குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி முதுகுளத்தூரில் மாபெரும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

129

17-12-2022 | எது உண்மையான சமூகநீதி? குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி முதுகுளத்தூரில் மாபெரும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

உண்மையான சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு, குடிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்திடக் கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 17-12-2022 அன்று மாலை 05 மணியளவில், இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில், மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தின் நிறைவாக சீமான் அவர்கள் ஆற்றிய எழுச்சியுரையின் சுருக்கமான எழுத்தாக்கம் பின்வருமாறு,

“என்னுடைய உயிரோடு கலந்து வாழுகின்ற என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!

மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளையர்களோடு நடைபெற்ற போரில் கோட்டையை விட்டு வெளியேறிய பிறகு, “நீங்கள் பாதுகாப்பாகச் செல்லுங்கள், என்னைத் தாண்டித்தான் இந்த கோட்டையை வெள்ளைக்காரன் தொட முடியும்” என்று 8 நாட்கள் ஒற்றை மறவனாக நின்று போரிட்டவர் நம்முடைய பாட்டன் மாவீரன் சுந்தரலிங்கனார் என்பதை தமிழ் இளம் தலைமுறையினர் மறந்துவிடக்கூடாது. நம்முடைய தலைவரின் இயக்கத்தில், கரும்புலிப் படை என்ற தற்கொலைப் படை உருவாகுவதற்கு முன்னத்தி ஏரே நம்முடைய பாட்டனார் மாவீரன் சுந்தரலிங்க குடும்பனார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவரும் அவருடைய காதலி வடிவு அவர்களும், எதிரியின் ஆயுதக் கிடங்கை அழிப்பது என்று முடிவெடுத்து, உடலிலே நெருப்பைக் கொட்டிக் கொண்டு பாய்ந்தது, நம் இன வரலாற்றில் பெரும் புரட்சி என்பதை ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளையும் நினைவில் கொள்ள வேண்டும்.

“நாம் மலர் மாலைக்குக் கழுத்தை நீட்டுவது போல, மரண கயிற்றுக்குத் துணிந்து எவன் கழுத்தை நீட்டுகிறானோ, அவனே உண்மையான வீரன். நீ உண்மையைச் சொல், அதனை உரக்கச் சொல், அதை உறுதியாகச் சொல், அதையே இறுதிவரை சொல்” என்று கற்பித்த நம்முடைய தாத்தா தெய்வத்திருமகனார் முத்துராமலிங்கத்தேவர் உலவிய மண்ணில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். சாதி ஒழிப்பு ஒன்றே சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்டும் என்று போராடிய சமூகநீதிப் போராளி, நம்முடைய தாத்தா இம்மானுவேல் சேகரனார் உலவிய மண்ணில் நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம்.

நாம் தமிழ்ச் சமூகத்தின் ஓர்மைக்குப் பாடுபடுகிற பிள்ளைகள். இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கும் மலர் வணக்கம் செய்கின்றார், முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கும் மலர் வணக்கம் செய்கின்றார் என்று சிலர் என்னை விமர்சிக்கின்றார்கள். அதற்குக் காரணம், அவர்களால் செய்ய முடியாததை என்னால் செய்ய முடிகிறது என்பதனால் தான். ஏனென்றால், அந்த உரிமையும் தகுதியும் தமிழ்த்தேசிய இனப் பிள்ளைகளுக்கு மட்டுமே கிடைக்கப்பெற்றது. அதிலும், தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளுக்கு மட்டும் தான் உண்டு. தமிழர்கள் எப்போதும் இனப்பெருமை மட்டுமே பேசிக்கொண்டு இருப்பார்கள் என்று திராவிடர்கள் நம்மைத் தீண்டத்தகாதவர்கள் போலப் பார்ப்பார்கள். நாங்கள் இனப்பெருமை பேசுவது பீற்றிக்கொள்ள அல்ல, எங்களை நாங்களே தேற்றிக்கொள்ள என்பதை என் அன்புத்தம்பி-தங்கைகள் நன்கு புரிந்துக்கொள்ள வேண்டும்.

முதலில், எது உண்மையான சமூக நீதி? எதற்காக இடஒதுக்கீடு என்ற ஒரு கோட்பாடு கொண்டு வரப்பட்டது? ஏன் குடிவாரி கணக்கெடுப்பை நடத்தக்கோரி சீமானும், நாம் தமிழர் கட்சிப் பிள்ளைகளும் வலியுறுத்துகின்றார்கள்? என்ற கேள்வியை கற்றறிந்த பேராசிரியர் பெருமக்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், என் உடன்பிறந்தார்கள் உங்கள் முன்னே வைக்கின்றேன். உங்கள் வீட்டிற்கு 50 பேர் விருந்தினர்கள் வருகிறார்கள் என்றால், அவர்கள் 50 பேருக்குமான உணவை அளிப்பீர்களா? அல்லது 5 பேருக்கான உணவை கொடுத்து, சாப்பிடச் சொல்வீர்களா? இந்த கேள்வியைச் சிந்தித்துப் பாருங்கள். நாங்கள் முன்வைப்பது என்னவென்றால், 5 பேருக்கு 50 பேர் சாப்பிடும் உணவு தேவையில்லை. 50 பேருக்கு 5 பேர் சாப்பிடும் உணவைக் கொடுப்பது நியாயமில்லை. ஆகவே, 5 பேருக்கு 5 பேர் சாப்பிடும் சாப்பாட்டைக் கொடு, 50 பேருக்கு 50 பேர் சாப்பிடும் சாப்பாட்டைக் கொடு. விருந்தினர்களின் எண்ணிக்கைக்கேற்ப உணவு வழங்குவது போல, குடிகளின் எண்ணிக்கைக்கேற்ப கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரத்தில் இடஒதுக்கீடு வழங்குவதற்குப் பெயர் தான் உண்மையான சமூக நீதி.

