பெருந்தமிழர் கக்கன் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு

124

23-12-2022 | பெருந்தமிழர் கக்கன் நினைவுநாள் – சீமான் செய்தியாளர் சந்திப்பு

பெருந்தமிழர் கக்கன் அவர்களினுடைய 41ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி 24-12-2022 அன்று, நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வின் நிறைவாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான் அவர்கள் கூறியதாவது, “பெருமைமிகு அடையாளங்களில், மதிப்புமிக்க ஆளுமைகளில் ஒருவராக வாழ்ந்து மறைந்திருக்கிற எங்களுடைய தாத்தா கக்கன் அவர்கள், பொதுவாழ்வில் உண்மை, நேர்மை, எளிமை, தூய்மை என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் வாழ்ந்து காட்டிய ஒரு மகத்தான மாமனிதர். ஊழல், இலஞ்சம் அண்ட முடியாத பெருநெருப்பாக வாழ்ந்தப் பெருந்தகை. காவல்துறை அமைச்சராக இருக்கிறபோது அரசுப் பேருந்தில் பயணம் செய்த எளிமையானப் பெருமகன். இன்றைய அரசியல்வாதிகளிடம் இருப்பதைப் போல ஆடம்பரம், ஊழல், இலஞ்சம், சுரண்டல் என்று எந்தத் தீயக் குணங்களும் தன்னை நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்ட ஒரு நெருப்பு மனிதர். அவருடைய நினைவைப் போற்றி பேசுவதன் மூலமாக, நம் இன முன்னோர்களில் இப்படி ஒருவர் வாழ்ந்தார் என்று வருங்காலத் தலைமுறைப் பிள்ளைகளுக்குத் தெரிய வேண்டும். அதை தெரியப்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவருடையக் கடமை. பெருந்தலைவர் காமராசருக்கு இத்தனைப் பெருமைகள் இருக்கிறது என்றால், அதற்கு கக்கனைப் போன்ற பெருந்தகைளும் பெரும் காரணம். அவருடைய அமைச்சரவையில் இருந்த எல்லோரும் நேர்மையாளர்களாக இருந்ததால் தான் பெருந்தலைவரின் நேர்மை போற்றப்படுகிறது. அதை யாரும் மறுக்க முடியாது. அப்படி நேர்மையின் நேர்வடிவமாக வாழ்ந்த எங்களுடைய போற்றுதற்குரிய தாத்தா கக்கன் அவர்களுடைய வாழ்க்கை, வரலாறு, வழித்தடம் ஆகியவை எங்களைப் போன்ற பிள்ளைகளுக்கு ஒரு பெரிய படிப்பினை. அதனால், நாம் தமிழர் பிள்ளைகள் பெருமிதத்தோடு அந்தப் பெருந்தகைக்கு எங்களுடையப் புகழ் வணக்கத்தைச் செலுத்துவதில் பெருமை அடைகிறோம். அவர் வழியில் பயணித்து, அவரைப் போலவே உண்மையும், நேர்மையும், எளிமையும். தூய்மையுமாக இருந்து அரசியலில் பணியாற்றுவோம் என்கிற உறுதியை ஏற்கிறோம். அதுவே அவருக்கு நாங்கள் செலுத்துகிற உண்மையான புகழ் வணக்கமாக இருக்க முடியும்” என்று தெரிவித்தார்.

தொடரும் காவல்துறை விசாரணை மரணங்கள்

பின்னதாக செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சீமான், “திமுகவின் இந்த ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் இதுவரை பல காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளது. இவர்களே எதிர்க்கட்சியாக இருக்கும்போது சாத்தான்குளத்தில் நடந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் மரணத்திற்குப் போராடினார்கள். ‘நீட்’ தேர்வினால் ஏற்படும் மரணங்களுக்கும் அவ்வாறே போராடினார்கள். ஆளும் கட்சியாக ஆனபிறகு இவர்களின் நிலைப்பாடு வேறு வகையாக மாறிவிட்டது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. தற்போது அலைபேசியை ஒருவர் திருடினார் என்பதற்காக தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு காவல்துறை நெருக்கடி கொடுத்துள்ளது. அதனால் ஏற்பட்ட மரணம் என்பது மிகவும் வருந்ததக்கது. அதற்கு என்னுடைய வன்மையானக் கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்” என்றார்.

