத்தைக் கட்டமைக்கப் பார்க்கிறார்கள். நான் மேடைகளில் 15 ஆண்டுகளாக ஐயா பெரியாரின் கோட்பாடுகளைப் பேசியுள்ளேன். என்னை நேரடியாக எதிர்கொள்ள துணிவில்லாது, அன்று நான் பேசிய ஐயா பெரியாரின் கடவுள் மறுப்புக் கருத்துகளைக் கொண்ட காணொலிகளை வெட்டி ஒட்டி, அந்தந்த மத வழிபாட்டுத் தளங்களில் எனக்கெதிராகப் பரப்புரை செய்தார்கள். அது போன்ற ஒன்று தான் நாங்கள் பெரியாரை எதிர்ப்பவர்கள் என்கிற இந்த குற்றச்சாட்டு.

பலமுறை கூறியதை மீண்டும் ஒருமுறை இன்று தெளிவுபடுத்துகிறேன். நாங்கள், உலகில் எங்கெல்லாம் மானுடச் சமூகம் தாழ்ந்து, வீழ்ந்து, அடிமைப்பட்டுக் கிடக்கிறதோ, அந்த மானுடச் சமூகத்தின் உரிமைக்கு, விடுதலைக்குப் போராடியவர்கள், பாட்டாகப் பாடியவர்கள், உயிர் கொடுத்தவர்கள், புரட்சி செய்தவர்கள் எல்லோருமே எங்களுடைய வழிகாட்டிகள் தான். ஏனென்றால், நாங்களும் அடிமைப்படுத்தப்பட்ட ஒரு தேசிய இனத்தின் மக்கள். நாங்கள், மாமேதை மார்க்ஸை எங்கள் அறிவு ஆசானாக, பெருமைக்குரிய வழிகாட்டியாக ஏற்போம். ஆனால், இந்த நிலத்தில் எங்களுடைய தாத்தா சிங்காரவேலரையும், ஜீவானந்தத்தையும், நல்லகண்ணுவையும் தான் தலைவராக ஏற்போம். அதேபோன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரை எங்களின் அறிவு ஆசானாக, எங்களுக்கு ஒரு வழிகாட்டியாக ஏற்கிறோம். ஆனால், அவரைப் போன்றே இந்த நிலத்தில் போராடிய  எங்களுடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசனையும், அயோத்திதாசப் பண்டிதரையும் தான் எங்கள் தலைவராக ஏற்போம். அந்த வரிசையில் ஐயா பெரியார் அவர்களை எங்கள் வழிகாட்டியாக ஏற்கின்றோம். ஆனால் எங்களின் தலைவனாக எங்களின் அண்ணன் பிரபாகரன் அவர்களைத் தான் ஏற்போம். அதற்குக் காரணம் எங்களின் கோட்பாடு தான். அது, ‘தகப்பன் என்பவன் எங்களைப் பெற்றவனாகத் தான் இருக்க முடியும், தலைவன் என்பவன் எங்கள் இரத்தவனாகத் தான் இருக்க முடியும்’, ‘என் மொழிப் புரியாதவன் எங்கள் இறைவனாக இருக்க முடியாது, எங்கள் வலி உணராதவன் எங்களுக்குத் தலைவனாக இருக்க முடியாது’ என்பது தான். எம்மின வரலாறு தெரியாதவன் எங்களுக்கு வழிகாட்ட முடியாது. இது தான் எங்களின் நிலைப்பாடு. அதை ஏற்பவர் எங்களோடு பயணிக்கட்டும், எதிர்ப்பவர் எதிரே நின்று எதிர்க்கட்டும்.

எங்களைப் பெரியாருக்கு எதிரானவர்களாகக் கட்டமைக்கப் பாடுபடுபவர்கள், பெரியாரின் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல செய்தது என்ன? பெரியாரைப் பற்றி பேசுபவர்கள், பெரியார் பேசியதைப் பேசுவார்களா? சமூகநீதி என்று பேசுபவர்கள், ஐயா பெரியாரின் சமூகநீதிக் கோட்பாடுகளைச் செயல்படுத்துவார்களா? “ஒருவன் தனக்கான உரிமையைத் தன் வகுப்பின் மக்கள் தொகை எண்ணிக்கைக்கேற்ப போராடிப் பெறவில்லை என்றால் அவன் மானமிழந்தவனாவான்” என்று பேசியுள்ளார் ஐயா பெரியார். அவர் கூறியதற்கேற்ப குடிவாரி கணக்கெடுப்பு நடத்தி உண்மையான இடப்பங்கீட்டைக் கொடுக்க இவர்கள் ஏன் தயங்குகிறார்கள்? அதைச் செய்ய மாட்டார்கள். அது போன்ற ஒன்று தான் எங்கள் மீது சுமத்தப்படும் இந்த விமர்சனங்கள் எல்லாம்” என்று கூறினார்.