இடஒதுக்கீட்டை எடுத்துக் கொடுக்காதீர்கள், குடிகளை எண்ணிக் கொடுங்கள். அள்ளிக் கொடுக்காதீர்கள், அளந்து கொடுங்கள். நாங்கள் கேட்பது இடஒதுக்கீடு அல்ல, இடப்பங்கீடு. ஒதுக்கீடு ஒதுக்கீடு என்று நாங்கள் ஓரத்திற்கே ஒதுக்கப்பட்டது போதும், இனி எங்களுக்குத் தேவை சரியான இடப்பகிர்வு தான். ஒரு நாட்டில், அந்த நாட்டின் குடிமக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம், அந்த நாட்டின் வளங்கள் எல்லாம் சமவிகிதத்தில், அந்த நாட்டு குடிகளின் எண்ணிக்கை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அது தான் சமூக நீதி. தமிழ்நாட்டில் அவ்வாறு உள்ளதா? குடிகளின் எண்ணிக்கைக்கேற்ப அதை அளந்து கொடுக்காமல் இருந்தால், அது அநீதி. அதில் எண்ணிக்கைக் குறைவாக இருப்பவன் அதிகமாக எடுத்துக் கொண்டால் அது ஆதிக்கம். அதுவே எண்ணிக்கையில் அதிகமாக இருப்பவன் குறைவாகப் பெற்றால் அது அடிமைத்தனம். இன்று நீங்கள் உங்கள் எண்ணிக்கையை விடக் குறைவாகப் பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றீர்கள். அப்படியென்றால், எத்தனை ஆண்டு காலமாக நீங்கள் அடிமையாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றீகள் என்பதை நீங்களே ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்.

இடஒதுக்கீட்டிற்கும், இடப்பங்கீட்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன என்று கேட்டால்? இடப்பங்கீடு என்பது முழுமையான மனிதன், இடஒதுக்கீடு என்பது உறுப்புகளைச் சிதையக் கொடுத்த மனிதன் என்று கருதினால், இடப்பங்கீட்டைப் பெற்று முழுமையான மனிதனாக வாழப்போகின்றோமா? அல்லது இடஒதுக்கீட்டைப் பெற்று உறுப்புகளைச் சிதையக் கொடுத்த மனிதனாக வாழப்போகின்றோமா? என்பது தான் உங்கள் முன்னே இருக்கின்ற வாய்ப்பு. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், பிற்படுத்தப்பட்ட மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பங்கேற்றுக்கொண்ட மாநாட்டில் பேசுகிறார், “இந்த நாட்டில் தாழ்த்தப்பட்டவனும், பிற்படுத்தப்பட்டவனும் தான் பெரும் எண்ணிக்கையில் இருக்கின்றான். இந்த நாட்டை ஆள்வதற்குத் தகுதி பெற்றவர்களும் பெருத்த எண்ணிக்கையில் வாழும் தாழ்த்தப்பட்ட பட்டியல் சமூக மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் தான். அவர்கள் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழும் உயர் சாதி முன்னேறிய வகுப்பினரே இந்த நாட்டை நீண்ட காலமாக ஆட்சி செய்தவர்கள். ஆனால், அந்தத் தகுதியை நாம் இழந்ததற்குக் காரணம் நம்மிடையே இருக்கும் ஒற்றுமையின்மை தான். தாழ்த்தப்பட்டவனுக்கு அருகில் சென்று ஒன்றாக இருந்தால் வலிமை பெறுவோம் என்று பிற்படுத்தப்பட்டவன் நின்றால், எங்கே தாழ்த்தப்பட்டவனுக்கு இணையாக பிற்படுத்தப்பட்டவனையும் தாழ்ந்தவனாகக் கருதி விடுவார்களோ என்ற உளவியல் அச்சம் தான் அதற்குக் காரணம்” என்கிறார். அதிலிருந்து நம்மைப் போன்ற பிள்ளைகளுக்கு அவர் கற்பிக்க விரும்புவது என்னவென்றால் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களை ஒன்றிணைத்து மாபெரும் அரசியல் ஆற்றலாக எழுந்தாகவேண்டும், அதைத் தவிர வேறு வழியில்லை என்பதேயாகும்.

வரலாற்றில் முதலில் தமிழர்களாகிய நாம் குறவர்கள் தான். அப்படிச் சொல்லிக்கொள்ள நாம் தயங்கவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், அது தான் உண்மையான நம்மின வரலாறு.
“பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் – கையகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!”
– என்று புறப்பொருள் வெண்பா மாலை பாடுகிறது. கல்லும், மண்ணும் தோன்றும் முன்னரே எப்படி தமிழன் தோன்றினான்? என்று கேள்வி கேட்பார்கள். கல் என்பது மலை, அங்கு குறிஞ்சி மலர் அதிகமாகக் காணப்பட்டதால் அது குறிஞ்சி திணை. மண் என்பது மூன்றாம் திணையான மருத நிலம். மனிதன் மருத நிலத்திற்கு நகரும் முன்பே குன்றில் தோன்றிவிட்டான் என்பது தான் அதற்குப் பொருள். குன்றில் வாழ்ந்ததால் ‘குன்றவன்’ என்று அழைக்கப்பட்டோம். உச்சரிப்பில் ‘ன்’ குன்றி ‘குறவன்’ என்று மருவிவிட்டோம். ‘குறவன்’ என்பவன் தான் தமிழனின் ஆதிக்குடி.