காப்புக் காடுகளுக்கு ஆபத்து

“தமிழகத்தில் காப்புக்காடுகளைச் சுற்றி கனிம வளங்கள் எடுக்க, ஒரு கிலோமீட்டர் சுற்றளவு வரை தற்போது தமிழக அரசு அனுமதித்துள்ளது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதை நாங்கள் எதிர்க்கின்றோம். அதற்காக அறிக்கைக் கொடுத்துள்ளோம், விரைவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஐயா அன்புமணி மற்றும் பல சூழலியல் ஆர்வலர்கள் அதை எதிர்த்துக் கண்டித்துள்ளனர். திமுகவே சில மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சூழல் அணி என்றொரு அமைப்பை உருவாக்கியது. ஆனாலும் இவர்கள் சுற்றுச்சூழலுக்கு எதிராகத் தான் வேலை செய்கிறார்கள். ஏற்கனவே மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ‘நியூட்ரினோ ஆய்வு’ என்பதே பேராபத்து விளைவிக்கக்கூடியது. தற்போது இந்தக் காப்புக்காடுகளைச் சுற்றி கனிம வளங்களை எடுப்பது என்பது அனுமதிக்கவே முடியாத ஒன்று, அதை நாங்கள் எப்படியேனும் போராடி நிறுத்துவோம்” என்று குறிப்பிட்டார்.

கூட்டுறவு சங்க மசோதா

“தமிழக மக்கள் நலன் சார்ந்த எந்த செயல்பாடுகளிலும் ஆளுநரின் பங்களிப்பு என்பது இல்லை. இத்தனைக் கோடி மக்களால் நிறுவப்பட்ட ஒரு அரசு எடுக்கும் முடிவை, கையெழுத்திடாமல் காலதாமதப்படுத்தி, அரசுக்கு இடையூறாக இருப்பது முற்றிலும் தவறு. ஏற்கனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய ஆவணத்தையும் கையெழுத்திடாமல் கிடப்பில் போட்டுவிட்டார் ஆளுநர். தற்போது இந்த கூட்டுறவு சங்க மசோதாவையும் முன்னகர விடாமல் தாமதப் படுத்துகிறார். மக்கள் நலன் சார்ந்த எது ஒன்றையும் ஏற்கமாட்டார் என்றால் பிறகு அந்த ஆளுநர் பதவி எதற்கு?” என்று கேள்வி எழுப்பினார்.

நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் 

“இங்கு தமிழ் பெயரளவில் தான் திட்டத்தில் சேர்க்கப்படுகிறது. ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ என்று திட்டம் வெளியாகிறது. ஏன் அது ‘நம்ம பள்ளி கட்டமைப்பு’ என்று இல்லை? கடற்கரையில் ‘நம்ம’ என்று தமிழிலும், ‘சென்னை’ என்று ஆங்கிலத்திலும் இருக்கிறது. ‘நம்ம சதுரங்கம்’ என்று இல்லாது ‘நம்ம செஸ்’ என்று தான் இருக்கிறது. பெயருக்கு ‘நம்ம; என்ற சொல்லை போட்டுக்கொள்கிறார்கள். மொழிக் கலப்பை அரசே ஊக்குவிக்கிறது. ஒரு நாட்டின் வளத்தில், அறிவு வளம் என்பது மிக முதன்மையானது. அதை தரமாகக் கொடுக்க பணம் இல்லை என்கிறார்கள். செல்வந்தர்களை நிதி உதவு செய்யக் கேட்கின்றார்கள். ஆனால், 39 கோடிக்கு சமாதி கட்டுவதற்கும், 89 கோடியில் ‘பேனா’ சிலை வைக்கவும் பணம் எங்கிருந்து வருகிறது? இந்த ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ என்று திட்டத்தை ஏன் டிவிஎஸ் சீனிவாசனிடம் கொடுக்க வேண்டும்? ஏற்கனவே அவர் மீது அம்மையார் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கோவில் புனரமைப்புப் பணிகளில் முறைகேடு செய்ததாக புகார் உள்ளது. சிலைக் கடத்தல் வழக்கில் அவர் பெயர் உள்ளது. பிறகு அவரிடமே ஏன் இந்த பொறுப்பைக் கொடுக்க வேண்டும்? முதலில் அறிவு வளத்தை சரியாக மாணவர்களுக்குக் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் அரசு, எதற்காக இலவசங்களைக் கொடுக்கிறது? இந்த அணுகுமுறையே தவறானது” என்று கூறினார்.