ஆரூர் தாஸ் அவர்களின் மறைவென்பது தமிழ்த்திரைத்துறைக்கே ஏற்பட்ட பேரிழப்பு – சீமான் அவர்களின் துயர் பகிர்வுச் செய்தி

52

பழம்பெரும் திரைப்பட வசன ஆசிரியர் ஐயா ஆரூர் தாஸ் அவர்கள் வயது மூப்பு காரணமாக மறைவெய்திய செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன்.

தமிழ்த்திரைக்கலையின் வெற்றிகரமான வசன ஆசிரியராக திகழ்ந்த ஐயா ஆரூர் தாஸ் அவர்கள், 1000 திரைப்படங்களுக்கு மேல் வசனம் எழுதிய பெருமைக்குரியவர்.
வசன ஆசிரியராக மட்டுமின்றி பாடல் ஆசிரியர், இயக்குநர், பின்னணி குரல் பேசுபவர் என்று பன்முக கலைஞராக விளங்கிய அவரது திரைப்பணி மிகுந்த போற்றுதலுக்குரியது.

பாசமலர், அன்னை இல்லம், படித்தால் மட்டும் போதுமா, பார்த்தால் பசி தீரும், தாய் சொல்லை தட்டாதே உள்ளிட்ட காலத்தால் அழியாத காவியங்களாக அவர் படைத்த வசனங்கள் என்றென்றும் நிலைத்து நின்று ஐயா அவர்களின் புகழை பறைசாற்றும்.

ஐயா ஆரூர் தாஸ் அவர்களின் மறைவென்பது தமிழ்த்திரைத்துறைக்கே ஏற்பட்ட ஈடுசெய்யவியலாத பேரிழப்பாகும்.

ஐயாவை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரை ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.