மலையில் விலங்குகளை வேட்டையாடி உண்ட தமிழன், அடுத்து நகர்ந்து வந்தது காடு. அங்கு முல்லை மலர் அதிகமாக இருந்ததால் அது முல்லைத் திணை. அதுவரை வேட்டையாடி உண்ட விலங்கை, ஏன் வளர்த்து சாப்பிடக் கூடாது என்று சிந்தித்தத் தமிழன், ஆடு மாடுகளை வளர்க்கத் தொடங்கினான். ஆடு, மாடு மேய்ப்பதனால் ‘ஆயர்’ என்று அழைக்கப்பட்டார்கள். கிறித்தவ தேவாலயங்களில் கூட ‘ஆயர்’, ‘மேய்ப்பர்’ என்று அழைக்கும் வழக்கம் உண்டு. அந்த ஆடு, மாடுகளை எண்ணுவதற்கு எண்களைக் கண்டுபிடித்தான் தமிழன். திருக்குறளில் நமது வள்ளுவப் பெருமகனார் கூட, ‘எழுத்தென்ப ஏனை எண்ணென்ப’ என்று எழுதவில்லை. ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப’ என்று தான் எழுதியுள்ளார். ஏனென்றால், எழுத்து வரும் முன்பே எண் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. அந்த இனக்கூட்டத்தின் தலைவன் கையில் ஒரு கோலை ஏந்தி நின்றதால் அவன் ‘கோன்’ என்று அழைக்கப்பட்டான். ‘கோன்’ என்றால் அரசன். அதனால், முல்லை நில மக்கள் ‘கோனார்’ என்று அழைக்கப்பட்டார்கள். ‘ஆயர்’, ’கோனார்’ என்பது தான் நம் குடிப்பெயர்.

“வரப்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயருவான்” என்று ஒளவை பெருமாட்டி பாடியுள்ளார். அந்த ‘கோனார்’ என்ற தங்களது குடிப்பெயரைக் குறிப்பிடுவதற்கு நம் மக்களுக்கு இழிவாக இருக்கிறது. ‘யாதவ்’ என்று குறிப்பிடுகிறார்கள். ‘யாதவ்’ என்பது எந்த மொழிச் சொல் என்பதாவது தெரியுமா? கேட்டால், யாதவா சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் ஆடு மாடு மேய்ப்பவர்கள் என்பதால் தங்களை அவ்வாறு பொதுவாக அழைத்துக் கொள்வதாகக் காரணம் கூறுகிறார்கள். அப்படியென்றால், ஏன் ‘கோனார்’ என்ற குடிப்பெயரை அனைவரும் பொதுவாக ஏற்றுக்கொள்ளக் கூடாது?

நீங்கள் ‘யாதவ்’ என்று குறிப்பிடும்போது அவர் தமிழரா? தெலுங்கரா? அல்லது வடமாநிலத்தவரா? என்று எப்படித் தெரியும். ‘கோனார்’ என்ற தமிழ்ச்சமூகத்திற்குக் கிடைக்கும் இடஒதுக்கீடு ‘யாதவ்’ என்று இருக்கும் பிற இனத்தின் மக்களுக்கும் சேர்த்துத் தான் கிடைக்கும். இதனால் தமிழ்நாட்டில் தமிழ் குடிகளுக்குத் தான் இழப்பு. சென்னை, தியாகராயநகரின் சட்டமன்ற உறுப்பினர் பெயர் சத்தியநாராயணன், அவர் ஒரு ‘தெலுங்கு யாதவ்’. ‘கோனார்’ என்றால் ஒரு தமிழருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். ‘யாதவ்’ என்று நீங்கள் இருப்பதனால் அந்த வாய்ப்பு பிற இனத்தவருக்குக் கிடைக்கிறது. இதனால் பறிக்கப்படுவது ஒரு தமிழ்க்குடியின் இடப்பங்கீடு தான் என்பதை என் அன்பு மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

‘யாதவ்’ என்ற குடிப்பெயரைத் தங்கள் பெயரோடு சேர்த்துக் கொள்ளும் வடமாநிலத்தவர்கள், ‘கோனார்’ என்ற குடிப்பெயரைச் சேர்த்துக் கொள்வார்களா? குறைந்தது மன்னர் அழகுமுத்துக்கோன் அவர்கள் நினைவு நாளில், அவர் படத்திற்கு ஒரு மலர் வணக்கம் செய்வார்களா? அப்படிச் செய்ய மாட்டார்கள். நான் இசுலாத்தை ஏற்றிருப்பதால், அரபு இசுலாமியனும், தமிழ் இசுலாமியனும் ஒன்றல்ல. அவர் அரேபியன், நான் தமிழன். அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் கூட ஆடு, மாடு மேய்க்கின்றார்கள். அவர்களும் யாதவர்களா? இல்லை!. அவர் அமெரிக்கன், அவர் ஆஸ்திரேலியன், நான் தமிழன். அதனால் நான் ‘கோனார்’. தமிழர்கள் தங்களை அரசன் என்ற பொருளைக் கொண்ட சொல்லான ‘கோனார்’ என்று குறிப்பிடாது, ‘யாதவ்’ என்று குறிப்பிடுவது ஒருவகையான உளவியல் தாழ்வு மனப்பான்மை. வருங்காலத் தமிழ் இளம் தலைமுறையினராவது இந்த உளவியல் தற்சோர்விலிருந்து தலைநிமிருங்கள். நாங்கள் இரண்டாவது பெருத்தத் தமிழ்க்குடி ‘கோனார்’ என்ற பெருமையும், திமிரும் கொள்ளுங்கள்.