“ஐயா பெரியாரின் சில கோட்பாடுகளை நாங்கள் ஏற்கிறோம். பல இடங்களில் நாங்கள் மாறுபடுகிறோம். ஒரு இடத்தில் தமிழின் மீது பற்று கொண்டவனுக்கு நான் அடிமையாக இருப்பேன் என்கிறார். மற்றொரு இடத்தில் தமிழை சனியன் என்றும், காட்டுமிராண்டி மொழி என்றும் கூறுகிறார். அதை காட்டுமிராண்டிகள் வாழ்ந்த காலத்திலே பேசப்பட்ட மொழி என்று குறிப்பிடுவதாக திராவிடவாதிகள் புது விளக்கம் கொடுக்கின்றார்கள். அப்படியென்றால் ஐயா பெரியார் அவர்களே அவ்வாறு கூறியிருக்கலாமே. திருக்குறளை ஒருமுறை மலத்துடன் ஒப்பிடுகிறார், வேறு இடத்தில் பெருமையாகப் பேசுகிறார். அதனால் தமிழ் மீது அவருக்கு மாறுபட்ட கருத்துகள் உள்ளது. அந்த இடங்களில் நாங்கள் ஐயா பெரியாருடன் முரண்படுகிறோம். ஐயா பெரியாரின் பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு போன்ற கோட்பாடுகளை நாங்கள் ஏற்கிறோம். இந்த சமூகத்தில் உள்ள சீர்கேடுகளுக்கு எதிராக ஐயா பெரியாரும் போராடினார் என்பதை நாங்கள் எதிர்க்கவில்லை, ஏற்கிறோம். ஆனால் பெரியார் மட்டும் தான் போராடினார் என்ற திராவிடவாதிகளின் கருத்தை நாங்கள் ஏற்கவில்லை, எதிர்க்கின்றோம்” என்று விளக்கினார்.

“ஐயா பெரியார் அவர்களுக்கே எங்கள் தாத்தா அயோத்திதாசப் பண்டிதர் தான் வழிகாட்டியாக இருந்துள்ளார். கம்யூனிச சிந்தாந்தத்தை எங்கள் தாத்தா சிங்காரவேலரிடம் இருந்து தான் கற்றுக்கொண்டதாக அவரே கூறுகிறார். அப்போது அவருக்கும் முன்னோடியாக எங்கள் பாட்டனார்கள் உள்ளனர் என்பதை மறுக்க முடியாது. ஆனால் எங்கள் தமிழ் முன்னோர்களின் அடையாளங்களை முற்றுமுழுதாக அழித்துவிட்டு, பெரியார் மட்டும் தான் சமூக சீர்திருத்தவாதி என்று கொண்டு போகும் போக்கைத் தான் நாங்கள் எதிர்க்கின்றோம். ஐயா பெரியாரைப் போற்றுவதற்கு எண்ணற்ற இயக்கங்கள் உள்ளது. வசதியான பல கட்சிகளும் உள்ளது. ஆனால், எங்கள் முன்னவர்களின் ஈகங்களைப் பற்றி பேச, அவர்களின் தியாகங்களைக் கொண்டாடத் தான் ஆளில்லை. அந்த வேலையைத் தான் இந்தத் தலைமுறை தமிழ்ப்பிள்ளைகள் நாங்கள் செய்து வருகிறோம்” என்று கூறினார்.

முந்தைய செய்திதமிழ் மரபுத் திருவிழா 2023 – மரபு நெல் கண்காட்சி, பொங்கல் படையல் மற்றும் மாபெரும் ஊர்ச்சந்தை
அடுத்த செய்திஅறிவிப்பு: டிச.26 புதுச்சேரியில் விருட்சம் மருத்துவமனை திறப்பு விழா மற்றும் மாற்று கட்சியினர் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா