சுற்றறிக்கை: கட்சி சார்பாகப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் முன்னெடுப்பது தொடர்பாக

510

க.எண்: 2022120583
நாள்: 21.12.2022

சுற்றறிக்கை:

கட்சி சார்பாகப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் முன்னெடுப்பது தொடர்பாக

தமிழர் உரிமை பிரச்சினைகளுக்காகவும், மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்காகவும், இயற்கை வளக்கொள்ளைகளுக்கு எதிராகவும், மாநில தன்னுரிமைக்காகவும், அரசின் மக்கள்விரோதத் திட்டங்களுக்கு எதிராகவும், மண்ணை நஞ்சாக்கும் நாசகரத் திட்டங்களுக்கு எதிராகவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து இன்றைய அரசியல் பரப்பில் தமிழ்த் தேசிய இனத்தின் பாதுகாப்புப் பெரும்படையாக, இன மீட்சி உரிமைக் குரலாக, அனைத்து உயிர்களுக்குமான அரசியல் பேரரணாக நாம் தமிழர் கட்சி திகழ்கிறது.

இந்நிலையில், எவ்விதப் பின்புலமும் இல்லாத எளிய மனிதர்களால் கட்டப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிற நாம் தமிழர் கட்சி எனும் மக்கள் பாதுகாப்புப் பெரும்படையை வளர்த்து வலிமையடையச் செய்வதற்கு நாம் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மிகச்சிறந்த திட்டமிடலுடனும், மிக நேர்த்தியான ஒருங்கிணைப்புடனும், பெருந்திரளாகக்கூடி களப்பணியாற்ற வேண்டிய காலத்தேவை உருவாகியுள்ளது.

இதன்பொருட்டு, இனி சிறு மக்கள் பிரச்சினை என்றாலும் அப்பகுதியை உள்ளடக்கிய மண்டல/மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் / போராட்டம் / பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து ஒருங்கிணைந்த மாவட்ட / மண்டல அளவில் கலந்தாய்வு செய்து, அதன் தீர்மானத்தைத் தலைமை அலுவலகத்திற்கு உரிய முறையில் தெரியப்படுத்தி, அதன் மீதான தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் ஒப்புதல் பெற்று வெளியாகும் பொதுஅறிவிப்பின் பேரில் மட்டுமே இனி கட்சி / பாசறை சார்பாக ஆர்ப்பாட்டம் / போராட்டம் / பொதுக்கூட்டம் ஆகியவை பேரெழுச்சியாக முன்னெடுக்கப்படவேண்டும் என உறுதியாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே, கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப்பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் இச்செயற்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது பழனி திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (பாபநாசம் மற்றும் திருவையாறு தொகுதிகள்)