பிறகு, முல்லைத் திணையான காடும், காடு சார்ந்த பகுதிகளில் இருந்து நகர்ந்து தமிழன் மருத நிலத்திற்குக் குடிபெயருகிறான். இந்தக் குடிப்பெயர்வுகள் எல்லாம் பல ஆண்டுக்கால நிகழ்வுகள். அங்கு நதிநீர் ஓடுவதால், அதில் குளிக்கக் கற்றுக்கொள்கிறோம், நாகரீகம் அடைகிறோம். அங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக நிலைத்து வாழத் தொடங்குகிறோம். அங்கே மருத மரம் அதிகம் இருந்ததனால் அந்தத் திணை மருதத் திணை என்று அழைக்கப்பட்டது. குறிஞ்சித் திணைக்கும் மருதத் திணைக்கும் இடையிலுள்ள முல்லைத் திணையில் வாழ்ந்ததால் அங்குள்ளவர்கள் ‘இடையர்கள்’ என்றும் அழைக்கப்பட்டார்கள். அது குடிப்பெயரல்ல காரணப்பெயர். ‘ஆயர்’, ’கோனார்’ என்பது தான் அவர்களின் குடிப்பெயர். அதுபோல, மருத நிலம் பள்ளமாக இருந்ததனால் தான் பள்ளத்தை நோக்கி நதிநீர் ஓடி வருகிறது. அதனால் அங்குள்ள மக்கள் ‘பள்ளர்கள்’ என்று அழைக்கப்பட்டோம். அதுவும் காரணப் பெயர் தானே தவிர, உணவை விளைய வைத்துச் சாப்பிடலாம் என்று அங்குள்ள மக்கள் சிந்தித்து வேளாண்மை தொழில் செய்ததால், அவர்களின் குடிப்பெயர் ‘வேளாளர்கள்’. இந்த நிலத்தில் தான் நாம் அரசாட்சி செய்கிறோம், கோவில்கள் கட்டுகிறோம், கலை இலக்கியப் பண்பாட்டை வளர்க்கிறோம், இசையை வளர்க்கிறோம், அங்கிருந்து தான் நாம் ‘பாண்டியர்கள்’ ஆகின்றோம்.

குறிஞ்சி நிலத்தின் தலைவன், குன்றில் ஏறி இறங்கி உடம்பெல்லாம் முறுக்கேறிப்போன அழகன், ‘முருகன்’ குறிஞ்சித் திணையின் இறைவன். முல்லை நிலத்தில் மேகம் கருகருவென்று கூடிவந்து மழையைப் பொழிந்துவிட்டு மறைந்து போவதனால், முல்லை நில இறைவனை ‘மாயோன்’ என்று வணங்குகிறோம். ‘மால்’ என்றால் கருப்பு. மழையைப் பொழியும் கார்மேகத்தை மரியாதையுடன் ‘திருமால்’, ‘பெருமாள்’ என்று அழைக்கின்றோம். மருத நிலத்தின் தலைவன், ‘வேந்தன்’. அவனே ‘இந்திரன்’ என்று அழைக்கப்பட்டான். தெய்வமான இந்திரனை ‘தேவஇந்திரன்’ என்று அழைத்தோம். அதனால் இந்நிலத்தின் குடிகள் ‘தேவர்’, ‘தேவேந்திரர்’ என்று அழைக்கப்பட்டோம். இரண்டு சமூகமும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தப் பிள்ளைகளே. திராவிடம் என்பது தமிழ் தேசிய இனத்தைப் பிளந்து, பிரித்து அதிகாரத்திற்கு வரும். தமிழ் தேசிய இன அரசியல் என்பது பிரிந்து இருக்கும் தமிழ்ச்சமூகத்தை ஒன்றிணைத்து வலிமைபெற்று அரசியல் அதிகாரத்திற்கு வரும். அது தான் பிரபாகரன் பிள்ளைகளின் குணம்.

2008 இன் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய ஒன்றிய அரசின் பணிகளிலே 17.5 விழுக்காடு (பிராமணர், நாயர், நம்பூதரி, தாகூர், அகர்வால், முகர்ஜீ, மற்றும் பல) உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த மக்கள் பெற்ற இடஒதுக்கீடு என்பது 77.2 விழுக்காடு. அவர்களின் மக்கள் தொகையைவிட அவர்கள் கூடுதலாக அனுபவிக்கும் இடஒதுக்கீடு என்பது 59.7 விழுக்காடு ஆகும். எண்ணிக்கையில் குறைவாக இருப்பவன் அதிகமாக அனுபவிப்பதற்குப் பெயர் தான் ஆதிக்கம். தாழ்த்தப்பட்ட பட்டியல் சமூக பழங்குடி மக்களின் எண்ணிக்கை 25.5 விழுக்காடு. ஆனால், அவர்கள் அனுபவிப்பது வெறும் 17.4 விழுக்காடு இடஒதுக்கீடு தான். அவர்கள் எண்ணிக்கையை விட 8.1 விழுக்காடு இடஒதுக்கீடு குறைவு. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 57 விழுக்காடு. ஆனால், நாம் அனுபவிக்கும் இடஒதுக்கீடு என்பது வெறும் 5.4 விழுக்காடு தான். 51.6 விழுக்காடு உரிமையை நாம் இழக்கின்றோம். எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் நாம் குறைவான வாய்ப்பைப் பெறுவதற்குப் பெயர் தான் அடிமைத்தனம். இப்போது இந்த பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்று வருகிறபோது, அவனுக்கு 59.7% லிருந்து 69.7% ற்கு இடஒதுக்கீடு உயரும், நமக்கு 51.6% இடஒதுக்கீடு 41.6% ஆக குறையும். இது தான் நாம் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை எதிர்ப்பதற்கு காரணம். இந்தக் கொடுமையிலிருந்து, பல ஆண்டுகளாக நாம் அடிமைப்பட்டிருக்கும் நிலையில் இருந்து விடுதலைப் பெற வேண்டும் என்பதனால் தான் குடிவாரி கணக்கெடுப்பை நடத்தி குடிகளின் எண்ணிக்கை அடிப்படையில் இடப்பங்கீடு கொடுக்க வலியுறுத்துகிறோம்.

சாதி ஒழிப்பு பேசும் சீமான் ஏன் குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோருகிறார் என்று கேட்கின்றார்கள். சாதி என்பது தமிழில்லை, தமிழனுக்கு சாதியில்லை என்கிறார் புரட்சிப் பாவலர் பாரதிதாசன். சாதி என்பது சமஸ்கிருத சொல். குடி என்பது தான் தமிழ்ச்சொல். அதனால், குடிவாரி கணக்கெடுப்பு என்று நாங்கள் கூறுகிறோம். குடிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் தான் சாதி வளரும் என்கிறார்கள். நாங்கள் குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோருவதே சாதி ஒழிப்பிற்குத் தான். ஒரு மருத்துவர் நோயாளியிடம், அவருக்கு உடம்பில் என்ன பிரச்சனை என்று கேட்பது நோயைக் குணப்படுத்தத் தானே தவிர, நோயை வளர்க்க அல்ல. நோயாளியின் உடலில் எங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கேட்டுத் தெரிந்துக் கொள்ளாமல் வைத்தியம் செய்தால் நோயாளி இறந்து போவார். அதுபோல நாங்கள் சாதி கேட்பது சாதியை ஒழிக்கத்தானே தவிர அதை வளர்க்க அல்ல.

நாங்கள் செய்வது சாதியவாதத்தை நவீனப்படுத்துவது என்றால், இத்தனை ஆண்டுகாலம் இவர்கள் தேர்தலில் சாதி பார்த்து இடம் கொடுத்ததற்குப் பெயர் என்ன? அது சாதியவாதத்தை ஊக்கப்படுத்துவது என்ற கணக்கில் வராதா? தெற்கே தேவேந்திரர்களுக்கும், வடக்கே ஆதித்தமிழ் குடிகளானப் பறையர்களுக்கு 26 பொதுத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த ஒரு அரசியல் கட்சி தமிழ் நாட்டில் உண்டா? சமூகநீதி பேசும் திராவிட முன்னேற்ற கழகம் இதுவரை ஒரு பொதுத் தொகுதியிலாவது தேவேந்திரரை, பறையரை வேட்பாளராக நிறுத்துயது உண்டா? பெரம்பலூர் பொதுத் தொகுதியாக அறிவிக்கப்பட்டதனால், தனித் தொகுதியான நீலகிரியில் தான் அண்ணன் ஆ.ராசா அவர்கள் போட்டியிட வைத்தார்கள். அம்மையார் ஜெயலலிதா ஒரு பிராமணப் பெண்ணாக இருந்தாலும், பட்டியல் சமூக வேட்பாளரான ஒருவரை திருச்சியில் நிறுத்திப் பாராளுமன்ற உறுப்பினராக வெல்ல வைத்தார்கள். ஆரிய பிராமணப் பெண்ணுக்கு இருந்த அந்தத் துணிவு திராவிடத் திருவாளர்கள் யாருக்காவது இருக்கிறதா? பிரபாகரனின் மகனுக்குத் தான் அந்தத் துணிவும், திமிரும் இருக்கும். பட்டியல் சமூகத்தைச் சார்ந்த என் தம்பி ஒருவரை பொதுத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி, இவனை தமிழன் என்று பார்த்து நீங்கள் வாக்குத் தாருங்கள், சாதி பார்த்தால் வாக்களிக்காதீர்கள், உங்கள் ஓட்டு எனக்குத் தீட்டு என்று ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நான் பேசியது இன்னும் இணையத்தில் இருக்கிறது.

இடஒதுக்கீடு திட்டத்தைக் கொண்டு வர ஐயா பெரியார் அவர்கள் வித்திட்டிருக்கலாம், ஆனால் இடஒதுக்கீட்டை தமிழின மக்களுக்குப் போராடிப் பெற்று தந்தப் பெருந்தகை நம்முடைய தாத்தா பெருமதிப்பிற்குரிய ஆனைமுத்து என்பதை தமிழ் இளம் தலைமுறையினர் மறந்துவிடக் கூடாது. இந்திய அரசியலைமைப்பு சட்டத்தில், 26-01-1950 இல் குடியரசு தினம் உருவான நாளிலிருந்தே பட்டியலின, பழங்குடி மற்றும் சில பிற்படுத்த வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு இருக்கிறது. அது 1943 ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்து இருக்கிறது. ஆனால், 1950 இல் இருந்து 1994 வரை, ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இந்திய ஒன்றிய அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு இல்லை. இருண்டுகிடந்த தமிழ்ச் சமூகத்திற்கு ஒளியூட்ட, 1978 இல் ஆனைமுத்து என்கிற நமது தாத்தன், தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு வடஇந்தியா முழுமைக்கும் பயணம் செய்து, பல்வேறு மாநிலத்தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று எல்லோரையும் சந்தித்து ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் பேசிப்பேசி ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்துகிறார். அந்த புரட்சியின் பெரும் வீச்சாக, 1979 இல் மண்டல் குழு அமைக்கப்படுகிறது. அவர் 1982 இல் இந்திய பாராளுமன்றத்தில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கின்றார். இந்திய நாட்டை ஆண்ட பிரதமர்களிலேயே ஒரு மகத்தான மனிதரான ஐயா வி.பி.சிங் அவர்கள் தான், அவரின் குறுகிய ஆட்சி காலமான 1989-90 இல், இதை சட்ட வரைவாகக் கொண்டுவந்தார். ஆனால், அது செயலாக்கம் பெறவில்லை. அதன் பிறகு 1994 இல் தான் அந்த வரைவானது செயலாக்கம் பெறுகிறது. அந்தப் புரட்சித் தீயை இந்திய ஒன்றிய பெருநிலமெங்கும் பற்ற வைத்த புரட்சியாளர் நம்முடைய தாத்தா ஆனைமுத்து என்பதை தமிழ்ச்சமூகம் மறந்துவிடக் கூடாது.

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், “நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கும் யாரும் அடிமையில்லை” என்கிறார். ஐயா பெரியார் அவர்கள், “நான் உயர்ந்த சாதி என்று கருதிக்கொள்ளும் பெருந்தகையீரே, உங்களுக்கும் கீழே எவனும் தாழ்ந்த சாதி என்று இல்லை என்ற நிலைப்பாட்டிற்கு நீங்கள் வந்துவிடுவீர்களேயானால், இந்தச் சமூகத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது” என்கிறார். நம் எல்லோருடையக் கனவும் ஒரு சமநிலைச் சமூகம் படைக்க வேண்டும் என்பது தான். இந்த இடஒதுக்கீட்டை மனித பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பாகுபாடு பாராமல் எண்ணிக் கொடுக்கும்போது தான், சரியான இடப்பங்கீடு செய்து ஒரு சமநிலைச் சமூகத்தைப் படைக்க முடியும். அதற்குப் பெயர் தான் உண்மையான சமூக நீதி.

பிற மாநிலங்களில், அந்த மாநிலத் தலைவர்களே தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைப் போட்டுக் கொள்வார்கள். ரெட்டி, ராவ், மேனன், நாயர், முகர்ஜீ, பானர்ஜி என்றெல்லாம் தாங்கி நிற்பார்கள், ஆனால் அவர்கள் தங்கள் சாதிக்கென்று ஒரு கட்சி வைத்து நடத்த மாட்டார்கள். இங்கு தமிழ்நாட்டில் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைப் போட மாட்டார்கள். ஆனால் தங்கள் சாதிக்கென்று ஒரு கட்சி இல்லாத சாதியே கிடையாது என்ற அளவில் இருக்கிறது. இது தமிழர்களை மிக நுட்பமாகப் பிரித்தாளும் ஆரிய திராவிடத்தின் சூழ்ச்சி. இன்று திராவிட முன்னேற்ற கழக அமைச்சரவையில் 9 பேர் தெலுங்கர்கள். அதற்குக் காரணம், நாங்கள் ஏமாளிகள் என்பதல்ல, தமிழர்கள் நாங்கள் பேரன்பிலும் பெருந்தன்மையிலும் பிழை செய்துவிட்டோம் என்பது தான்.

அருகிலுள்ள கேரளா மாநிலம், எண்ணியல் அளவு என்று 1000 சதுர கிலோமீட்டர் தமிழக நிலப்பரப்பைக் கேரள எல்லைக்குட்பட்டப் பகுதி என்று அறிவிக்கின்றான். இன்னும் 150 கிலோமீட்டருக்கு மேல் அளக்கவேண்டும் என்று கூறுகிறான். இதுவரை கண்ணகிக் கோவில் இருந்த இடம் தமிழர்களுடைய நிலமாக இருந்தது. இப்போது அது கேரள நிலம் என்கிறார்கள். அதைப் பற்றி இதுவரை இந்த அரசு எதுவும் பேசவில்லையே? நீங்கள் பேச மாட்டீர்கள், ஏனென்றால் நாடு உங்களுடையது இல்லை. அதனால் தமிழர் நிலம் பறிபோவதைப் பற்றி உங்களுக்கு அக்கறை இல்லை. எங்களுக்கு ஏன் இரத்தம் துடிக்கிறது என்றால், இது தான் எங்கள் தாய் நிலம். இந்த ஒரு நிலப்பரப்பை விட்டால் எங்களுக்கு வேறு இடமில்லை. இன்று வட இந்தியர்கள் ஒன்றரைக் கோடி பேர் தமிழ்நாட்டிற்குப் படை எடுத்துள்ளார்கள். அதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லாது நீங்கள் அவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கின்றீர்கள். நாளை ஆட்சியும் அதிகாரமும் அவர்கள் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டால், இந்தத் தாய் நிலத்திலிருந்து தமிழர்கள் நாங்கள் அடித்து விரட்டப்படுவோம். ஈழம் என்றொரு இடம் எங்களுக்கு இருந்தது. ஆனால் சிங்களவர்கள் அங்கிருந்து எங்களை அடித்து விரட்டினார்கள். ஏதிலிகளாக வந்து தஞ்சமடைய இங்கு ஒரு தாய் நிலம் இருந்தது. இங்கிருந்தும் நாங்கள் அடித்து விரட்டப்பட்டால், தமிழர்கள் நாங்கள் எங்கு செல்வது? ஈழத்தில் எம்மினச் சொந்தங்களுக்கு ஏற்பட்ட நிலை, தமிழ்நாட்டில் எங்களுக்கும் நடக்காது என்று என்ன நிச்சயம்? அதைப் பற்றி முதல்வருக்கு எதுவும் கவலை இருக்கிறதா? சமூகநீதியே பேசாத பீகாரில் குடிவாரி கணக்கெடுப்பு நடத்துகிறார் அம்மாநில முதல்வர். காரணம் அவர் அந்த மண்ணின் மகன், அந்த மண்ணிற்கு அவர் உண்மையாக இருக்கின்றார். இது பெரியார் மண், அண்ணா மண் என்று சமூக நீதி பேசும் பெருமக்கள் நீங்கள் இந்த குடிவாரி கணக்கெடுப்பை நடத்துவத்தில் என்ன சிக்கல்?

அரை நூற்றாண்டு காலமாகத் தமிழர்கள் எங்களை நீங்கள் ஏமாற்றியுள்ளீர்கள். ஒரு பக்கம் ஐயா எம்.ஜி.ஆர், மறுபக்கம் ஐயா கருணாநிதி, அம்மையார் ஜெயலலிதா என்று தமிழினத்தை ஆண்ட இவர்கள் எங்களுக்கு வஞ்சகம் தான் செய்தார்கள். நம் தலைவருக்கு ஈழ விடுதலைப் போராட்டத்தில் உறுதுணையாக இருந்ததைத் தவிர ஐயா எம்.ஜி.ஆர் அவர்கள் செய்தது அனைத்தும் பிழை தான். பள்ளிக் கல்லூரிகளில் பயிற்று மொழியாக இருந்த தமிழைப் பாட மொழியாக்கி, ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாக மாற்றியப் பெருந்தகையே ஐயா எம்.ஜி.ஆர் அவர்கள் தான். கல்வியும், மருத்துவமும் அரசிடம் பொதுவுடைமையாக இருந்தது. அதைத் தனியார் முதலாளிகளிடம் வர்த்தக மயமாக்கி, வியாபாரப் பண்டமாக மாற்றியப் பெருமகனும் அவர் தான். அவருடைய ஆட்சியில் சாராயம் விற்ற முதலாளிகள் எல்லோரும் இன்று கல்வித் தந்தைகள், தாளாளர்கள். பல கோடிக்கணக்கானச் சொத்துக்கு உரிமையாளர்கள். எல்லாவற்றையும் தனியார் மயமாக்கிவிட்டு, இறுதியில் தமிழரிடம் இருந்த முல்லை பெரியாறு அணைப் பாதுகாப்பு உரிமையை மலையாளிகளுக்குக் கொடுத்த மாமேதை ஐயா எம்.ஜி.ஆர் அவர்களே. அது அவருக்கு இருந்த தன் இனப்பற்றின் வெளிப்பாடு தான்.

நம் இனத்தின் வனக்காவலன், ஐயா வீரப்பனார் இருந்தவரை மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முன்வரவே இல்லை. தமிழர்களின் நயகராவாக இருந்த ஒகேனக்கல் விவகாரத்தைப் பேசித் தீர்த்துக்கொள்வோம் என்று பிரச்சனையே இல்லாதப் பகுதியைப் பிரச்சனைக்குரிய இடமாக மாற்றியப் பெருமகள் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தான். அது அவர்களுக்கு இருந்த தன் இனப்பற்றைக் காட்டுகிறது.

ஈழப்போர் முடிந்துவிட்டது என்று சிங்கள அரசு மே18, 2009 ல் அறிவித்துவிட்டது. நம் இனம் செத்து, இரத்த வாடை காற்றில் வீசிக்கொண்டு இருக்கிறது. கரும்புகை வானத்தைச் சூழ்ந்து காணப்படுகிறது. இனப்படுகொலையைச் சந்தித்த நம் இனம் உண்ணாமல், உறங்காமல், கண்ணீரோடும், கவலையோடும் நாதியற்று நின்று கொண்டு இருக்கிறது. அந்தத் துயரத்தைப் பகிரும் விதமாக ஒரு நாள் அரசு பொது விடுமுறைக் கூட அறிவிக்காதத் தலைவர் நம்முடைய ஐயா கலைஞர் கருணாநிதி அவர்கள் தான். ஆனால் ஆந்திராவில் இராஜசேகர ரெட்டி உலங்கூர்தி விபத்திலே இறந்துப் போனதற்கு ஒரு நாள் அரசு பொதுவிடுமுறை அறிவித்தார். எந்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி அதன் கொடியை இறக்கி, திமுகவின் கொடியை ஏற்றி பறக்கவிட்டார்களோ, அந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் மரணத்திற்கு விடுமுறை விட்டு, திமுக கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டார். அதற்குக் காரணம் அவருக்கு அவர் இனத்தின் மீது இருந்த இனப்பற்று தான். எவ்வளவு தூரம் வரலாற்றில் நாம் வஞ்சித்து வீழ்த்தப்பட்டிருக்கின்றோம் என்பதை எனது மக்கள் இனிமேலாவது புரிந்துணர வேண்டும்.

இங்கு இசுலாமியர்களுக்கு 3.5% இடஒதுக்கீடும், அருந்ததியர்களுக்கு 3% இடஒதுக்கீடும் கொடுக்கப்படுகிறது. முதலில் இசுலாமிய மக்களின் எண்ணிக்கையும், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் எண்ணிக்கையும் ஒன்றா? அதிலும் அருந்ததியர்களுக்குக் கொடுக்கப்படும் 3% இடஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்ட பட்டியல் சமூக மக்களின் இடஒதுக்கீட்டிலிருந்து கொடுக்கும் உள்இடஒதுக்கீடு. அதை ஏன் இவர்கள் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டிலிருந்து எடுத்துக் கொடுக்கவில்லை? ஏனென்றால், பட்டியல் சமூக மக்களின் உரிமைகள் பறிபோவதை எதிர்த்துக் கேள்விக் கேட்க இந்த நிலத்தில் ஒரு தலைவன் இல்லை. நாம் யாரின் இடஒதுக்கீட்டிற்கும் எதிரானவர்கள் அல்ல. விளிம்பு நிலை மக்களான அருந்ததியர்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. ஆனால், அது அந்தந்த சமூக மக்களின் எண்ணிக்கைக்கேற்ப கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.

இடஒதுக்கீடு வழங்கப்படுவது எதற்காக என்றால், நான் ஏழை என்பதற்காகப் பொது வீதியில் நடக்கக்கூடாது, பொதுக் குளத்தில் குளிக்கக் கூடாது என்று ஒடுக்கவில்லை. நான் தாழ்ந்த சாதி, என்னை பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு என்று என் மீது சாதிய இழிவைச் சுமத்தி, சமூகத்திலிருக்கும் வாய்ப்புகள் எனக்கு மறுக்கப்பட்டது. நான் ஏழை என்பதனால் இந்த சமூகத்தில் நிராகரிக்கப்படவில்லை, மாறாக தாழ்ந்த சாதி என்பதனால் நிராகரிக்கப்பட்டேன். இன்று ஏழையாக இருப்பவன் பத்தே ஆண்டுகளில் மிகப்பெரிய செல்வந்தராகிவிட முடியும். அதனால் பொருளாதாரம் என்பது அளவுகோல் அல்ல. உலகத்தில் முதல் பணக்காரனாக, உலகின் புகழ்பெற்ற மனிதராக நான் ஆனாலும், நான் தாழ்ந்த சாதி என்று என்மீது சுமத்தப்பட்ட அந்தச் சாதிய இழிவு இறுதிவரைப் போவதில்லை. அதனால், எந்தச் சாதியின் அடிப்படையில் ஒருவருக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் மறுக்கப்பட்டதோ, அதே சாதியை அளவுகோலாக வைத்து அவற்றைக் கிடைக்கப் பெற கொண்டுவரப்பட்ட சமூகநீதிக் கோட்பாடு தான் இடஒதுக்கீடு. நாங்கள் கேட்கும் இடஒதுக்கீடு சலுகை அல்ல, எங்களின் உரிமை.

ஆனால், பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்று வரும்போது தான், அதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. வகுப்பின் அடிப்படையில், சாதியை வைத்து ஒருவர் முன்னேறியவர் என்றால், பிறகு அவருக்கு எதற்கு இடஒதுக்கீடு? சாதி எப்படி ஒருவரை முன்னேற்றும்? ஒருவர் நல்ல கல்வியைப் பெற்று, வேலையைப் பெற்று, அதற்கேற்ப பொருளாதாரத்தைப் பெற்று வாழ்வில் மேம்படுவதற்குப் பெயர் தான் முன்னேற்றம். பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர் என்றால், அவரைப் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வைத்து இடஒதுக்கீடு வழங்குவது தான் சரியான சமூகநீதி. அவரை சாதியின் அடிப்படையில் முன்னேறிய வகுப்பிலே வைத்து இடஒதுக்கீடு வழங்கினால் அது உண்மையான சமூகநீதி அல்ல.

அதனால், குடிவாரி கணக்கெடுப்பை நடத்தும்போது அனைத்து சமூகங்களுக்கான இடப்பங்கீடு முழுமையாகக் கிடைத்துவிடும். சாதிச் சங்கங்களின் அவசியமே இல்லாமல் போய்விடும். அதுவே சாதி ஒழிப்பிற்கு உதவும். நமக்குரிய இடத்தை நாம் போராடித் தான் பெற்றாக வேண்டும். இல்லையென்றால் நாம் முற்றுமுழுதாக வஞ்சித்து வீழ்த்தப்படுவோம். ஒருவேளை நீங்கள் குடிவாரி கணக்கெடுப்பை எடுக்க தொடர்ந்து மறுப்பீர்களேயானால், நாங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றி அதை நடத்தியே தீருவோம். ஏனென்றால், நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். இங்கு வாழும் மக்களுக்கு மட்டுமல்லாது அனைத்து உயிர்களுக்குமான அரசியல் செய்ய வந்தவர்கள். “அதிகாரம் மிக வலிமையானது, அதை அடைந்துவிட்டால் அனைத்தும் எளிமையானது” என்ற அம்பேத்கர் அவர்களின் புரட்சி மொழிகளுக்கேற்ப உறுதியாக நாம் வெல்வோம், இதை உரக்க உலகிற்குச் சொல்வோம். புரட்சி எப்போதும் வெல்லும், நாளை நமது வெற்றி அதைச் சொல்லும். இலக்கு ஒன்றுதான், நம் இனத்தின் விடுதலை. இனம் ஒன்றாவோம், இலக்கை வென்றாவோம். நாம் தமிழர்!

 

முந்தைய செய்திகாப்புக் காடுகளைச் சுற்றி கல்குவாரி அமைக்க அளித்துள்ள அனுமதியை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஅறிவிப்பு: டிச.23., பெருந்தமிழர் கக்கன் 41ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – தலைமை அலுவலகம்